Published:Updated:

மீட்கப்பட்ட `கவை முக ஆந்தை...' சாலைக்கு வந்த கட்டுவிரியன் பாம்பு... ஒரு கள அனுபவம்!

கவை முக ஆந்தை
கவை முக ஆந்தை ( க.வி.நல்லசிவன் )

ஆந்தையை அடைத்து வைத்திருந்த கூடையைத் திறந்தபோது ஆச்சர்யம். ஆம், இதுவரை நான் பலமுறை தேடியும் பார்த்திராத `கவை முக ஆந்தை'யைக் கண்டு பரவசமடைந்தேன்.

புதன்கிழமை (27.5.2020) வழக்கமாக எனது அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது, காலை சுமார் 10 மணியளவில் சோளிபாளையத்தில் உள்ள என் நண்பர் ரமேஷ்குமார் என்பவர் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு அவருடைய தோட்டத்தில் ஆந்தைக் குஞ்சு ஒன்றைக் காகங்கள் விரட்டுவதாகக் கூறி என்ன செய்வது எனக் கேட்டார். நான் அந்த ஆந்தைக் குஞ்சைப் பிடித்து ஏதேனும் பெட்டியோ, கூடையோ இருந்தால் பத்திரமாக மூடி வையுங்கள்... நான் வந்து பெற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன். அடுத்து உடனடியாக அதை மீட்க வேண்டும் என நினைத்து எங்கள் இயக்கத்தில் இணைந்து பணிகளைச் செய்துவரும் சங்கரைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினேன். உடனே அவரும் எனது அலுவலகம் வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து சோளிபாளையம் பகுதியிலுள்ள அவரது தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மீட்கப்பட்ட கவை முக ஆந்தை
மீட்கப்பட்ட கவை முக ஆந்தை
க.வி.நல்லசிவன்

ஆந்தையை அடைத்து வைத்திருந்த கூடையைத் திறந்தபோது ஆச்சர்யம். ஆம், இதுவரை நான் பலமுறை தேடியும் பார்த்திராத `கவை முக ஆந்தை'யைக் கண்டு பரவசமடைந்தேன். பெரிய காயங்கள் எதுவுமில்லாமல், கொஞ்சம் சோர்வாக ஒரு பெட்டிக்குள் அமர்ந்துகொண்டு பெட்டியைத் திறந்தபோது எங்களை அண்ணாந்து பார்த்தது. ஓர் அழகிய சிறு பொம்மையைப் போன்று இருந்தது அதன் தோற்றம். பிறந்த குழந்தையைக் கையிலெடுப்பது போலத் துணிகளால் கையைச் சுற்றியவாறு அதைக் கைகளில் ஏந்திப் பலத்த காயங்கள் ஏதும் உள்ளனவா என்றும் மருத்துவ சிகிச்சைகள் ஏதாவது செய்ய வேண்டி வருமா எனவும் உற்று நோக்கினேன். அப்படியெதுவும் தேவைப்படாது என்பதை உறுதி செய்துகொண்டு, ரமேஷ் வீட்டில் தேனீர் கொடுத்து உபசரித்ததையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, ஒருவழியாக அட்டைப் பெட்டியில் ஆந்தையை அமர வைத்து எங்களது இடத்துக்கு எடுத்து வந்தோம்.

திருப்பூர் இயற்கை கழகத்தினரான நாங்கள் இதுவரை விபத்து போன்ற பல்வேறு நிகழ்வுகளில் சிக்கிய பறவைகளை மீட்டெடுத்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் முறையான சிகிச்சையளித்து பாதுகாத்து அதன் வாழிடங்களில் கொண்டு சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதால் இந்த ஆந்தையையும் எடுத்து வந்து கழகத் தலைவர் ரவீந்தரன் வீட்டில் உள்ள கூண்டில் பாதுகாப்பாக விட்டு வைத்தோம்.

அதன் வாழ்விடத்திலேயே மீண்டும் விட்டபோது...
அதன் வாழ்விடத்திலேயே மீண்டும் விட்டபோது...
க.வி.நல்லசிவன்

பறவை ஆய்வாளரிடம் கருத்துக்கேட்பு

இதுபோன்ற நிகழ்வுகளில் நாங்கள் எப்போதும் துறைசார்ந்து இயங்குபவர்களிமும் கருத்துக்கேட்டு அதன்படி மற்ற வேலைகளைத் தொடங்குவோம். இதற்கும் அப்படித்தான். திருப்பூரில் வசிக்கும் ப.ஜெகநாதன் பறவை ஆராய்சியாளரை தொடர்பு கொண்டபோது, அதற்கு உணவு எதுவும் கொடுக்க வேண்டாம் எனவும், எங்கு அதை மீட்டீர்களோ அதே இடத்தில் இன்றிரவு கொண்டு போய் விடச்சொன்னார். நாங்களும் அவ்வாறே முடிவு செய்து இரவு நேரத்துக்காகக் காத்திருந்தோம்.

இருள் கவியும் முன்பே மாலை நேரத்தில் தொடங்கிய கோடை மழை இரவு 7 மணிவரை நீடித்தது. அதன் பிறகு சுமார் 8 மணியளவில், நானும் தி.இ.க தலைவர் ரவீந்தரனும் கவை முக ஆந்தையை எடுத்துக்கொண்டு, அதன் வாழிடமான சோளிபாளையம் தோட்டப்பகுதிக்குச் சென்றோம்.

மழைக்கால இரவு என்பதால் சாலைகள் ஈரமாக இருந்தன. நகர்ப்புறம் முடிந்து அவர் தோட்டத்துக்குச் செல்லும் வழியில் ஈரம் படிந்த தார் சாலைகளில் வெள்ளெலிகள் (Indian Gerbille) இரைதேடி ஓடிக்கொண்டிருந்தன. உயிர்ச்சூழல் இன்னும் நன்றாக இருப்பதை ரசித்துக்கொண்டே தோட்டத்தைச் சென்றடைந்தோம்.

ரவீந்திரன், திருப்பூர் இயற்கை கழகம்
ரவீந்திரன், திருப்பூர் இயற்கை கழகம்

காட்டுக்குள் உள்ள புதர் மண்டிய வேப்பமரத்தில் ஆந்தையை விடுவதெனத் தீர்மானித்து கூண்டை வெளியில் எடுத்தோம். உடனடியாக ஆந்தை சுறுசுறுப்படைந்தது. இரவு நேரமும் இயற்கையாகக் கிடைத்த ஈரக்காற்றையும் உள்வாங்கி உணர்ந்தது போலிருந்தது அந்த நிகழ்வு. நாங்கள் மூவரும் மரத்துக்கு அருகில் சென்று ஆந்தையைக் கையில் எடுத்தவுடன் அது கையிலிருந்து தவ்வித் தரையில் குதித்துவிட்டது. மெதுவாக அதைப் பிடித்து வேப்பமரத்தின் கிளைகளில் அமர வைத்தோம். அமர வைத்தவுடன், இருளைக் கூர்ந்து நோக்கியும் மெல்லத் தலையை அசைத்தவாறு எங்களைத் திரும்ப ஒருமுறை பார்த்தது. பின்னர், கொஞ்சம் நகர்ந்து ஈரமான திரண்ட மரக்கிளையில் அமர்ந்துகொண்டது. அது தன்னுடைய இயல்பான செய்கைகளைச் செய்ததைப் பார்த்ததும், எங்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இந்த நிகழ்வைப் பதிவு செய்துவிட்டு நாங்களும் நிம்மதியாக வீடு திரும்பினோம்.

கட்டுவிரியன் பாம்பு

கவை முக ஆந்தையை அதன் வாழிடத்தில் விட்டுவிட்டுத் திரும்பியபோது தார் சாலையில் மிக அழகான கட்டுவிரியன் (Common Krait) பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்துப் பதிவு செய்தோம். எலிகள் அதிகமுள்ள பகுதியில் கொறி விலங்குகளை உணவாக உட்கொள்ளும் பாம்பைப் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. நீண்ட நாள்களாக கொரோனா வைரஸால் அடைபட்டுக் கிடந்த எங்களுக்கு, இந்த இரவு நிகழ்வுகள் இயற்கையோடு ஏற்படுத்திய தொடர்பை மறக்க முடியாத பரிசாகக் கருதி ரசித்தவாறு மகிழ்வோடு வீடு வந்து சேர்ந்தோம்.

கட்டுவிரியன் பாம்பு
கட்டுவிரியன் பாம்பு
க.வி.நல்லசிவன்

மறுநாள் (28.5.2020) காலை சோளிபாளையம் ரமேஷிடம் விசாரித்ததில், காலையில் எழுந்து ஆந்தையைத் தோட்டம் முழுதும் தேடிப்பார்த்ததில் எங்கும் தென்படவில்லை எனவும் அனேகமாக அதனுடைய வாழ்விடத்தில் பத்திரமாக இருக்கலாம் என்றும் உறுதியாகக் கூறினார். எங்களுக்கும் கவை முக ஆந்தையைக் காப்பாற்றிய நிம்மதி கிடைத்தது. நம்மைச் சுற்றி வாழும் உயிர்களோடு இயைந்து வாழ வேண்டும் என்பதையே இயற்கை நமக்கு கற்பிக்கின்றது. அந்தக் கற்பிதத்துக்கான ஓர் உதாரணமாக இந்த நிகழ்வு எங்கள் மனதில் பதிந்தது.

குறிப்பு: `கவை முக ஆந்தை' என்ற அழகான தமிழ்ப் பெயர் பறவை ஆய்வாளர் ப.ஜெகநாதன் அவர்களால் வைக்கப்பட்டது. கவை முக ஆந்தை ஆங்கிலத்தில்`Indian Scops Owl - Otus bakkamoena' என்றழைக்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு