Published:Updated:

“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை!” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்!

இந்திரகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திரகுமார்

நீர் மேலாண்மை

பெரும்பாலும் சாலையைவிட வீடு உயரமாக இருக்கும்படியும், வீட்டுக்கு முன்பு காலி இடம் இருக்கும்படியும்தான் வீட்டைக் கட்டுவோம். ஆனால், இதற்கு நேர்மாறாக வீட்டுக்குப் பின்புறம் காலி இடத்தையும், வீடானது சாலையிலிருந்து சற்றுப் பள்ளத்தில் இருக்குமாறும் வீட்டைக் கட்டியிருக்கிறார், சென்னை, பம்மல் பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார். மழைநீரைச் சேமிப்பதற்காகத்தான் இப்படிக் கட்டியிருப்பதாகச் சொல்கிறார், அவர். ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

“சென்னை மாநகரமே தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. ஆனால், என் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் வற்றவேயில்லை. எனக்குத் தண்ணீர் பிரச்னையே இல்லை” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார், இந்திரகுமார்.

மழைநீர்ச் சேமிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் முறைகள்...
மழைநீர்ச் சேமிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் முறைகள்...

“நான் 1986-ம் ஆண்டு இங்கே இடம் வாங்கி வீடு கட்டினேன். அப்போது இங்கு வீடுகள் மிகவும் குறைவு. எனக்கு இந்த இயற்கைச் சூழல் பிடித்திருந்ததால் இங்கு குடியேறினேன். நான் வீடு கட்டியபோதே கிணற்றையும் அமைத்துவிட்டேன். 1996-ம் ஆண்டுக்கு மேல், இங்கு வீடுகள் பெருக ஆரம்பித்தன. அதன்பிறகு, கிணற்றுத் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்தது. அதன்பிறகுதான், மழைநீரைக் கிணற்றில் சேகரிக்க ஆரம்பித்தேன். கிணற்றில் தண்ணீர் அதிகரித்ததோடு, தண்ணீரின் சுவையும் அதிகரித்தது. அப்போது என் பையன் படித்துக் கொண்டிருந்த பள்ளியின் தலைமையாசிரியர், இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டு… பள்ளிக்கு வந்து மழைநீர்ச் சேகரிப்புக் குறித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிலிருந்துதான் மற்றவர்களுக்கும் இந்த விஷயத்தைக் கொண்டுபோக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தொடர்ந்து, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு மூலமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பைச் செயல்படுத்தியிருக்கிறேன். கடந்த 2002-ம் ஆண்டில் கடும் வறட்சி வந்தபோதும் என் வீட்டில் தண்ணீர்ப் பிரச்னையே இல்லை. இப்போதும் தண்ணீர்ப் பிரச்னை இல்லை” என்ற இந்திரகுமார், மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பைக் காட்டியபடியே பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீட்டுத்தோட்டத்தில் இந்திரகுமார்...
வீட்டுத்தோட்டத்தில் இந்திரகுமார்...

“வீட்டின் முன் இரண்டு உறிஞ்சு குழிகளை அமைத்திருக்கிறேன். சாலைகளில் விழும் மழைநீர் இந்த உறிஞ்சு குழிகளுக்குள் செல்லும். உறிஞ்சு குழிகள் 2 அடி அகலம், 4 அடி ஆழம் கொண்டவை. கீழ்ப்பகுதியில் ஜல்லிக் கற்கள் மற்றும் மணலை நிரப்பியிருக்கிறேன். இப்படிச் செய்வதால் மழைநீர் சாக்கடையில் கலந்து வீணாவதில்லை. தண்ணீர் தேங்காமல் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாவதில்லை. வீட்டில் சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரையும் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீட்டின் செப்டிக் டேங்க்கில் கடந்த 2002-ம் ஆண்டில், ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ என்ற பாக்டீரியாவை விட்டேன். அந்தப் பாக்டீரியாக்கள் பெருகி தொட்டியில் இருக்கும் கழிவுகளைச் சாப்பிட்டு நீரைச் சுத்தமாக்கி விடுகின்றன. அந்த நீரை பம்ப் செய்து வீட்டுத்தோட்டத்துக்குப் பாய்ச்சுகிறேன். அந்த நீரில் யூரியா இருப்பதால் செடிகளுக்கு உரமாகவும் மாறி விடுகிறது. பாக்டீரியா விட்டால், ரசாயனங்கள் மூலம் கழிப்பறையைச் சுத்தம் செய்யக் கூடாது.

மாடித்தோட்டம்..., மழைநீர்ச் சேகரிக்கும் உறிஞ்சுக்குழி...
மாடித்தோட்டம்..., மழைநீர்ச் சேகரிக்கும் உறிஞ்சுக்குழி...

குளியலறைக் கழிவுநீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை, அலகேசியா ஆகிய செடிகளை வைத்திருக்கிறேன். அவை சோப்பு நீரைத் தூய தண்ணீராக மாற்றி விடுகின்றன. இதை ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில் மூலமாகத் தெரிந்துகொண்டேன். சமையலறைக் கழிவுநீரை நேரடியாகச் செடிகளுக்குப் பயன்படுத்துகிறேன். வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளைத் தனியாகக் கூடாரம் அமைத்து உரமாக மாற்றுகிறேன். இதில் மண்புழுக்களை விட்டால், மண்புழு உரமும் தயாராகிவிடுகிறது.

வீட்டின் முன் இரண்டு உறிஞ்சு குழிகளை அமைத்து இருக்கிறேன். கிணற்றுத் தண்ணீரில் 50 கிராம் தேற்றான்கொட்டை போட்டால் போதும். தண்ணீரைச் சுத்திகரித்துவிடும். என் வீட்டில் மட்கும் கழிவுகள் அனைத்தையும் உரமாக்கி விடுவேன்.

இந்த உரங்களை வீட்டுச் செடிகளுக்குப் பயன்படுத்துவதோடு, விற்பனையும் செய்து வருகிறேன். வீட்டில் சேரும் முட்டை ஓடு, மீன் கழிவுகள், நண்டு கழிவுகள் ஆகியவற்றையும் செடிகளுக்கு உரமாகக் கொடுத்துவிடுவேன். என் வீட்டில் மட்கும் கழிவுகள் அனைத்தையும் உரமாக்கி விடுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடியிலிருந்து வரும் மழைநீரை மாடியிலேயே சுத்தம் செய்து கிணற்றில் நேரடியாக விடுகிறேன். கிணற்றுத் தண்ணீரில் 50 கிராம் தேற்றான்கொட்டை போட்டால் போதும். தண்ணீர் சுத்தமாகிவிடும். அதைத்தான் என் வீட்டில் குடிக்கப் பயன்படுத்துகிறேன். வீட்டின் பின்புறமும் இரண்டு உறிஞ்சு குழிகளை அமைத்திருக்கிறேன். வீட்டின் பின்னால் விழும் மழைநீரையும், இந்தக் குழிகள் மூலமாகப் பூமிக்குள் அனுப்பி விடுகிறேன்

அதேபோல வீட்டுக்குப் பின்னால் அமைந்திருக்கும் இடத்தில், தென்னை மட்டைகளைப் புதைத்து வைத்திருக்கிறேன். அதன் மீது மண்ணைக் கொட்டி அப்பகுதியை ஸ்பாஞ்ச்போல வைத்திருக்கிறேன். அங்கே இரண்டு உடைந்த பானைகளைக் கொஞ்சம் இடைவெளிவிட்டு மண்ணுக்குள் புதைத்திருக்கிறேன். வறட்சிக் காலத்தில் மண்பானைகளில் நீரை விடும்போது அது மற்ற இடங்களுக்கும் எளிதாகப் பரவும். இதனால், வறட்சிக் காலத்தில் செடிகளையும் மரங்களையும் வாடாமல் பாதுகாக்கலாம்” என்ற இந்திரகுமார் நிறைவாக,

“மொட்டைமாடியில் 40 வகையான மூலிகைச் செடிகள் இருக்கின்றன. இவற்றில் அரிய வகை மூலிகைகள் அதிகமாக இருக்கின்றன. மாடியில் செடிகளை வளர்க்கும்போது, நல்ல காய்கறிகளும் மூலிகைகளும் கிடைக்கின்றன. என் வீட்டில் கைப்பிடிச் சுவரையே தொட்டியாக மாற்றி செடிகளை வைத்திருக்கிறேன். மூலிகைச் செடிகள்மீது மழைநீர் பட்டு சுத்தம் செய்து கிணற்றுக்குள் சேகரமாவதால், ஆரோக்கியமான தண்ணீர் கிடைக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் முற்றம் இருக்கும். அப்போது அறையின் வெப்பநிலை வெளியேறி வீடு குளுமையாக இருக்கும். இப்போது முற்றங்கள் கொண்ட வீட்டை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது.

அதனால்தான், முற்றம் போன்ற சிறிய அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறேன். இது வீட்டு அறையின் வெப்பநிலையை வெளியேற்றி சமநிலையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. என் வீட்டில் ஃபிரிட்ஜ் கிடையாது, எல்.இ.டி பல்புகளை மட்டும்தான் பயன்படுத்துகிறேன். இதனால், வீட்டில் மின்சார கட்டணமும் குறைகிறது. இப்படி வீட்டுக் கழிவுகளை உரமாக்குவதால், சூழலுக்கும் நன்மை செய்ய முடிகிறது. வீட்டின் செலவையும் மிச்சப்படுத்த முடிகிறது.” என்று சொல்லி விடைகொடுத்தார்..

தொடர்புக்கு இந்திரகுமார், செல்போன்: 99410 07057.

“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை!” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்!

இந்திரகுமார் நீர் மேலாண்மை பற்றி விளக்கும் காணொளியைப் பார்க்க இந்த QR Code-யை ஸ்கேன் செய்யவும்.