Published:Updated:

வன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..? ஓர் அலசல்!

Feeding Wild animals
Feeding Wild animals ( Pixabay )

`காடுகளையே நம்பி வாழும் விலங்குகளுக்கு, அங்கே பாதுகாப்பாக வாழச் சில உள்ளுணர்வுகளும் திறன்களும் முக்கியம். அவற்றை நம்முடைய உணவூட்டல் பழக்கம் மழுங்கடித்துவிடும்.’

சம்பவம் 1: மலைப்பாதையில் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர், கையில் ஒரு கூடையை வைத்துக்கொண்டு நீண்டநேரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன செய்கிறார் என்று புரியாமல் நானும் பார்த்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கடந்த பிறகு, நான்கைந்து குரங்குகள், இரண்டு குட்டிகளோடு அவரை நோக்கி வந்தன. அந்த மனிதர் அவற்றுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார். அவர் கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், பொறுமையிழந்து அவருடைய கூடையிலேயே கைவிட்டுச் சாப்பிடத் தொடங்கின. அவரும் வேறு வழியின்றிக் கூடையை அங்கேயே விட்டுவிட்டு, நகர்ந்து நின்று அவை சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருக்கத் தொடங்கினார்.

அவர் காத்திருந்த இடத்தில், அவருக்கு அருகிலேயே ஒரு விளம்பரப் பலகை இருந்தது. அதில், "விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்கள். அவற்றைப் பிச்சைக்காரர்களாக மாற்றாதீர்கள்" என்று எழுதியிருந்தது.

மனிதர்கள் கொடுத்த உணவுடன் இருக்கும் குரங்கு
மனிதர்கள் கொடுத்த உணவுடன் இருக்கும் குரங்கு
ப.ஜெகநாதன்

சம்பவம் 2: நகருக்கு நடுவே இருந்த சிறிய காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மான்களை நோக்கி அந்த மனிதர் செல்கிறார். சின்ன ஓசை கேட்டாலும்கூட எச்சரிக்கையடைந்து ஓடிவிடும் மான்கள் சிறிதும் அஞ்சாமல் அவரை நோக்கி வருகின்றன. தான் கொண்டு வந்திருந்த மூட்டையைப் பிரித்து அதிலிருந்த காய்கறிகளை அவற்றுக்குச் சாப்பிடக் கொடுக்கிறார். அவையும் வயிறு முட்டச் சாப்பிடுகின்றன. இது தினமும் தொடர்கின்றது. இப்போது தினமும், குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டால் அந்த மான்கள் அவரை எதிர்பார்த்து உணவுக்காகக் காத்திருக்கின்றன.

இரக்கம், மனிதர்களின் இயற்கையான குணாதிசயங்களில் ஒன்று. அந்த இரக்கமே, மனிதரல்லாத மற்ற உயிரினங்களுக்கு உணவு கொடுத்து உதவும் பழக்கத்தையும் தூண்டுகிறது. ஆனால், அது சரியா! இரக்கம் காட்டுவதன் மூலம், அவற்றின் வாழ்வியலை வளமையாக்குகிறோமா மேலும் ஆபத்தைத்தான் ஏற்படுத்துகிறோமா?

காட்டுயிர்களுக்கு உணவு கொடுத்தல்
காட்டுயிர்களுக்கு உணவு கொடுத்தல்
Pixabay

மலைப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக, `விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்கள்' என்ற வாசகத்தை வனத்துறை திரும்பும் இடமெல்லாம் வைத்திருக்கிறது. `ஏன் கொடுக்கக் கூடாது? அக்கறை இருப்பதால்தானே கொடுக்கிறேன்!' என்ற எண்ணம்தான் பலர் மனதிலும் எழும். இன்னும் பலர் அந்தப் பலகையையே கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர்.

மனிதர்கள் ஏன் விலங்குகளுக்கு உணவு கொடுக்கிறார்கள்?

அதற்குப் பல காரணங்கள் உண்டு. பூங்காக்களில், பொது இடங்களில், வீட்டுப் பின்புறங்களில் என்று பல்வேறு இடங்களில் விலங்குகளுக்கு மக்கள் உணவு கொடுக்கிறார்கள். நாம் உணவு கொடுக்கவில்லையென்றால் அவை மிகவும் கஷ்டப்படும் என்ற எண்ணம் பலர் மனதிலும் உண்டு. சிலர், காட்டுயிர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் தங்களை இயற்கையோடு நெருக்கமானவர்களாக உணருகிறார்கள். சிலர், காட்டுயிர்களுக்கு உதவ வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அதைச் செய்கிறார்கள். இன்னும் சிலர், காட்டுயிர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம், அவற்றிடம் நெருக்கமாவதன் மூலம் மற்றவர்களின் கவனத்தைத் தம்மீது ஈர்ப்பதை விரும்புகிறார்கள்.

குரங்கு
குரங்கு
Pixabay

முதலில், காட்டுயிர்கள் மற்றும் வளர்ப்பு உயிரினங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ப்பு உயிரினங்கள் முழுக்க மனிதர்களையே சார்ந்து வாழ்பவை. காட்டுயிர்கள் அப்படியல்ல. மனிதர்களிடமிருந்து பிரிந்து சுயமாக வாழ்பவை. அப்படிப்பட்ட வாழ்வியல் அமைப்பைக் கொண்டவற்றை நம் பக்கம் இழுப்பதால் அவை பல சிக்கல்களைச் சந்திக்கின்றன.

அந்தச் சிக்கல்களில் மிக முக்கியமானது, சார்பு நிலை. காட்டுயிர்களுக்கு, தொடர்ந்து மனித உணவைக் கொடுத்துக் கொண்டேயிருப்பதால் அவை உணவுக்காக நம்மையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். இயற்கையான உணவைச் சுயமாகத் தேடி உண்ணும் பழக்கமுடைய காட்டுயிர்கள், தம் இயல்பான வாழ்வியலிலிருந்து திரிந்து மனிதச் சார்பு வாழ்க்கைமுறைக்கு மாறுகின்றன. அது அவற்றுக்கு மட்டுமன்றி, மனிதர்களுக்கும் சிக்கலை உண்டாக்கும்.

மேலே குறிப்பிட்ட முதல் சம்பவத்தில், குரங்குகளுக்கு உணவு கொடுக்கச் சென்ற மனிதர் வேறு வழியின்றித் தன் கூடையையே குரங்குகளிடம் கொடுத்துவிட்டதைச் சொன்னேனல்லவா! அதைப் பார்ப்பவர்களுக்கு, குரங்குகள் அட்டூழியம் செய்வதாகவே தோன்றும். உண்மையில் அப்படியல்ல. அவரிடம் மேற்கொண்டு பேச்சு கொடுத்தபோது, அவர் அங்கு அடிக்கடி வந்து இப்படி உணவு கொடுப்பது தெரியவந்தது. அவர் மட்டுமன்றி, அந்தப் பகுதிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் இப்படி உணவு கொடுக்கிறார்கள்.

அமைதியாக மரங்களில் காய், கனிகளைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், சுவையூட்டப்பட்ட மனித உணவுப் பண்டங்களின் ருசியால் ஈர்க்கப்படுகின்றன. அந்த உணவைக் கைப்பற்றுவதற்காக அவற்றுக்குள்ளேயே சண்டை வருகிறது. கூட்டத்திலிருந்த அமைதியும் ஒற்றுமையும் சீர்குலைகிறது. அதோடு, அந்த உணவு இன்னும் வேண்டுமென்ற வேட்கை அவற்றுக்குள் உருவாவதால், அதைத் தேடி மனிதர்களை அணுகுகின்றன. அவர்கள் கொடுக்காத பட்சத்தில், பறிக்க முயல்கின்றன அல்லது அங்கு சுற்றியிருக்கும் வீடுகளில் புகுந்து அந்த உணவை எடுக்க முயல்கின்றன.

"பாலூட்டிகளுக்கு உணவு கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது. பறவைகளைப் பொறுத்தவரை, அது பறவை வகைகளைப் பொறுத்து மாறுபடும்.
ப.ஜெகநாதன், பறவை ஆய்வாளர்

நிலைமை கைமீறிப் போகும்போது, குரங்குகளின் அட்டூழியம் தாங்கவில்லை என்றுகூறி அவற்றை இடம் மாற்றுகிறோம், எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கக் கருத்தடை ஊசி போடுகிறோம். ஆரம்பத்தில் நாமே அவற்றை நம் உணவுக்குப் பழக்கப்படுத்திவிட்டு, பின்னர் அதனால் ஏற்படும் எதிர்வினைகளுக்கும் அவற்றையே குற்றவாளிகளாக்கி தண்டனையும் கொடுத்துவிடுகிறோம்.

இவை மட்டுமன்றி, மனித உணவு காட்டுயிர்களுக்கு அவ்வளவு உகந்ததல்ல. அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நாம் கொடுக்கும் துரித உணவுகள் வழங்காது. அதனால், பலவீனமான, நோய்த்தொற்றுகளுக்கு எளிமையாகப் பாதிக்கக்கூடியவையாக அவை மாறுகின்றன. இவைபோக, மனித உணவுகளுக்காகச் சாலைக்கு வரும் காட்டுயிர்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்துகளும் அதிகம்.

இரண்டாவது சம்பவத்தில், ஒருவர் மான்களுக்கு உணவூட்டுவதைப் பார்த்தோம். மான்கள், மிகவும் உணர்வுபூர்வமானவை. எந்நேரமும் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டிருக்கும். சிறிய ஓசை கேட்டாலும் சுதாரித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. அப்படியிருந்தாலன்றி, அவற்றால் வேட்டையிலிருந்து தப்பித்து உயிர் வாழ முடியாது. மனிதர்கள்மீது இயல்பாகவே இருக்கின்ற அச்ச உணர்வு விலகும்போது, அவை மனிதர்களை நெருங்கும்போது அந்தத் திறன்களை இழக்கின்றன. அதனால், வேட்டை போன்ற அபாயங்களிலிருந்து தப்புவது சிக்கலாகும். அதோடு மனிதர்களுடைய உணவு மான்களுக்கு உகந்தது கிடையாது. அவற்றைச் சாப்பிடுவதால், அவை பல நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகலாம்.

மான்களுக்கு உணவு கொடுப்பது தவறு
மான்களுக்கு உணவு கொடுப்பது தவறு
Pixabay

இவற்றையும் தாண்டி, மான்கள், குரங்குகள் போன்ற காட்டுயிர்களின் வாழ்வியலே சிதையலாம் என்கிறார் ஊர்வன ஆய்வாளர் ரமேஷ்வரன். அவரிடம் பேசியபோது, "மற்ற உயிரினங்களையும் தம்மைப்போலவே மனிதர்கள் கருதுவதுதான் இதற்குக் காரணம். நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இதைச் செய்கிறார்கள். நம்மைச் சுற்றியே பறவைகள், குரங்குகள் என்று பல காட்டுயிர்கள் வாழ்கின்றன. அவற்றுக்கெல்லாம், நாம் உணவு கொடுத்துதான் காப்பாற்ற வேண்டுமென்ற அவசியம் இங்கில்லை.

ஒட்டகச் சிவிங்கிகளுக்குக் கழுத்து முதலில் சிறியதாகத்தானிருந்தது. அவற்றுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படவே, அதைப் பூர்த்தி செய்துகொள்ளக் காலப்போக்கில் உயரமான மரங்களிலிருந்தும் சாப்பிடக்கூடிய வகையில் கழுத்து நீளமாகித் தகவமைத்துக்கொண்டன. பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், காட்டுயிர்கள் உயிர்த்திருக்கத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்கின்றன. நாம் உணவு கொடுத்துப் பழக்கினால், அவற்றின் சுயச் சார்பு, திறன் அனைத்துமே மழுங்கும். அது மிகவும் ஆபத்தானது. பறவைகளை, காட்டுயிர்களை, பாலூட்டிகளைப் பாருங்கள், ரசியுங்கள். அதிகபட்சம் அருந்த நீர் வையுங்கள். ஆனால், உணவு கொடுத்துப் பழக்காதீர்கள். அது நன்மையைவிடத் தீமையைத்தான் அவற்றுக்கு அதிகமாகச் செய்யும்" என்று கூறினார்.

ஒட்டகச் சிவிங்கி
ஒட்டகச் சிவிங்கி
Pixabay

காட்டுயிர்கள் மட்டுமன்றி பறவைகளுக்கும் இது பெரும்பாலும் பொருந்தும். எங்கேனும் பார்க்கும்போதோ, அவ்வப்போதோ பறவைகளுக்கு உணவூட்டுவது தவறில்லை. ஆனால், தினமும் உணவு கொடுத்து அவற்றை அந்த உணவுக்குப் பழக்கப்படுத்துவது பெரிய விளைவுகளைக் கொண்டுவரலாம். இது பறவைகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்குக் காகங்கள். காகம், பெரும்பாலும் மனிதர்களின் உணவைச் சார்ந்துதான் வாழ்கின்றன. இருந்தாலும், அவை மற்ற உணவுகளையும் தேடிச் செல்கின்றன. அதனால், அவற்றுக்குப் பெரிய பிரச்னைகள் ஏற்படவில்லை.

ஆனால், கிளி, புறா போன்றவை அப்படியல்ல. இவற்றுக்குத் தொடர்ச்சியாக உணவு கொடுத்துப் பழக்கி ஒரேயிடத்தில் இருக்க வைப்பதன் மூலம் அவற்றை ஓரிடத்தையே உணவுக்காக முழுதும் சார்ந்திருக்க வைக்கிறோம். பறவைகளின் எண்ணிக்கையிலும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் பறவைகளின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு புறாக்கள். புறாக்களுக்கு உணவு கொடுப்பதை, நம்மில் பலரும் ரசித்துச் செய்வோம். நகரங்களில் புறாக்களின் எண்ணிக்கை மற்ற பறவைகளைவிட அளவுக்கு அதிகமாக இருப்பதற்கு, மனிதர்கள் மூலம் அவற்றுக்கு எளிதில் உணவு கிடைப்பதும் ஒரு முக்கியக் காரணம்.

பறவைகளுக்கு உணவு கொடுத்தல்
பறவைகளுக்கு உணவு கொடுத்தல்
Pixabay

"எந்த விலங்காக இருந்தாலும், அவற்றின் இயல்பான வாழ்வியலைச் சீர்குலைக்காதவாறு, நமக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு உணவு கொடுத்தால் பிரச்னையில்லை. தொடர்ந்து கொடுக்கையில், அவை அந்த உணவையே தேடத் தொடங்கும். பின்னர், வீட்டுக்குள்ளும் தோட்டத்துக்குள்ளும் புகுந்து சாப்பிடத் தொடங்கும். அதற்குக் காரணம், நாம் பழக்கிவிட்ட உணவு முறைதான் என்பதை உணராமலே நாமும் அவற்றுக்குத் தண்டனை வழங்குவோம். மனிதர்களால் வளர்க்கப்படாத சுதந்திரமாகச் சுற்றித்திரியும் உயிரினங்களுக்கு உணவளித்தல் முறையன்று. சேவை மனப்பான்மையுடன், நல்லது செய்கிறோம் என நினைத்து உணவு வழங்குவது அவற்றிற்கு பெரும்பாலும் பாதகமாகவே முடியும்.

நாளடைவில் அந்த உயிரினங்களையே நாம் 'தொந்தரவு செய்யும் உயிரினங்களாக' கருதவும் வாய்ப்பு உண்டு. பாலூட்டிகளுக்கு உணவு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பறவைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், அது பறவை வகை, எந்த மாதிரியான உணவை அவற்றுக்குக் கொடுக்கிறோம், எதற்காகக் கொடுக்கிறோம் என்பதையெல்லாம் பொறுத்தது. காகத்துக்கு உணவு வைப்பதுபோல் எப்போதாவது உணவு கொடுப்பதால் பெரிதாகப் பாதிப்பு இருக்காது என்றாலும், தொடர்ந்து உணவு கொடுத்தால் அது அவற்றின் வாழ்வியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்கு நேரடியான ஒரே பதில் இல்லை என்றாலும், உணவு வழங்குவதால் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதைப் பற்றிய புரிதல் நம்மிடையே இல்லை. ஆகவே, உணவிடாமலேயே இருந்துவிடுவது நல்லது" என்கிறார் பறவைகள் ஆய்வாளர் ப.ஜெகநாதன்.

புறா
புறா
Pixabay

காட்டுயிர்கள், இயற்கையோடு இயைந்து அமைதியான ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நம் கனவுகளைப் பறவைகளோடு ஒப்பிடக் காரணமே, அவை எங்கும் சுதந்திரமாகப் பறந்து செல்வதால்தான், அதிகம் பயணிப்பதால்தான். அவை சுதந்திரமாகப் பறக்கட்டும். சுயமாக வாழட்டும். காடுகளையே நம்பி வாழும் விலங்குகளுக்கு, அங்கே பாதுகாப்பாக வாழச் சில உள்ளுணர்வுகளும் திறன்களும் முக்கியம். அவற்றை நம்முடைய உணவூட்டல் பழக்கம் மழுங்கடித்துவிடும்.

விலங்குகளின் திறன்களை மழுங்கடிக்கும், பறவைகளின் பயணங்களுக்குத் தடை விதிக்கும் உணவூட்டல் பழக்கம் வேண்டாமே.
திருப்பதி திருமலையில் இரவில் உலவும் வனவிலங்குகள்... அபூர்வ புகைப்படங்கள் வெளியீடு!
அடுத்த கட்டுரைக்கு