Published:Updated:

மக்களை மிரட்டிய குரோபர் யானை... கூண்டில் அடைத்த கும்கிகள்!

கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்டு முதுமலையில் விடுவிக்கப்பட்ட குரோபர் யானையைக் கர்நாடக மாநில வனத்துறையினர் பந்திப்பூர் பகுதியில் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

crowbar elephant
crowbar elephant

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கதிரேப்பள்ளி மற்றும் பேராண்டப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் குரோபர், மார்க் என்ற இரு காட்டு யானைகள், விவசாய நிலத்துக்குள் புகுந்து வந்தன. இந்த இரு யானைகளால் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த யானைகளைப் பிடிக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து வனத்துறையினரை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இரு யானைகளில் ஒன்றான குரோபர் யானை கடந்த ஆகஸ்ட் மாதம் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.

crowbar elephant
crowbar elephant

அந்த யானை ஊட்டி அருகில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானை ஒன்று சில நாள்களாக முதுமலையையொட்டியுள்ள பகுதியில் தென்பட்டது. பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட லிங்கவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. இரண்டு மாடுகளைத் தாக்கிக் கொன்றது.

crowbar elephant
crowbar elephant

அருகில் செல்ல முயன்ற இரண்டு பேரைத் தாக்கியது. தற்போது அவர்கள் மைசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று 4 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டு, கால்களில் கயிறு கட்டி சிமோகாவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

`ரேடியோ காலர் வேலை செய்யல; கைவிரித்த தமிழகம்!’ - கர்நாடகாவில் இருவரை தாக்கிய குரோபர் யானை

குரோபர் குறித்து பந்திப்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பேசும்போது, "இரண்டு வாரமாக இந்த யானை இந்தப் பகுதியில் உலவி வந்தது. 3 பேரைத் தாக்கியது. இரண்டுக்கு மாடுகளையும் தாக்கிக் கொன்றது. 50-க்கும் அதிகமான மக்களை விரட்டியது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். நேற்று பல மணி நேரம் போராடி யானையைப் பிடித்துச் சென்றனர்" என்றார்.

crowbar elephant
crowbar elephant

யானை பிடிக்கப்பட்டது குறித்து பந்திப்பூர் புலிகள் காப்பக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் இருந்து வெளியேறிய இந்த யானை, மக்களைத் தாக்கி வந்தது. நேற்று காலை லிங்கவாடி பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தோம். நான்கு கும்கிகள் மூலம் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி நீண்டநேரப் போராட்டத்துக்குப் பின், கால்களில் கயிறு பிணைக்கப்பட்டு லாரியில் ஏற்றினோம். பாதி மயக்கத்திலும் முரண்டு பிடித்தது. காட்டு யானைகளைப் பிடிப்பதில் கைதேர்ந்த கும்கிகள் பயன்படுத்தப்பட்டதால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர், சிமோகாவில் உள்ள வளர்ப்பு யானை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது" என்றார்.