Published:Updated:

கரூர்: மாட்டுசாணத்தில் பூந்தொட்டி! -பிளாஸ்டிக்குக்கு மாற்றாக அசத்தும் சிறுமிகள்

மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள்
மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள்

பிளாஸ்டிக் கவர்களில் மரக்கன்றுகளை வளர்த்து தருவார்கள். அதை நடப்போகும்போது, பிளாஸ்டிக்கை உருவி எடுத்துவிட்டு, மண்ணில் மரக்கன்றுகளை புதைப்பார்கள். நாங்க தயாரித்த இந்த மாட்டுசாண தொட்டிகளில் உள்ள மரக்கன்றுகளை அப்படியே பூமியில் நடலாம்.

"பிளாஸ்டிக் மனித இனத்திற்கு கேடு விளைவிக்ககூடியது. அதனால், அதற்கு மாற்றாக மாட்டுசாணத்தில் மரத்தொட்டி, பூந்தொட்டிகள் செய்றோம்" என்று உற்சாகமாக பேசுகிறார்கள், கிரண்ரூபாவும், மணிவாசகியும்.

மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள் தயாரிக்கும் கிரண்ரூபா, மணிவாசகி
மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள் தயாரிக்கும் கிரண்ரூபா, மணிவாசகி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, சொக்கலாபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தாம், கிரண்ரூபாவும், மணிவாசகியும். கிரண்ரூபா கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 - ம் வகுப்பு படிக்கிறார். மணிவாசகி, பள்ளபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார். இருவருக்கும் இயற்கையை காப்பதிலும், பிளாஸ்டிக்கை ஒழிப்பதிலும் ஆர்வம் அதிகம். கிரண்ரூபாவின் அண்ணன் தற்சார்பியல் வாழ்வியலுக்காக உணவுக்காட்டை அமைத்துள்ளார்.

கரூர்: `300 மரக்கன்றுகள்; 3,000 வாட் சூரிய மின்சாரம்' -அசத்தும் அரசுப் பள்ளி
மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள் தயாரிக்கும் கிரண்ரூபா, மணிவாசகி
மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள் தயாரிக்கும் கிரண்ரூபா, மணிவாசகி

அதில் கிரண்ரூபாவின் பங்கும் அதிகம். கிரண்ரூபா சி.பி.எஸ்.இ பள்ளியில் படிப்பதால், தினமும் ஆன்லைன் கிளாஸை அட்டென்ட் பண்ணவேண்டிய கட்டாயம். ஆனாலும், கிளாஸ் முடிந்ததும், கிடைக்கும் ஓய்வுநேரத்தில் கடந்த ஒருமாதகாலமாக, மணிவாசகியோடு சேர்ந்து, பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள், மரத்தொட்டிகள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதோடு, இதுவரை அவர்கள் ரூ. 1,000 வரைக்கும் அதை விற்பனை செய்தும் அசத்தியிருக்கிறார்கள்.

மாட்டுசாணத்தை குழைத்து, அதில் பூந்தொட்டிகளை செய்துகொண்டிருந்த இரண்டு சிறுமிகளையும் சந்தித்துப் பேசினோம்.

"இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவங்க. சிறுவயது முதல் இருவரும் ஒன்றாகவே இருப்போம். இருவருக்கும் எல்லா விசயத்திலும் ஒத்தசிந்தனை உண்டு. அப்படிதான், நாங்க படிக்கிற பள்ளிகளில் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி சொன்னதும், நாங்க 'பிளாஸ்டிக்கை இனி பயன்படுத்தகூடாது' என்று முடிவெடுத்தோம். கடந்த மூன்று வருடங்களாக பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட்டோம். அதேபோல், இயற்கையை கட்டமைக்கணும்னு நினைச்சு, எங்கப் பகுதியில் நிறைய மரக்கன்றுகளை நட்டு வைத்தோம். அதோடு, எங்க இருவருக்கும் சொந்தகார அண்ணன் கார்த்திக் இயற்கை உணவுக்காட்டை அமைத்தார்.

கிரண்ரூபா, மணிவாசகி
கிரண்ரூபா, மணிவாசகி

அதை அமைக்க நாங்க ரெண்டு பேரும் உதவினோம். இந்த நிலையில்தான், பூக்களை, மரங்கன்றுகளை, காய்கறிகளை வளர்க்க பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துறதை பார்த்தோம். அதற்கு மாற்றாக, இயற்கை முறையில் ஏதாவது செய்ய முடியுமானு நினைச்சோம். அப்போதுதான், மாட்டுசாணத்தில் பூந்தொட்டிகள், மரத்தொட்டிகள் அமைக்கலாம்னு நினைச்சோம். ஒரு மாதத்துக்கு முன்னாடி அதை முயன்றும் பார்த்தோம். மாட்டுசாணத்தில் மணல், செம்மண்ணைக் கலந்து, அதை பிசைந்து வைத்துக்கொள்வோம். அதை, நமக்கு தேவைபடும் அளவிலான மக்குகளை எடுத்து, அதன்மீது அழுத்தமான கவர்களை போர்த்தி, அதன்மீது சாணியை அள்ளி வைத்து, பூந்தொட்டிகளை உருவாக்கினோம்.

அதன்பிறகு, கவரை இழுத்தால், மக்கில் இருந்து பூந்தொட்டி தனியாக வந்துவிடும். கவரை தனியாக எடுத்துவிடவேண்டும். காயவைத்தால், தேவைபடும் பூந்தொட்டிகள் கிடைத்துவிடும். டம்ளர் சைஸில் இருந்து, தேவைப்படும் சைஸூகள் வரை இதை செய்யலாம். இதை, பூந்தொட்டிகள், மரக்கன்றுகளை வளர்க்க உதவும் தொட்டிகள், காய்கறிகளை வளர்க்கும் தொட்டிகளாகவும் பயன்படுத்தலாம். வழக்கமாக பிளாஸ்டிக் கவர்களில் மரக்கன்றுகளை வளர்த்து தருவார்கள். அதை நடப்போகும்போது, பிளாஸ்டிக்கை உருவி எடுத்துவிட்டு, மண்ணில் மரக்கன்றுகளை புதைப்பார்கள். ஆனால், நாங்க தயாரித்த இந்த மாட்டுசாண தொட்டிகளில் உள்ள மரக்கன்றுகளை அப்படியே பூமியில் நடலாம்.

கிரண்ரூபா, மணிவாசகி தயாரித்த பூந்தொட்டிகள்
கிரண்ரூபா, மணிவாசகி தயாரித்த பூந்தொட்டிகள்

இந்த தொட்டிகள் மரக்கன்றுகளுக்கு நல்ல உரமாகவும் திகழும். இதுவரை, 200 பூந்தொட்டிகள் வரை செய்திருக்கிறோம். இயற்கை மீது ஆர்வம்கொண்ட சிலர் எங்ககிட்ட இந்த பூந்தொட்டிகளை வாங்கினாங்க. இதுவரை, ரூ. 1,000 வரைக்கும் விற்பனை செய்திருக்கிறோம். வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் இதுபற்றி சொல்லியிருக்கிறோம். அவர்களும் மரக்கன்றுகளை உருவாக்க, எங்ககிட்ட இந்த இயற்கை மரத்தொட்டிகளை வாங்கிக்கிறதாக சொல்லியிருக்காங்க. அதனால், ஆர்வமா இதை தயாரிப்பதில் ஈடுப்பட்டுக்கிட்டு இருக்கிறோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு