Published:Updated:

ஸ்டாலின் பதவியேற்ற 5-வது நிமிடம்... செந்தில் பாலாஜி சொன்னது நடக்கக் கூடாது- பதறும் இயற்கை ஆர்வலர்கள்

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஸ்டாலின் பதவி ஏற்ற அடுத்த 5-வது நிமிடம் செந்தில் பாலாஜி கூறியது போல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளா அனுமதிக்கக் கூடாது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளரான செந்தில் பாலாஜி, தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற பிரசாரத்தில், `மணல் அள்ளுவது' குறித்து பேசி, சர்ச்சைக்கு வித்திட்டார். `தி.மு.க தலைவர் ஸ்டாலின் சி.எம் ஆக 11 மணிக்கு பதவியேற்கிறார் என்றால், 11.05 மணிக்கு மாட்டு வண்டி உரிமையாளர்கள், காவிரியில் மணல் அள்ளச் செல்லலாம்' என்பது தான் அந்தப் பேச்சு. செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சுக்கு, அரசியல் பிரமுகர்களும், சமூகவலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றிப் பெற்றிருக்கிறது. நாளை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், `செந்தில் பாலாஜி சொன்னது போல், கரூர் காவிரியில் மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான ராஜேஷ் கண்ணன்,

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

"நாளை புதிய ஆட்சி பதவியேற்க இருக்கிற நிலையில, செந்தில் பாலாஜி சொன்ன மாதிரி மணல் அள்ள ஆரம்பிச்சுடுவாங்களோன்னு ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கு. இன்னொரு பக்கம், `மணல் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகளை வேலையை விட்டு தூக்கி விடுவேன்' னு பேசிய, செந்தில் பாலாஜியின் பகிரங்க மிரட்டலினால், நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுவிடுமோன்னு சந்தேகம் ஏற்பட்டிருக்கு. அதனால், நாளைக்கு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க போகிற ஸ்டாலினுக்கு, சில வேண்டுகோள்களை நாங்கள் வைக்கிறோம். தி.மு.க-வின் செந்தில் பாலாஜிக்கும், அ.தி.மு.க-வின் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், மத்த விசயங்களில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் கொள்ளை அடிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்ததில்லை.

கரூர் மாவட்ட எம்.பி ஜோதிமணி மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு தடையாணை வாங்கி இருக்கிறார், ஆனால், அவரும் இப்போது மணல் கொள்ளையை உறுதியாக எதிர்க்கமாட்டார் என்று தெரிகிறது. கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் ஏற்கனவே 150 வருடங்கள் அள்ள வேண்டிய ஆற்று மணலை, சுமார் 30 அடி ஆழத்தில், கடந்த 28 ஆண்டுகளில் (1990 - 2017) அள்ளப்பட்டுவிட்டதால், காவிரி வெறும் எலும்புகூடாக இருக்கிறது. இதனால், காவிரியில் புதிய மணல் குவாரிகள் எதுவும் அமைக்கக் கூடாது.

 இராஜேஷ் கண்ணன்
இராஜேஷ் கண்ணன்
நா.ராஜமுருகன்

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கடந்த 2016, ஜூன் முதல் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களினால், காவிரி ஆற்றில் 2016 டிசம்பரில் கடம்பன்குறிச்சி, கோம்பு பாளையம், புகலூர் ஆகிய பகுதிகளில் அரசினால் செயல்படுத்திய மணல் குவாரிகள் இழுத்து மூடப்பட்டன. அதேபோல், கடந்த 2017 - ல் வாங்கல், மணத்தட்டை ஆகிய புதிய மணல் குவாரிகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. அதனால், இப்போது கரூர் மாவட்டம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் நீர் மேலாண்மையில் விருது பெறக் காரணமாகவும், கரூர் மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்னை எதுவும் இல்லாமல் இருப்பதற்கும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஒரு முக்கிய காரணம்.

`மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம்!' - செந்தில் பாலாஜி பேசியது சரியா... சூழலியல் ஆர்வலர்கள் சொல்வதென்ன?

அதேபோல், கடந்த 2017, மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவின் விளைவாக, தமிழக அரசு 6 மாதங்களில் (2017 டிசம்பருக்குள்) படிப்படியாக அனைத்து மணல் குவாரி களையும் மூடும் என அறிவித்தது. அதேபோல், 2017, ஆகஸ்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மணல் அள்ளுவதில் உள்ள முறைகேட்டின் காரணமாக, காவிரி மற்றும் கொள்ளிடத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டது.

2017 செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு ஆய்வுக் குழுவை அனுப்பி கரூர் புகழூர் தொடங்கி கும்பகோணம் சுவாமிமலை வரை உள்ள அனைத்து மணல் குவாரிகளையும், எட்டு நாள் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கை தமிழகத்தை அதிர வைத்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் எதுவும் இனி இயங்கக் கூடாது எனவும் தடை விதித்தது. அதன்பின்பு, கரூர் மாவட்டத்தில் எந்த புதிய மணல் குவாரிகளுக்கும் இதுவரை அரசு சார்பில் அனுமதி எதுவும் கொடுக்கப்படவில்லை. இன்று வரை காவிரி ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் விளைவாக, காவிரி ஆறானது 'ஆறு' என்ற அதன் இயல்பை இழந்துள்ளது. ஆற்றில் நீர்த்தாவரங்கள் எதுவும் இல்லை. நுண்ணுயிர்கள் இல்லை, மீன்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இல்லை என்ற அவல நிலைக்கு காவிரி மாறியுள்ளது.

காவிரி ஆறுக்குள் சாலை
காவிரி ஆறுக்குள் சாலை
நா.ராஜமுருகன்

எனவே, காவிரி ஆறு தனது உயிர்த் தன்மையை மீண்டும் பெற்று, ஆறு என்ற இயல்பாக மாற குறைந்தபட்சம் 20 ஆண்டுகாலம் மணல் அள்ளாமல் இருக்க வேண்டும் என பல்வேறு சுற்றுச்சூழல், உயிரியல், நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்போது கொரோனா நோய் பரவி சுமார் 50 நாள்கள் வரை லாக்டவுனில் இருந்து வருகிறோம். 'இது போன்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ் நோய் பரவுவதற்கும், மேலும் கடந்த 20 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போய் புயல், வெள்ளம், வறட்சி எனப் பல்வேறு இயற்கை பேரிடர்கள் வர காரணமாக இருப்பவை இயற்கையை மனிதன் தனது பேராசைக்காக சுரண்டி சிதைத்ததே காரணம்' என சூழலியல் வல்லுனர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு எச்சரித்து வருகின்றனர்.

எனவே, இயற்கையை பாதுகாக்க, காவிரி ஆற்றில் மணல் அள்ள புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

'மணல் அள்ளவில்லை எனில் வீடு கட்ட என்ன செய்வது' என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களது மணல் தேவையை வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்து நிறைவு செய்து கொள்கின்றன. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யும் பொழுது, அது இங்கு அரசு மணல் குவாரி மூலம் கிடைக்கும் மணலை விட விலை குறைவாகவே இருந்தது. கடந்த காலங்களில் அ.தி.மு.க தலைமையிலான அரசு, தனது கட்சியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கொள்ளை அடிப்பதற்காகவே எம்-சாண்ட் உற்பத்தியை ஊக்குவித்து, வாய்ப்பிருந்தும் வெளிநாட்டு மணல் இறக்குமதியை திட்டமிட்டு தவிர்த்தார்கள்.

எனவே, காவிரியில் புதிய மணல் குவாரிகளை திறக்காமல், தமிழக அரசு தனது மணல் தேவையை நிறைவு செய்ய வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

காவிரியில் மணல் கொள்ளை (பழைய படம்)
காவிரியில் மணல் கொள்ளை (பழைய படம்)
நா.ராஜமுருகன்

எக்காரணம் கொண்டும், புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்து, இயற்கையை, சுற்றுச்சூழலை சீரழிக்க துணை போகக்கூடாது. கரூர் மாவட்டத்தில் மணல் குவாரி மூலம் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம். செந்தில் பாலாஜி சொன்னது போல், நாளை ஸ்டாலின் முதல்வராக பொறுபேற்றவுடன் மாட்டு வண்டிகளை மணல் அள்ள ஆற்றுக்குள் இறக்க அனுமதிக்க கூடாது. ஏனென்றால், இன்றைய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலின், கரூரில் கடந்த மாதம் 28-03-2021 - ல் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கரூரில் இனி மணல் கொள்ளை நடக்காது' என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனால், செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதியை மறந்து, தான் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான், காவிரியை முழுமையாக காப்பாற்ற முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு