Concerned Youth for People என்னும் சூழலியல் செயல்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராகுல் ஸ்ரீதரனை சென்னை, பெசன்ட் நகரில் சந்தித்தேன். இந்தக் குழு கடலோர வள மையத்தை (Coastal Resource Centre) சார்ந்த பூஜா, சரவணன் ஆகியோருடன் இணைந்து இரண்டு முக்கியமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஷெனாய் நகரிலுள்ள அவர்களின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். கடந்த ஓராண்டில் அவர்கள் நிகழ்த்திய செயல்பாடுகளை ஸ்ரீதரன் விவரித்தார்...
“பொன்னேரி வட்டத்தில் இயங்கிவரும் ‘கடல்சார் உள்கட்டுமான வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தவிருக்கிறது. இதற்கான, திருத்தப்பட்ட முழுத்திட்டம் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) நடத்துவது குறித்த விதிமுறைகளை பரிசீலித்துவருவதாக நாங்கள் அறிந்துகொண்ட பிறகு ஊர்ணாமேட்டில் ஒர் ஆய்வை நிகழ்த்தினோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொற்றலையாற்று (கொசஸ்தலை) கழிமுகத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஊர்ணாமேட்டில் வாழ்ந்துவரும் ஏறத்தாழ 2000 மக்களும் விளிம்புநிலையினர்; விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி உள்ளிட்ட நிலம் சார்ந்த தொழில்களை நம்பி வாழ்பவர்கள். விவசாயிகள் இங்குள்ள 70 ஏக்கர் புறம்போக்கு உள்ளிட்ட 1026 ஏக்கர் நிலத்தில் ஏரிப்பாசனத்தை நம்பி நன்செய் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள். கால்நடை வளர்ப்பவர்கள் ஆற்றைச் சார்ந்த 342 ஏக்கர் புறம்போக்கு நிலங்களைத் தங்கள் 2 ஆயிரம் ஆடுகள், 3 ஆயிரம் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். உள்நாட்டு மீனவர்கள் கொற்றலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய்க் கரைகளில் கோடைகாலத்தில் உப்பளங்களாயிருந்த ஏறத்தாழ 650 ஏக்கர் நிலங்களில் மீன் பிடித்துப் பிழைப்பை ஓட்டுகிறார்கள். இறால் தடவுதலும், நண்டு, சிப்பி, இரத்தப்புழு சேகரித்தலும் இவர்களின் தொழில்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவட சென்னை அனல்மின் நிலையத்துக்குச் சாம்பல் குளம் அமைப்பதற்காக 111 குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்த 156 ஏக்கர் பாசன நிலம் 1990 -ல் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரமாக நாட்கூலி 30 ரூபாய் அளவில் ஒப்பந்த உழைப்புப் பணி வழங்கப்பட்டதை அம்மக்கள் ஏற்கவில்லை; 23 வருடங்கள் இடையறாது போராடினார்கள்; நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். 2015இல் தமிழ்நடு மின்சார வரியம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்னும் முறையில் 89 பேரை நிரந்தர வேலையில் அமர்த்தியது; ஆனால் மற்ற குடும்பங்களின் வாழ்க்கைநிலை மாறவில்லை. 13 பேருக்கு, கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடாக இப்போதைய சந்தை மதிப்பில் பாதிதான் கொடுக்கப்பட்டது.
அனல்மின்நிலைய நிர்வாகம் 2014இல் சாம்பல் குளத்திற்கெனக் கையகப்படுத்திய நிலத்தின் ஒரு பகுதியில் நான்காம் கட்டக் கட்டுமானப் பணியைத் துவக்கியது. ஊர்ணாமேடு, செங்கனிமேடு மக்கள் இதை எதிர்த்துப் போராடினர் என்றாலும் மின்நிலையக் கட்டுமான வேலை சுணக்கமின்றித் தொடர்ந்தது. போராடிக் கொண்டிருந்த இரண்டு ஊர்களுக்கும் 350 வேலை வாய்ப்புகள் வழங்குவதாக உள்ளூர் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப் படவில்லை.

எண்ணூர் ஓடையின் கரையிலிருக்கும் பல அனல்மின் நிலையங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகளால் கொற்றலையாற்று நீரும் கிணற்றுநீரும் மஞ்சள்நிறமாய் மாறியுள்ளது. சென்னை எண்ணைச் சுத்திகரிப்பு ஆலையின் (நீரில்) உப்பகற்றும் ஆலை (desalination plant) வெளியேற்றும் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் ஊர்ணாமேடு பகுதிகளில் நிலத்தடிநீர் பயன்பாட்டுத் தரமற்றுப் போய்விட்டது. 2003 தொடங்கி அங்குள்ள மக்கள் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிறுவாக்கத்திலிருந்து குழாய் மூலம் வரவழைக்கப்படும் நன்னீரைப் பயன்படுத்துகின்றனர். அதுவும் சீராகக் கிடைக்காத நிலையில் வடசென்னை அனல்மின் நிலையத்தின் நான்காம் கட்டக் கட்டுமானத்துக்காக கொக்கமேடு, திருவெள்ளவாயலிலிருந்து டேங்கர் லாரிகளில் வரும் தண்ணீரை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
ஊர்ணாமேடு கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள மாமுனி ஏரி கொற்றலையாற்றைச் சார்ந்திருக்கும் ஏரிகளில் ஒன்று; 403 ஏக்கர் நீர்ப்பரப்பு கொண்டது. 956 ஏக்கர் பாசன நிலம் இந்த ஏரியின் ஐந்து மதகுகளிலிருந்து கிழக்கு நோக்கி வெளியேறும் கால்வாய்களை நம்பியிருந்தது. இந்த வாய்க்கால்களே ஊர்ணாமேட்டின் பல வயல் கிணறுகளை நிரப்பிக் கொண்டிருந்தன. ஊர்ணாமேட்டுக்குத் தெற்கிலும் கிழக்கிலும் துறைமுகங்களும் அவை சார்ந்த தொழிற்சாலைகளும் பெருகிவிட்டதன் விளைவாக, நிலத்தடிநீரின் அளவும் தரமும் தாழ்ந்துபோனது. பாசனத்துக்கும் வீட்டுப் பயன்பாட்டுக்கும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடசென்னை, வள்ளூர் மின்நிலையங்களும் அவற்றின் விரிவாக்கக் கட்டுமானங்களும் வெளியேற்றும் சாம்பல் மாசு மிக மோசமான பொருளாதார, சுகாதாரச் சிக்கல். பாசன நிலங்களிலும் தாவரங்களின் மீதும் ஓரங்குலப் படிவாகப் படிந்து சாகுபடியைப்யைப் பாதிக்கிறது. வீடுகளிலும் உலர்த்தும் ஆடைகளிலும் மக்களின் உடல்மீதும் படிந்து கொண்டிருக்கும் சாம்பல் தீவிர மூச்சுக்குழாய்ப் பிரச்சினைகளை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக ஊர்ணாமேட்டின் தெற்கேயுள்ள செப்பாக்கம் கிராமத்திலிருந்து 75% மக்கள் இடம்பெயர்ந்து போய் போய்விட்டனர்.
கொற்றலை ஆற்றின் கழிமுகத்திலும் எண்ணூர் ஓடையிலும் கலக்கும் சென்னை எண்ணைச் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகளால் இந்நீர்ப்பரப்புகளின் சூழலியல் கெட்டுப்போனது. சதுப்புநிலக் காடுகள், உமரி, பங்காரு கட்டை (உணவுத் தாவரங்கள்), ஃப்ளெமிங்கோ, பெலிகன், வண்ணநாரை, கொக்குகள், மீன்கள், சிப்பியினங்கள், இதர கடலுயிரினங்கள் அனைத்தும் பாதிப்புற்றுள்ளன. சூழலியல் சீர்கேட்டினால் தொழிலிழந்த ஊர்ணாமேடு, செங்கனிமேடு, ராஜன்தோப்பு, ஏப்ரகாம்புரம் கிராமங்களில் வாழும் நிலமற்ற மக்களும், அத்திப்பட்டு, காட்டூர் கிராமங்களின் ஏழை இருளர்களும் இரத்தப்புழு சேகரித்துப் பிழைப்பு நடத்த நேர்ந்தது. இறால் பண்ணைகள் இவற்றை இறால் வளர்ப்புக்காக வாங்குகின்றன. இரத்தப்புழு அறுவடை இந்நீர்ப்பரப்புகளின் உணவுச் சங்கிலியைப் பாதிக்கும் செயல்பாடாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திட்டமிடப்பட்டுள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், சித்தூர்- தச்சூர் ஆறுவழி அதிவிரைவுச் சாலையின் சுற்றுச் சூழல் தாக்கங்களை மக்கள் கரிசன இளைஞர் குழு ஆய்வு செய்துள்ளது; அந்த ஆய்வில் என்ன கண்டுபிடித்தது?
“அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக (பத்து மடங்கு) விரிவாக்கத் திட்டமும் அதிவிரைவுச் சாலை, இரயில் பாதை இணைப்புகளும் கொற்றலையாறு, அதனுடன் இணைந்த ஏரிகள் உள்ளிட்ட பொது நீர்ப்பரப்புகளுக்கும் நிலங்களுக்கும் உரிமை கோருகின்றன. இந்தப் பொதுச்சொத்து வளங்கள் பல நூற்றாண்டுகளாக ஊர்ணாமேடு, செங்கனிமேடு, ராஜன்தோப்பு, எப்ரகாம் புரம், களாஞ்சி, சிந்தாமணி, காட்டூர், கருங்காலி முதலிய கிராமத்து மக்கள் பாரம்பரிய உரிமைகொண்டிருக்கும் இடங்களாகும்.
‘பத்து மடங்கு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை’ ஒரு வளர்ச்சிப் பேரிடர் என்று சொல்ல வேண்டும். துறைமுகக் கட்டுமானம், மின் உற்பத்தி நிலையங்கள், கடல்நீரை உப்பகற்றும் நிலையங்கள், பெட்ரோலியம், வேதிப்பொருட்கள் கனிமங்களுக்கான சேமிப்புக் கிடங்குகள், உறைபாட நிலையங்கள் (freezer plants) அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் முதல் சிக்கல். கொற்றலையாற்றுக் கழிமுகம், எண்ணூர் ஓடை, உப்பளங்கள், சதுப்புநிலங்கள், பொதுநிலங்கள் இவைகளைத்தான் அதானி நிறுவனம் குறிவைக்கிறது. இயல்பில் இவையனைத்தும் தாழ்ந்த நிலப்பகுதிகள். இந்நிலப் பரப்புகள்தான் பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களைச் சமாளிக்கும் அரண்களாக இருந்துவந்துள்ளன. இந்நிறுவனம் கடல் பரப்பிலிருந்து எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ள 1800 ஏக்கர் ஒழிய, மேலே பட்டியலிட்ட நிலங்களைக் கட்டுமானங்களுக்காக நிரப்புவதும் மட்டத்தை உயர்த்துவதும் அந்தப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கும் பாசன நிலங்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

இரண்டாவது சிக்கல், நிலத்தடிநீர் இழப்பும் மாசுபாடுதலும் ஏற்படுகிறது. காட்டுப்பள்ளியின் இயற்கை அரண்களாக அமைந்துள்ள மணல்மேடுகள் தரைமட்டமாக்கப்படும். இந்த அழிவு நடவடிக்கைகளின் சங்கிலி விளைவுகளாக வேளாண் உற்பத்தி வீழ்ச்சி, மீன்வள வீழ்ச்சி, வாழ்வாதார வீழ்ச்சி, நன்னீர்ப்பஞ்சம், சுகாதாரச் சிக்கல்கள் உருவாகும். கடந்த கால அனுபவங்களைவைத்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் பல அண்டைக் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.
‘கொற்றலையாறு, பக்கிங்ஹாம் கால்வாயைக் கருங்காலிக் கழிமுகம், பழவேற்காடு ஏரியுடன் இணைக்கும் வட - தென் கால்வாயை அதானி துறைமுகத் திட்ட எல்லைக்கு வெளியே விட்டு வைத்திருப்பதால் மக்களுக்குப் பெரிதான நிவாரணம் ஏதுமில்லை’'என்ற ராகுல்:
“2015 சென்னை வெள்ளத்தின்போது நொடிக்கு ஒரு இலட்சம் கன அடி வெள்ளத்தைத் தாங்கிச் சென்ற பேராற்றின் விதி எழுதப்பட்டுவிட்டது. மேற்கிலிருந்து நீட்டிக்கப்படும் அதிவிரைவுச் சாலை மற்றும் இரயில்பாதை இணைப்பு மாமுனி ஏரி உள்ளிட்ட நன்னீர்ப்பரப்புகளை நெடுகப் பிளந்தவாறும் ஏரியிலிருந்து ஆற்றுக்குக் கிழக்காகப் பாயும் கால்வாய்களுக்குக் குறுக்காகவும் அமையவிருக்கிறது. இது பாரம்பரியமாக இந்நீர்ப்பரப்புகள் பெருவெள்ளத்தையும் பாசனத்தையும் கையாளும் திறனை மிக மோசமாகப் பாதிக்கும்” என்று ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார்.
அதானித் துறைமுகப் பெருந்திட்டம் மூலம் பாதிக்கப்பட போவது விவசாயிகள், உள்நாட்டு மீனவர்கள், கடலோர மீனவர்களுக்கு மட்டுமல்ல; சென்னையின் பேரிடர் மேலாண்மையும் தான்.