Published:Updated:

மீண்டும் உயிர்பெறும் பழைய முறைகள்! - கொச்சியில் இந்தியாவின் முதல் `நீர் மெட்ரோ'

படகுகள் மூலம் இயங்கும் இந்த நீர் மெட்ரோ 2020-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கொச்சி நீர் மெட்ரோ
கொச்சி நீர் மெட்ரோ

கொச்சியில், இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ செயல்படவிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிய நிலையில், படகுகள் மூலம் இயங்கும் இந்த நீர் மெட்ரோ 2020-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புது வகையான நீர் மெட்ரோ, கொச்சியில் இருக்கும் பத்து தீவுகளை 15 வழிகளில் இணைக்க இருக்கிறது. அதாவது மொத்தம் 78 கிலோமீட்டர் தூரத்தை இணைக்க உள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், 1 லட்சத்துக்கும் மேலான மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயில் சேவையின் feeder service-ஆக இருக்கும்.

Kochi Water Metro
Kochi Water Metro

இதுபோன்ற போக்குவரத்து வழிகளால் சுற்றுப்புற மாசு குறையும், சாலைகளில் வாகன நெரிசல் குறையும். மேலும் இந்தத் திட்டத்தினால், எரிபொருள் அதிகம் செலவாகாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் இதுபோன்ற நீர்வழிப் போக்குவரத்துகள்தான் வெம்பனாட் ஏரியில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் இந்தமுறையிலான பயணம் மிகவும் குறைந்துள்ளது. இந்த நீர் மெட்ரோ திட்டத்தின் மூலம் பழைய முறைகள் மீண்டும் உயிர் பெறவிருக்கிறது.

கொச்சி நீர் மெட்ரோ
கொச்சி நீர் மெட்ரோ

இத்திட்டத்தின்படி, மின்சாரம் மூலம் இயங்கும் 78 படகுகளும் 38 சாதாரண படகுகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான செலவாக 747.28 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் வெளிப்புற நிதியாக ஜெர்மன் ஃபண்டிங் ஏஜென்சி ஒன்று 579 கோடி ரூபாய் வழங்கவுள்ளது. கேரள அரசு தரப்பிலும் இதற்கு நிதி ஒதுக்கப்படும். இதுமட்டுமல்லாமல் 66 கோடி ரூபாய் வரை தனியார் நிதியாகவும் திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.