Published:Updated:

98 மூலிகைகள்... 50 விருதுகள்... அசத்தும் அரசுப் பள்ளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள்...
ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள்...

சுற்றுச்சூழல்

பிரீமியம் ஸ்டோரி

ரவேற்பு அறையில் வைக்கப்படும் ஃபவுண்டைன் போன்ற மெகா சைஸ் குளம். அதைச் சுற்றி தென்னை மரங்கள் உள்பட வேறுசில மரங்கள். உள்ளே நுழையும்போது ஒரு பசுமையான தோப்புக்குள் நுழைவது போன்ற பிரமை. ஆனால், அது ஒரு அரசு நடுநிலைப்பள்ளி வளாகம் என்பதுதான், ஆச்சர்யம்.

வகுப்பறையில் செப்புக்குடம்
வகுப்பறையில் செப்புக்குடம்

இவ்வளவு அழகான அந்த அரசுப் பள்ளி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த மா.ஆலம்பட்டியில் இருக்கிறது. பள்ளியின் சுற்றுச்சுவர்களில் எழுதப்பட்டிருக்கும், ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’, ‘பிளாஸ்டிக் தவிர்ப்போம்’, ‘கழிப்பறைகளைப் பயன் படுத்துவோம்’ என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அனைவரையும் கவனிக்க வைக்கிறது. பள்ளியில் உள்ள மரங்களிலெல்லாம் பலவகையான பறவைகள் அமர்ந்து விதவிதமான ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.

பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் ராவிடம் பேசினோம். “நான் இந்தப் பள்ளிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. நான் வந்த சமயத்தில், ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்களின் எண்ணிக்கை இருந்தது. இப்போது பல மடங்கு உயர்த்தியிருக்கிறோம். அதேபோலப் பள்ளியிலும் இந்தக் கிராமத்திலும் மரங்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தி யுள்ளோம். எங்களுடைய செயல்பாடுகளைக் கவனிக்கும் கிராமத்தினர், பல உதவிகளைச் செய்கின்றனர். ஆரம்பத்தில் மரக்கன்றுகள் வைத்துப் பாதுகாப்பதில் சிரமம் இருந்தது. இயற்கை குறித்த விழிப்புணர்வு கிடைத்த வுடன் கிராம மக்களே பாதுகாக்க ஆரம்பித்து விட்டனர்.

சமீபத்தில் 3003 பனை விதைகள் பதிக்க செய்ய இலக்கு நிர்ணயம் செய்து பனை விதைகளைச் சேகரித்தபோது, ஊர் மக்கள் நிறைய விதைகளைச் சேகரித்துக் கொடுத்தனர். ‘பசுமை பாரதம் இயக்கம்’ உள்ளிட்ட சில அமைப்புகளும் பனைவிதை பதிக்க உதவிகள் செய்தன. பனை விதையில் முதல் விதையைச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விதைத்தார். தொடர்ந்து கிராமத்தில் உள்ள ஊருணி உட்பட 4 கண்மாய்களின் கரைகளில் பனை விதைகளை விதைத்துள்ளோம். எங்கள் பள்ளியை ‘மூலிகைப் பள்ளி’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பள்ளி யிலேயே 98 வகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறோம். மாணவர்கள்தான் அவற்றைப் பராமரிக்கிறார்கள்.

மூலிகைச் செடிகளுடன் ஸ்ரீதர் ராவ்
மூலிகைச் செடிகளுடன் ஸ்ரீதர் ராவ்

இந்த மூலிகைகளின் அனைத்து நன்மை களும் எங்கள் மாணவர்களுக்குத் தெரியும். இந்த மூலிகைத் தோட்டத்தை ஆலம்பட்டி கிராம மக்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு செடிக்குமான தமிழ்ப்பெயர் மற்றும் தாவரவியல் பெயரையும் பலகையில் குறித்து வைத்துள்ளேன். மாணவர்களுக்குத் தேவையான சமயத்தில் மூலிகைகளைப் பறித்து வழங்கி வருகிறேன். அனைத்து வகுப்பறையிலும் ஒரு செப்புக் குடம் இருக்கும். அதில் தினமும் கொஞ்சம் துளசி இலைகளைப் பறித்துப் போட்டு விடுவோம். அந்த நீரைத்தான் மாணவர்களும் ஆசிரியர்களும் குடிக்கின்றனர். இதனால், காய்ச்சலோ சளியோ எங்கள் மாணவர்களை நெருங்காது.

ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள்...
ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள்...

எங்கள் பள்ளியில் ‘நம்பிக்கை அங்காடி’ ஒன்று உள்ளது. அதில் பென்சில், பேனா என்று மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்கள் இருக்கும். ஆனால், விற்பனை செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். மாணவர்களே பொருள்களை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தைப் போட்டு விடுவார்கள். பள்ளியில் சிறிய நூலகம், சிறிய அளவில் அறிவியல் ஆராய்ச்சி உபகரணங்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. பள்ளியைப் பாராட்டும் விதமாக 2017-18-ம் ஆண்டுக்கான புதுமைப்பள்ளி விருது கிடைத்தது.

அதே ஆண்டில் எங்கள் பள்ளி மாவட்ட, மாநில, தேசிய அளவுகளில் வழங்கப்படும் தூய்மைக்கான மூன்று விருதுகளையும் பெற்றது. தேசிய விருதான ‘ஸ்வச் வித்தியா’ விருதுக்காக, இந்திய அளவில் ஆறு லட்சத்து நாற்பத்தெட்டுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் 52 பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதில் ஆறு விருதுகள் தமிழகத்துக்குக் கிடைத்தன. அவற்றில் ஒரே நடுநிலைப்பள்ளி எங்கள் ஆலம்பட்டி அரசுப் பள்ளிதான். இப்படி ஐம்பதுக்கும் மேற்பட்ட பல விருதுகளை எங்கள் பள்ளி பெற்றுள்ளது” என்ற ஸ்ரீதர் ராவ் நிறைவாக,

“எங்கள் பள்ளியில் சிறு செடி முதல் பெரிய மரங்கள் வரை 300 தாவரங்கள் உள்ளன. நாங்களே இயற்கை உரம் தயார் செய்து செடிகொடிகளுக்கு இடுகிறோம். கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பே எங்கள் பள்ளியின் வெற்றிக்குக் காரணம்” என்றார்.

தொடர்புக்கு, ஸ்ரீதர் ராவ், செல்போன்: 94426 78857

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு