Published:Updated:

`புதிய படகு... லைஃப் ஜாக்கெட்..!’-நெகிழியால் நிரம்பிய குளத்தை மீட்கும் பழங்காநத்தம் பொதுமக்கள்

ராமர் குளம்
ராமர் குளம் ( n.g.mani )

குளத்தைக் காப்பாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் இணைந்து சிறிய படகை வாங்கி, சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில், கோதண்டராம சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள குளம், 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. இந்தக் குளத்திற்கு மாடக்குளம் கண்மாய் உள்ளிட்ட இடங்களிலிருந்து தண்ணீர் வந்தடைகிறது.

நேதாஜி குடியிருப்பு மக்கள்
நேதாஜி குடியிருப்பு மக்கள்

மேலும், மழைக் காலங்களில் இந்தக் குளத்தில் அதிக அளவு தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இதனால், பழங்காநத்தம் பகுதி மக்களுக்கு இந்தக் குளம் நிலத்தடி நீரை அள்ளித்தருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் சில சமூக விரோதச் செயலால் குளத்தில் குப்பைகள் நிறைந்து, துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

மேலும், குளத்தில் முழுமையாக ஆகாயத்தாமரை படர்ந்து, குளத்தின் சுற்றுச்சூழலை மாசடையச் செய்தது. இந்நிலையில், குளத்தை சுத்தம்செய்ய சிறிய படகு ஒன்றை விலைக்கு வாங்கி குளத்தை சுத்தம்செய்யத் தொடங்கியுள்ளனர் அப்பகுதி மக்கள்.

சுத்தம் செய்யும் முன் (கோப்புப் படம்)
சுத்தம் செய்யும் முன் (கோப்புப் படம்)

இதுகுறித்து ஜெயராஜ் என்பவர் கூறுகையில், "பழங்காநத்தம், மதுரையில் முக்கியமான பகுதிகளில் ஒன்று. இங்கு, பழைமையான மார்க்கெட், சாவடி, இயற்கை ஜிம், பேருந்து நிலையம் எனப் பல பாரம்பர்யமான இடங்கள் உள்ளன.

பழங்காநத்தம், நேதாஜி நகர் பகுயில் உள்ள ராமர் கோயில் குளம் புனித தீர்த்தமாக விளங்கியது. நெகிழி தலையெடுத்தாலும், சமூக விரோதச் செயலாலும் குளம் துர்நாற்றம் வீசியது. எங்களுக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் இந்தக் குளத்தின் நலன் முக்கியம் என்பதால், தூய்மைப்படுத்த இப்பகுதி வாழ் மக்கள் இணைந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள படக்கு ஒன்றை வாங்கி சுத்தம் செய்ய 2 நபர்கள் நியமித்துள்ளோம்.

படகில் தூய்மை செய்யும் பணி
படகில் தூய்மை செய்யும் பணி

அவர்களுக்கு, சுத்தம் செய்ய தலா 600 ரூபாய் சம்பளம் அளிக்கிறோம். அவர்களின் பாதுகாப்பு வசதிக்கு லைஃப் ஜாக்கெட்டும் வழங்கியுள்ளோம். இவர்களுடன் இணைந்து நேதாஜி நகர் குடியிருப்போர் சங்கம் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சுத்தம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளோம். இதனால், இந்தக் குளம் தூய்மையாக மாறும் என நம்புகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு