Published:Updated:

`8,000 விதைப்பந்தில் நூறுதான் மிச்சம்!’ - அசத்தும் ஒத்தக்கடை அரசுப் பள்ளி

விதைப் பந்து தயாரிப்பில் அசத்தி வருகிறது ஒத்தக்கடை அரசுப் பள்ளி.

விதைப் பந்து தயாரிக்கும் மாணவர்கள்
விதைப் பந்து தயாரிக்கும் மாணவர்கள்

ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில், நரசிங்கம் கோயில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஒத்தக்கடை அரசு துவக்கப் பள்ளி. ஒத்தக்கடை அல்வா, முறுக்கிற்கு அடுத்தபடியாக இந்த அரசு துவக்கப் பள்ளியும் பிரபலமானது. தனியார் பள்ளிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் மாணவர்கள் எண்ணிக்கை ஒத்தக்கடை அரசு துவக்கப் பள்ளியில் குறைந்திருக்கிறது. இதையடுத்து, ராஜவேல், தமிழரசன், பாண்டி, தென்னவன் உள்ளிட்ட பல தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கடுமையான உழைப்பால் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக தக்கவைத்தனர்.

விதைப் பந்து போட்டி
விதைப் பந்து போட்டி

இயற்கையைக் காப்பாற்றுவதிலும், பாரம்பர்யம், கதைகள், அறிவியல், டிஜிட்டல் என்று எல்லா செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது இந்தப் பள்ளி. தற்போதைய தலைமை ஆசிரியை எம்.ஜீவாவும் பள்ளி முன்னேற்றப் பணிகளை செய்துவருகிறார். இந்த நிலையில், ஒத்தக்கடை அரசுப் பள்ளியில் தானம் அறக்கட்டளையோடு ஹெச்.சி.எல் நிறுவனம் இணைந்து சமீபத்தில் விதைப் பந்துகள் உருவாக்கும் போட்டி நடத்தியது.

இதில் தயார் செய்த 8,000 விதைப் பந்துகளில் 100 விதைப் பந்துகளை மட்டும் வைத்துள்ளது. அனைத்து விதைப் பந்துகளையும் மாணவர்கள் பயனுள்ள வகையில் வீசியிருக்கிறார்கள். இது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர் மோசஸ் கூறுகையில்,``தனியார் அறக்கட்டளை உதவியில் 8,000 விதைப் பந்துகள் உருவாக்கும் வாய்ப்பு எங்கள் மாணவர்களுக்கு கிடைத்தது.

விதைப் பந்து குறித்து விழிப்புணர்வு
விதைப் பந்து குறித்து விழிப்புணர்வு

இதைத் தனியார் தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் ஊக்கப்படுத்தும் விதமாகப் போட்டிகள் நடத்தினர். மாணவர்களிடையே ஒவ்வொரு குழுவாகப் பிரித்து மெகா சைஸ் களிமண் உருண்டையும் விதைகளும் கொடுத்தோம். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் ஒரு சமூக ஆர்வலரும் உதவி செய்தனர். இதில் 8,000 விதைப் பந்துகள் உருவாக்க முடிந்தது. அதிக விதைப் பந்துகளை உருவாக்கிய குழுவுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

எங்கு விதைக்கணும்; அதன் நன்மைகள் என்ன? - விதைப்பந்து தாம்பூலம் வழங்கி அசத்திய மணமகள் வீட்டார்

கிடைத்த விதைப் பந்தை ஒத்தக்கடை மலையைச் சுற்றிய விவசாய நிலம் மற்றும் பட்டா நிலங்களைத் தவிர மற்ற இடங்களில் மாணவர்கள் பயனுள்ள வகையில் எறிந்தனர். அது போக தங்களது வீட்டு அருகே உள்ள இடங்களைத் தேர்வுசெய்து எறிந்துள்ளனர். இதனால் சுமார் 8,000 விதைப் பந்துகளில் 100 விதைப் பந்துகள் மட்டுமே உள்ளன. இதை ஒவ்வொரு பிறந்தநாள் காணும் மாணவனுக்கும் வழங்க உள்ளோம். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்வைத் தொடர்ந்து நல்ல மழை பெய்துவருகிறது. இதில் எல்லா விதைகளும் செடியாக உருவாகாவிட்டாலும் பாதி அளவில் வளர்ந்தால் நல்ல வெற்றியே' என்று மகிழ்ந்தார்.

விதைப் பந்து நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள்
விதைப் பந்து நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள்

``பிஞ்சுக் கைகளால் உருவாக்கப்பட்ட `ஆவி, மூங்கில், வாகை, சொர்க்கம், நெட்டிலிங்கம், மலைவேம்பு, மருது, களஞ்சியம், கடுக்காய், தேக்கு, அழிஞ்சி, நெல்லி’ உள்ளிட்ட  விதைப்பந்துகள். தற்போது பெய்துவரும்  மழைக்கு பிற்காலத்தில் மிகப்பெரும் மரங்களாக உருவெடுக்கும்’’ என விதைப் பந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.