Published:Updated:

காசிரங்கா தேசியப் பூங்காவில் சூழ்ந்த வெள்ளம் - விலங்குகள் தப்பிக்க உதவிய செயற்கைச் சமவெளி!

க.சுபகுணம்

வெள்ளம் ஏற்பட்டபோது, விலங்குகள் இந்தச் செயற்கைச் சமவெளிகளுக்கு வந்துவிட்டன. உயரமாக இருந்த இந்தப் பகுதிகளுக்கு வந்துவிட்டதால், காட்டுயிர்கள் இறப்பதும் பெருமளவில் குறைந்தது.

காசிரங்கா தேசியப் பூங்கா
காசிரங்கா தேசியப் பூங்கா

அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் வெள்ளப் பேரிடரால் பெரியளவில் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை 37 பேர் வெள்ளத்துக்குப் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலி, காண்டாமிருகங்கள் என்று பல்வேறு காட்டுயிர்களின் வாழ்விடமாகத் திகழும் காசிரங்கா தேசியப் பூங்கா முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு அங்கிருந்து வெளியேறும் காட்டுயிர்கள் ஊருக்குள் அடைக்கலம் தேடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பேரிடரிலிருந்து தப்பித்து மீட்புக் குழு வரும்வரை பிழைத்திருக்கக் காட்டுயிர்களுக்கு, அதிலும் மிக முக்கியமாகக் காண்டாமிருகங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது அங்கு உருவாக்கப்பட்ட செயற்கைச் சமவெளிக் காடுகள்தாம்.
காட்டெருமைகள்
காட்டெருமைகள்
Anuwar Hazarika

கடந்த 2017-ம் ஆண்டு கடல்மட்டத்திலிருந்து அந்தக் காடு இருக்கும் சராசரி உயரத்தைவிடச் சற்றுக் கூடுதல் உயரத்தில் அஸ்ஸாம் மாநில அரசு செயற்கையாகச் சமவெளிக்காடுகளை உருவாக்கியது.

வெள்ளம் ஏற்பட்டபோது, விலங்குகள் இந்தச் செயற்கைச் சமவெளிகளுக்கு வந்துவிட்டன. உயரமாக இருந்த இந்தப் பகுதிகளுக்கு வந்துவிட்டதால், காட்டுயிர்கள் இறப்பதும் பெருமளவில் குறைந்தது. 2017-ம் ஆண்டு இதுமாதிரியான 33 சமவெளிகளை அஸ்ஸாம் மாநிலம் உருவாக்கியது. கிட்டத்தட்ட 95 சதவிகிதம் காசிரங்கா தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இத்தகைய சூழலில் விலங்குகள் பிழைத்திருக்க இந்த மேட்டு நிலம் உதவியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவை இந்த நிலங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டதால், வருகின்ற மீட்புக்குழுவுக்கும் அவற்றை மீட்பது சுலபமாகிவிட்டது. இப்படிக் காடுகளுக்குள் செயற்கையாக உருவாக்குவது குறித்துப் பேசிய காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரும் சூழலியல் எழுத்தாளருமான ஏ.சண்முகானந்தம்,

``வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் என்பது தொடர்ச்சியாக ஏற்படுகிறது. இதற்கு முன்பும் இதுமாதிரியான வெள்ளங்கள் ஏற்பட்டு அதில் பல உயிரினங்கள் இறந்துள்ளன. இந்த மாதிரியான சூழலில் அதைத் தவிர்க்கக்கூடிய விதத்தில் கடல் மட்டத்தைவிடச் சற்றுக் கூடுதலான உயரத்தில் செயற்கையான நிலத்தை உருவாக்குவது என்பதை ஆரோக்கியமான ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். அதன்மூலம் உயிரினங்கள் காப்பாற்றப்படுகிறது என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், இதை அப்படியே அனைவரும் பின்பற்றிவிடக் கூடாது. அந்தக் குறிப்பிட்ட நிலப்பரப்பை ஆய்வு செய்துதான் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

ஏனென்றால், அங்கு வெள்ளம் என்பது தொடர்ச்சியான ஒன்றாகவே உள்ளது. அப்படியென்றால் பல பத்தாண்டுகளுக்குமுன் அந்த நிலப்பரப்பு எப்படியிருந்தது, அதில் மனிதத் தலையீடுகளால் நில அமைப்பில் மாற்றம் நிகழ்ந்ததா என்பதையும் ஆய்வு செய்து நாம் ஒரு முழுமையான புரிதலுக்கு வரவேண்டும். குஜராத்தின் கிர் காடுகளில்கூட 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் அங்கிருந்த சிங்கங்கள் உட்படப் பல காட்டுயிர்களைப் பலி வாங்கியது. இந்த ஆய்வுகளைச் செய்தால் இதுபோன்ற உயிர்ச் சேதங்களை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தவிர்க்கும் வழி கிடைக்கலாம். அது நாம் பின்னால் செய்யவேண்டியவை. இப்போது இந்தச் செயற்கையான நிலம் உயிரினங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்திருப்பது ஆரோக்கியமான பாராட்டப்படவேண்டிய விஷயம்" என்று கூறினார்.