Published:Updated:

ஊழிக்காலம் - 12 | வந்தாரை வாழவைப்பது இனி எதிர்காலத்தில் சாத்தியமா?

புலம்பெயர்வு
News
புலம்பெயர்வு

"மூழ்கிக்கொண்டிருக்கிற ஒரு கப்பலிலிருந்து பாதுகாப்புக்காக சின்னப் படகுகளில் தப்பித்து செல்பவர்களைப் போல நாம் இருக்கிறோம். விந்தை என்னவென்றால், படகில் ஏறும் மற்றவர்களை அடித்துக் கீழே தள்ளுகிறோம்" என்கிறார் தத்துவவியலாளர் பீட்டர் சிங்கர்.

2009-லிருந்து கணக்கெடுத்தால், ஒரு வினாடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மக்கள் புலம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் காலநிலை மாற்றம். 2050க்குள் உலக அளவில் 200 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்து வேறு இடத்துக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 45 பேரில் ஒருவர், தான் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று வாழ்வார்.

இப்போதைக்கு உலகில் இருக்கும் மொத்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 192 மில்லியன். 2050க்குள் காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதை விடவும் கூடுதலாக (200 மில்லியன்) இருக்கப்போகிறது.

பல ஆண்டுகளாகவே காலநிலை மாற்றத்தால் உண்டாகும் புலம்பெயர்தல் அதிகரித்துவருகிறது. ஆனாலும் 2017வரை, 'காலநிலையால் நடக்கும் புலம்பெயர்தல்' (Climate Migration) என்பதற்கோ காலநிலை அகதிகள் யார் (Climate Refugees) என்பதற்கோ சரியான வரையறை கூடத் தரப்படவில்லை. 2020ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், "காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்ந்து வேற்று நாட்டுக்கு வருபவர்களை, சொந்த நாட்டுக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தக்கூடாது" என்று அறிவித்தது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புலம்பெயர்வு
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புலம்பெயர்வு

"காலநிலை மாறும்போது மக்கள் புலம்பெயர்வது என்பது மிகவும் அடிப்படையான, இயல்பான விஷயம். ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் புலம்பெயர்ந்ததுதான் மனித இனத்தின் உலகளாவிய பரவலுக்கே காரணம்" என்று எழுதுகிறார் சூழலியலாளர் ஆப்ரகாம் லஸ்ட்கார்டென். "தொடர்ந்து நகர்ந்துகொண்டேயிருப்பது சூழலைத் தாக்குப் பிடித்து முன்னேறுவதற்கான ஒரு யுத்தி" என்று குறிப்பிடுகிறார் ஐ.நா சபையின் புலம்பெயர்தல் ஆணையர் லொரென்ஸோ க்வாடெங்கோ.

உலகில் இப்போது 'அதிவெப்பப் பகுதிகள்' வெறும் 1% நிலப்பரப்பில்தான் இருக்கின்றன. அது, 2070க்குள் 19% என்ற அளவில் அதிகரிக்கும். 2100க்குள் இந்தியா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பல இடங்கள், காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில ஊர்களில், ஒன்றிரண்டு மணிநேரம் வீட்டைவிட்டு வெளியில் இருந்தாலே மரணம் ஏற்படும் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது! தவிர, காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கிற இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள், வாழ்வாதார இழப்பு, வளத்தட்டுப்பாடு என்று எல்லாமே புலம்பெயர்தலுக்குத் தூண்டுதலாக அமையும். 2005ல் கத்ரீனா புயல் தாக்கியபோது, தற்காலிகமாகவே கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் புலம்பெயர்ந்தார்கள். இதுபோன்ற பேரிடர்கள் தொடர்ந்து ஓர் இடத்தைத் தாக்கும்போது, அந்த இடமே வாழ்வதற்குத் தகுதியில்லாதது என்று மக்களுக்குத் தோன்றிவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"உண்மையை சொல்லப்போனால் யாருக்கும் புலம்பெயரவேண்டும் என்று உள்ளூர ஆசை இருப்பதில்லை, மக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே தொடர்ந்து வாழ்த்தான் விரும்புகிறார்கள். ஆனால், அதே இடத்தில் தொடர்ந்து இருக்கவேண்டுமானால் பாதுகாப்பும் வருமானமும் வாழ்வாதாரமும் வேண்டுமே" என்று கேட்கிறார் காலநிலை நிபுணர் மரியம் செஸல்நோயல். காலநிலை வாழ்வதாரத்தை அழிப்பதால் அவர்கள் வேறு வழியின்றி ஊரைக் காலி செய்கிறார்கள் என்கிறார் அவர்.

இவ்வாறு புலம்பெயர்வதிலும் சில பொதுத்தன்மைகள் இருப்பதை வல்லுநர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். காலநிலையால் பாதிக்கப்படுபவர்கள், கூடியவரையில் தாங்கள் இருக்கிற இடத்திலேயே இருந்துகொள்ள எல்லா முயற்சிகளையும் முதலில் எடுக்கிறார்கள். பிறகு ஊருக்கு அருகிலேயே உள்ள பெருநகரங்களுக்குப் புலம்பெயர்கிறார்கள். நகரங்களில் எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என்று நம்பிப் பயணிக்கிறார்கள். ஆனால், நகரங்களில் பல நடைமுறை சிக்கல்கள் முளைத்துவிடுகின்றன. அங்கே அவர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், எதிர்பார்த்த அளவுக்கு வாழ்வாதாரம் நிலைபெறுவதில்லை, சிலரால் நகரம் முன்வைக்கும் சமூக மாற்றங்களோடு தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இதையும் மீறி நகரத்திலேயே இருப்பவர்கள் தவிர, மீதி உள்ளவர்கள் மறுபடியும் புலம்பெயரத் தொடங்குகிறார்கள், எதுவுமே சரியாக வரவில்லை என்றால் நாட்டின் எல்லையையே கடந்து வெளியேறுகிறார்கள்.

2016-ல் காலநிலையால் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை
2016-ல் காலநிலையால் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை

ஒரு திடீர்ப் பேரிடரால் புலம்பெயர்பவர்கள், வாழ்வாதாரம் தொலைந்ததால்/வீடு, உடைமைகளை இழந்ததால் வலுக்கட்டாயமாகப் புலம்பெயர்பவர்கள், எதிர்காலத்தில் இங்கு வேலைவாய்ப்பு இருக்காது என்ற பயத்தால் புலம்பெயர்பவர்கள் என்று இவர்களில் பல வகைமைகள் உண்டு. ஆனால், கிட்டத்தட்ட எல்லாருடைய பாதையும் ஒன்றுபோலத்தான் இருக்கிறது. இவ்வாறு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 2 கோடிப் பேர் உலக அளவில் புலம்பெயர்கிறார்கள். "காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்கிறோம்" என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை. "வாழ்வாதாரம் இல்லை", "வருமானம் இல்லை", "வேலை கிடைப்பதில்லை", "கடல்நீர் உள்ளே வந்துவிட்டதால் நிலம் சீரழிந்துவிட்டது", "அடிக்கடி புயல் வருகிறது, ஆபத்து அதிகமாகிவிட்டது", "வறட்சியை சமாளிக்க முடியவில்லை" என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இவ்வாறு புலம்பெயர்பவர்கள் வறுமையால் அலைக்கழிக்கப்பட்டு, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு ஏதிலிகளாக மாறிவிடுகிறார்கள். புதிய ஊரிலும் கால்களை ஊன்றிக்கொள்ள முடியாமல், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் இவர்கள் இடுக்குகளுக்குள் மறைந்துபோகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலநிலை மாற்றத்தால் நடக்கும் இந்தப் புலம்பெயர்தல் உலகளாவிய பிரச்னையாக வடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே உலகின் பல நாடுகளில், புலம்பெயர்ந்து வருபவர்கள் மீதான வெறுப்புணர்வு மிகவும் கவனமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, சில நேரம் அரசுகளே இதை நேரடியாக செய்கின்றன. "வேறு இடத்திலிருந்து வருபவர்களால்தான் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை", "அவர்களால்தான் குற்ற விகிதம் அதிகரித்துவிட்டது" போன்ற குற்றச்சாட்டுக்களை அடிக்கடி பொதுவெளியில் கேட்க முடிகிறது. சமூகங்களில் இனவாதம் புரையோடிப்போயிருக்கிறது. இந்த மனப்பான்மையைக் கையிலெடுத்துக்கொண்டு சர்வதேச மாநாடுகளுக்கு வரும் அரசுகளும் தெளிவான ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்படத் தயாராக இல்லை. தவிர, காலநிலை மாற்றத்தால் அந்தந்த நாடுகளே தடுமாறும் என்ற கணிப்பு இருக்கும்போது, வெளியிலிருந்து வருபவர்களை அவர்களால் பாதுகாக்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

கடல்மட்டம் உயர்வதால் தீவு நாடுகளில் இருப்பவர்கள் புலம்பெயர நினைக்கும்போது, அதற்கு உதவி செய்வது யாருடைய வேலை? தீவுகளில் இருப்பவர்களை இடமாற்றம் செய்வது கடுமையான செலவு வைக்கும் ஒரு பணி. அந்த செலவை யார் ஏற்றுக்கொள்வார்கள்? காலநிலை மாற்றம் என்பதே சிக்கலான ஒரு அறிவியல் என்றால், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எப்படி வரையறுப்பது? இதற்காக தனியாக ஓர் அகதிகள் ஒப்பந்தம் தேவையா இல்லையா என்று பல குழப்பங்கள் நிலவுகின்றன. நாடுகளின் எல்லை தாண்டிப் பயணிப்பவர்கள் தவிர, உள்நாட்டிலேயே புலம்பெயர்பவர்களை என்ன செய்வது, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்வது எப்படி என்பதும் ஒரு தனித்துவமான பிரச்னை. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் பெருகிவரும் இனவாதம், இதில் மிக அதிகமாகக் குறுக்கிடுகிறது.

Climate change | காலநிலை மாற்றம்
Climate change | காலநிலை மாற்றம்
Anna Mayumi Kerber

'Climate Gentrification' என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத இடங்களைத் தேடிப்பிடித்து பணம் படைத்தவர்கள் அங்குபோய் வசிக்கத் தொடங்குவார்கள். ஏற்கனவே அங்கு தங்கியிருந்த வறியவர்கள் கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். வெள்ளம் வரும்போது ஊரிலேயே உயரமான இடத்தில் அமர்ந்திருக்கும் ஏழைகளைத் தள்ளிவிட்டுவிட்டு அங்கு பணக்காரர்கள் அமர்ந்துகொள்வதைப் போன்றது இது. மியாமி, ஹ்யூஸ்டன் உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களில் இது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. காலநிலை மாற்றத்தால் நகரங்களை நோக்கிப் பலர் புலம்பெயரும்போது இந்தப் போக்கும் அதிகரிக்கும். பாதுகாப்பான இடங்களில் வசிப்பதே வறியவர்களுக்கு சாத்தியமில்லாமல் போகும்.

2050க்குள், தெற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் மட்டும் காலநிலை மாற்றத்தால் 14 கோடிக்கும் அதிகமானோர் புலம்பெயர்வார்கள் என்கிறது உலக வங்கி. பிரம்மபுத்ரா, கங்கா நதிப் படுகைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கெனவே வறட்சியால் ஒவ்வொரு ஆண்டும் ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கோடித் தொழிலாளிகள் புலம்பெயர்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தாலே, கடலோர நிலப்பரப்பில் 5764 சதுர கிலோமீட்டர் காணாமல் போய்விடும்! அதனால் 71 லட்சம் மக்களுக்கு இடம் இல்லாமல் போகும்! 2006லேயே சுந்தரவனக் காடுகளை ஒட்டிய ஒரு தீவு மூழ்கத் தொடங்கியதால், வேறு ஒரு தீவுக்கு மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்குள்ளேயே புலம்பெயர்ந்து செல்வார்கள் என்றாலும் அதற்கான மேலாண்மைத் திட்டங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் என்று பார்த்தால் வங்கதேசத்து மக்கள்தான் அதிகமாக இருப்பார்கள். காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக வங்கதேசம் பாதிப்படையும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்திலிருந்து காலநிலையால் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிகமானதாக இருக்கும் என்று கணிக்கிறார் மெயர்ஸ் என்கிற வல்லுநர். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து வரவே வாய்ப்பு அதிகம் என்பதும் அரசியல் நிபுணர்களின் கருத்து.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புலம்பெயர்வு
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புலம்பெயர்வு

புலம்பெயர்தல், சர்வதேச நகர்வு, உள்நாட்டு நகர்வு போன்ற பல அம்சங்களில் உலகளாவிய வரையறைகள் முதலில் தெளிவாக்கப்படவேண்டும். "மூழ்கிக்கொண்டிருக்கிற ஒரு கப்பலிலிருந்து பாதுகாப்புக்காக சின்னப் படகுகளில் தப்பித்து செல்பவர்களைப் போல நாம் இருக்கிறோம். விந்தை என்னவென்றால், படகில் ஏறும் மற்றவர்களை அடித்துக் கீழே தள்ளுகிறோம்" என்கிறார் தத்துவவியலாளர் பீட்டர் சிங்கர். ஏற்கெனவே காலநிலை மாற்றத்தால் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு நாடு எப்படி வந்தவர்களை வரவேற்று வாழவைக்க முடியும் என்பது பிறரின் கேள்வி. அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது அரசுகளின் வாதம். இதை அறம் சார்ந்து அணுகவேண்டுமா நடைமுறை சிக்கல்களை முன்வைத்துப் பேசவேண்டுமா என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கட்டுரையை எழுதிமுடிப்பதற்குள் குறைந்தது 10 பேராவது தன் இடத்தை விட்டு வாழ்க்கையைத் தேடி நகரத் தொடங்கியிருப்பார்கள்.

காலநிலை மாற்றத்தால் இத்தனை பிரச்னைகள் வருகின்றன என்றால், இதற்காக சர்வதேச ஒப்பந்தங்கள் போடப்பட்டிருகின்றவா? அவற்றின் நிலை என்ன?

அடுத்த கட்டுரையில் பேசுவோம்.

- Warming Up...