Published:Updated:

`2050-க்குள் மும்பை கடலுக்குள் போகும்?!' - முந்தைய கணிப்புகளை விட வேகமாக உயரும் கடல்மட்டம்!

உயரும் கடல்மட்டத்தால் வரப்போகும் ஆபத்துகளை முந்தைய ஆய்வுகள் குறைத்து மதிப்பிட்டதாக Climate Central-ன் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

முந்தைய கணிப்புகளை விட வேகமாக உயர்கிறது கடல்மட்டம்
முந்தைய கணிப்புகளை விட வேகமாக உயர்கிறது கடல்மட்டம்

அமெரிக்காவைச் சேர்ந்த காலநிலை அமைப்பு ஒன்றின் புதிய ஆய்வு, கடல்மட்ட உயர்வு முன்பு கணித்ததை விடவும் மோசமான தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் எனக் கணித்துள்ளது. இதற்கு முன்பு இதன் தாக்கம் 2050-ல் இந்தியாவில் 50 லட்சம் மக்களால் உணரப்படும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இப்போதைய ஆய்வு இந்த எண்ணிக்கை மூன்றரை கோடி மக்களாக இருக்கலாம் எனக் கணிக்கிறது.

கடல்மட்ட உயர்வால் 2050-ல் மும்பை கடலுக்குள் போகும் அபாயம்
கடல்மட்ட உயர்வால் 2050-ல் மும்பை கடலுக்குள் போகும் அபாயம்
Pexels

இந்த முடிவுகள் Climate Central என்ற அமெரிக்கா காலநிலை ஆராய்ச்சி மற்றும் தொடர்பு அமைப்பின் 'CoastalIDEM' என்னும் புதிய டிஜிட்டல் முறையால் கணிக்கப்பட்டிருக்கிறது. நாசாவின் Shuttle Radar Topography Mission (SRTM) ஆய்வுகள் காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதல் ஆகியவற்றின் விளைவால் உயரும் கடல்மட்டத்தால் வரப்போகும் ஆபத்துகளைக் குறைத்து மதிப்பிட்டதாக Climate Central-ன் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Vikatan

நாசா பயன்படுத்திய முறையில் நிலத்தின் உயரத்தை அளக்கும்போது வானத்தின் அருகில் இருக்கும் பொருள்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதாவது மரங்கள் மற்றும் கட்டங்களின் உயரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த CoastalIDEM முறையில் இந்தத் தவறுகள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் திருத்தப்பட்டது. துல்லியமான இந்தப் புதிய தகவல்கள் கொண்டே இந்த முறையில் கணிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன.

அதன்படி உலகமெங்கும் கடல்மட்ட உயர்வு என்பது 2050-ம் ஆண்டிற்குள் கரையோரங்களில் வாழும் 30 கோடி மக்களைப் பாதிக்கும்.

சுமார் 15 கோடி மக்கள் வாழும் இடங்கள் தண்ணீருக்குள் போகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு என்பது ஆசியாவில் பெருமளவில் இருக்கும். கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு கட்டுக்குள் இல்லையென்றால் மும்பை, கொல்கத்தா போன்ற பெரும் நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வறிக்கை.

இந்தக் கடல்மட்ட உயர்வால் மிகவும் மோசமான பாதிப்புகள் வங்கதேசம்(9.3 கோடி மக்கள்) மற்றும் சீனாவில்(4.2 கோடி மக்கள்) இருக்கும் என்றும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு முடிவுகள்.