Published:Updated:

`குறுங்காடுகளை உருவாக்கி காற்றைத் தூய்மைப்படுத்துவோம்!' - நீடாமங்கலத்தில் புது முயற்சி

கு. ராமகிருஷ்ணன்
ம.அரவிந்த்

நீடாமங்கலத்துல மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள்லயும் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தப்போறோம். தனியார் நிலங்களிலும் எங்களது சொந்த செலவில் குறுங்காடுகளை உருவாக்கித் தர, கிரீன் நீடா தயாராக உள்ளது.

`கிரீன் நீடா' அமைப்பினர்
`கிரீன் நீடா' அமைப்பினர்

நவீனமயத்தால், நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், பல்லுயிர் பெருக்கத்துக்காகவும் குறுங்காடுகளை உருவாக்கும் உயரிய முயற்சியில் இறங்கியுள்ளார்கள் நீடாமங்கலம் இளைஞர்கள். இவர்களோடு பேரூராட்சி நிர்வாகமும் கைகோத்திருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் பொதுமக்களிடமும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அடர் நடவு முறையில் குறுங்காடு
அடர் நடவு முறையில் குறுங்காடு

ஒரு நிலப்பகுதி சுற்றுச்சூழல் சமநிலையுடன் ஆரோக்கியமாக இருக்க 33 சதவிகிதம் காடுகள் அவசியம். ஆனால், தமிழ்நாட்டில் 15 சதவிகிதம் மட்டுமே காடுகள் உள்ளது. நீண்ட நெடிய பெருங்காடுகளை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், ஆங்காங்கே குறுங்காடுகளை உருவாக்கி அதை ஈடுகட்ட முடியும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சமூக நலனில் அக்கறை கொண்டு, கிரீன் நீடா என்ற பெயரில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, மரம் வளர்ப்பு, மாடித் தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தற்போது குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். இதன் முதல்கட்டமாக, நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே, 25,000 சதுர அடியில் அடர் நடவு முறையில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார்கள்.

இதுகுறித்து கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலுவிடம் பேசியபோது, ``இது பேரூராட்சிக்குச் சொந்தமான இடம். இதுல குறுங்காடு உருவாக்கலாம்னு நாங்க சொன்னதும், பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன் உடனே ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டதோடு சில உதவிகளையும் செய்து கொடுத்தார். பறவைகளுக்கு உணவு அளிக்கக்கூடிய நாவல், இலந்தை, சீதா, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழ வகை மரங்கள், காற்றில் உள்ள மாசுகளைச் சுத்தப்படுத்தக்கூடிய மரங்கள், அதிகளவு ஆக்சிஜனை வெளிப்படுத்தக்கூடிய மரங்கள், மழை மேகங்களை ஈர்க்கக்கூடிய மரங்கள் என இன்னும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செஞ்சிருக்கோம். கிருஷ்ணப்ரியா பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பினர் தங்களோட பங்களிப்பாக இந்தக் கன்றுகளைக் கொடுத்தாங்க.

ராஜவேலு
ராஜவேலு

வழக்கமாக இதுபோன்ற மரங்களை 10 அடி இடைவெளியில்தான் வளர்ப்பாங்க. அதுமாதிரி வளர்த்தால் மரம் நல்லா பெருத்து மர வேலைப்பாடுகளுக்குப் பயன் கொடுக்கும். அதுமாதிரியான மரங்களை நீண்டகாலத்துக்கு பாதுகாக்க முடியாது. திருட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இங்க நாங்க, அடர் நடவு முறையில் சுமார் 2 அடி இடைவெளியில் 1,000 மரக்கன்றுகளை நடவு செஞ்சிருக்கோம். இதுமாதிரி நெருக்கமாக வளர்த்தால், மரங்களோட அடிப்பாகம் பெருக்காது. அதேசமயம் அதிகமான உயரத்துக்கு வளர்ந்து பறவைகளுக்கு உறுதுணையாக இருக்கும். குறுகிய காலத்துல அதிக எண்ணிக்கையிலான மரங்களை வேகமாக வளர்த்தெடுக்கவும் அடர் நடவு முறை கைகொடுக்கும்.

அடர் நடவு முறையில் குறுங்காடு
அடர் நடவு முறையில் குறுங்காடு

பத்தாண்டுகளில் கிடைக்க வேண்டிய வளர்ச்சி, 2-5 ஆண்டுகளில் கிடைச்சிடும். கன்றுகளை நடவு செஞ்சதோடு மட்டும் எங்களோட கடமை முடிஞ்சிடாது. ஒருநாள் விட்டு ஒரு நாள் தொடர்ச்சியாகத் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் முறையான ஏற்பாடுகளைச் செஞ்சிருக்கோம். நீடாமங்கலத்துல மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள்லயும் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தப்போறோம். தனியார் நிலங்களிலும் எங்களது சொந்த செலவில் குறுங்காடுகளை உருவாக்கித் தர கி