Published:Updated:

`பிளாஸ்டிக் ஃப்ரீ' என வரவேண்டும் - கூகுளுக்கு கடிதம் எழுதிய நீலகிரி ஆட்சியர்!

கூகுள் தேடலில் பிளாஸ்டிக் ஃப்ரீ என வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கூகுள் நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

nilgiris collector innocent divya
nilgiris collector innocent divya

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டைய மாநிலமான கேரளா, கர்நாடக மாநில அரசு பேருந்துகளில், சுற்றுலாப் பேருந்துகளிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரி இரு மாநில அரசுகளுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது. அதே சமயம் கூகுள் தேடலின் போது பிளாஸ்டிக் ஃப்ரீ என்ற வாசகம் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ooty entrance
ooty entrance

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மீறி பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக அவ்வப்போது அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புக்களை கொண்டு மாவட்ட நிர்வாகம் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்தது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர், குளிர்பான பாட்டில்கள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சாலையோரங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எண்ணிக்கை ஓரளவு குறைந்தது.

இத்தனை தடை இருந்த போதிலும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் சுற்றுலாப் பேருந்துகளில் வரும் பயணிகளுக்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் தண்ணீரை குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை சாலையோரங்களில் வீசிச் செல்வது குறைந்தபாடில்லை. இந்நிலையில் கேரள, கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் மற்றும் சுற்றுலாத்துறை வாகனங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பயணிகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வழங்குவதை தடை செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் இருமாநில போக்குவரத்து மற்றும் சுற்றலாத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், கூகுள் இணையதள தேடலின் போது ஊட்டி அல்லது நீலகிரி குறித்து தேடுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம் என வாசகங்கள் வரும் வகையில் அமைக்கவேண்டும் என அந்த நிறுவனத்திற்கு கடிதம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கடிதம் எழுதியுள்ளார்.

அதே போல ஓட்டல் புக்கிங் செய்யும் வெப்சைட்டுகள் மற்றும் இணைய தளங்களிலும் இந்த வாசங்கள் வருவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

plastic waste
plastic waste

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், 90 சதவீதம் அளவிற்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. சாலையோர கடைகளில் தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகளில் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கேரளா, கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம், சுற்றுலாத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எக்காரணத்தை கொண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பஸ்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வழங்க கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கூகுள் நிறுவனத்திற்கும், நீலகிரி - ஊட்டி குறித்த தேடுதலின் போது பிளாஸ்டிக் ஃப்ரீ என்ற வாசகம் வரும்படி அமைக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஓட்டல் புக்கிங் வெப்சைட்டுகளில், உள்ளே நுழையும் போதே ‘பிளாஸ்டிக் பேன் இன் நீலகிரி’ என்ற வாசகம் வரும் வகையில், வாசங்கள் பிரசுரிக்க அந்த நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்படும். இதன் மூலம் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி மாவட்டத்தை உருவாக்க முடியும்,” என்றார்.

plastic waste
plastic waste

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இதற்கு மாற்றாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாட்டர் ஏ.டி.எம் கள் நிறுவப்பட்டுள்ளன. அதே போல பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற ஆங்காங்கே பிளாஸ்டிக் கிரஷ்ஷிங் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.