Election bannerElection banner
Published:Updated:

மின்சாரம் தாக்கி இறந்த ஆண் யானை... ரகசியமாக புதைப்பு? ஊட்டியில் பகீர் சம்பவம்!

புதைக்கப்பட்ட ஆண் யானை
புதைக்கப்பட்ட ஆண் யானை

ஆண் காட்டு யானை ஒன்றினை மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டு, ரகசியமாக புதைத்த செயல் ஊட்டி மக்களை பதறச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் சின்னக்குன்னூர் அருகில் உள்ள பெந்தூர் பகுதிகளில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொள்வர். அப்படி ரோந்து செல்லும்போது தனியார் நிலத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நிலத்தில் புதிதாக சிறிய மண் மேடு ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர். மேலும், அதன் அருகில் கடுமையான துர்நாற்றமும் வீசியுள்ளது.

கைதானவர்கள்
கைதானவர்கள்

சந்தேகமடைந்த வனத்துறை ஊழியர்கள் உடனே அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இறந்த கால்நடைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தோண்டினர். ஆனால், மண்ணுக்கு மேலாகவே யானையின் தந்தம் தட்டுப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி, மேலும் ஒரு அடி தோண்டினர். உள்ளே ஒரு முழு யானையே புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்துப்போன, ஊழியர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகளும்‌ அதிர்ந்து போயினர்.

இதையடுத்து உடனடியாக‌ விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்து தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

புதைக்கப்பட்ட ஆண் யானை
புதைக்கப்பட்ட ஆண் யானை

இந்த சோக நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``சீகூர் வனங்களில் உள்ள காட்டு யானைகள் இந்த குதிக்கு வருவது வழக்கம். அப்படி இந்த வழியாக வந்த யானை, விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியின் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இறந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கலாம். யானையின் தந்தம் நல்ல நிலையில் உள்ளது. உடற்கூறாய்வுக்குப் பின்னரே முழுமையான காரணம் தெரியவரும். சந்தேகத்தின் பேரில் பெந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (40), கோபாலகிருஷ்ணன் (20), அஜித்குமார் (18) ஆகிய மூன்று பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு