Published:Updated:

ரூ.7,000 கோடியில் 2,000 மெகாவாட் - ஊட்டியில் அணைகட்ட வலுக்கும் எதிர்ப்பு!

பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் ஏற்படக்கூடிய அதிர்வுகளால் இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. இந்தத் திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

குந்தா ஆறு
குந்தா ஆறு

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கன்னேரி. இந்தப் பகுதியில் சில்லஹல்லா நீர்மின் திட்டத்தின் கீழ் அணை கட்டவும், மின் நிலையம் அமைக்கவும் 15 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தால் நீலகிரியில் பேரிடர்கள் ஏற்படும் என்பதால் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

குந்தா ஆறு
குந்தா ஆறு

நீர்மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் நீலகிாி மாவட்டத்தில் குந்தா நீர் மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் அவலாஞ்சி முதல் பரளி வரை நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில், மஞ்சூர் அருகில் குந்தா ஆற்றின் துணை ஆறான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே பிக்குளி பாலம் அருகில் பிரமாண்ட அணை எழுப்ப ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீர்மின் திட்டம் செயல்படுத்தப்படும் என 2013-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்தப் பெருந்திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், சில்லஹல்லா அணை எழுப்பப்படவுள்ள பகுதியில் அதிகாாிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒரே கட்டமாக 2,000 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு தொழில்நுட்பம், இயந்திர வடிவமைப்புகள் இல்லை. இதை நிறைவேற்றுவது சிரமம் என இந்தப் பெருந்திட்டம் கைவிடப்பட உள்ளதாகவும், அதற்குப் பதிலாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இரு கட்டங்களாகச் செயல்படுத்தும் வகையில் மறு ஆய்வு செய்ய உள்ளதாக 2017-ம் ஆண்டு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குந்தா ஆறு
குந்தா ஆறு

கடந்த 7 ஆண்டுகளாக இத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. இந்தநிலையில், தற்போது இந்த மின் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி குந்தா அருகே அன்னமலை கோயில் அடிவாரப் பகுதியிலும், கன்னேரி அருகேயுள்ள ஸ்ரீராம்நகர் ஆகிய இரு இடங்களில் அணைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர்மின் நிலையமாக மட்டுமன்றி, நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கா ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கன்னேரி, ஸ்ரீராம்நகர், தங்காடு உள்ளிட்ட15 கிராம மக்கள் சில்லஹல்லா நீர்மின்திட்டததுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சில்லஹல்லா நீர்மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஊட்டி அருகேயுள்ள பாலகொலா கிராமத்தில் நடைபெற்றது.

எதிர்க்கும் மக்கள்
எதிர்க்கும் மக்கள்

இதுகுறித்து பொதுமக்கள், ``இந்தத் திட்டதால் பல நூறு ஏக்கர் நீரில் மூழ்கடிக்கப்பட்டு, சுமார் 2,000 விவசாயிகள் பாதிக்கப்படுவர். பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் ஏற்படக்கூடிய அதிர்வுகளால் இயற்கை பேரிடர் அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.