Published:Updated:

செரிக்காத பிளாஸ்டிக்..சிதறிக் கிடந்த மாட்டு எலும்பு!- பள்ளி ஆசிரியரைப் பதற வைத்த சம்பவம் #MyVikatan

மாணவர்களுடன் மருத. உதயகுமார்
மாணவர்களுடன் மருத. உதயகுமார்

பேராவூரணியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட பிளாஸ்டிக் அனுபவம் பேரதிர்ச்சி ரகம்.

இன்றைய நவீன யுகத்தின் மிகப்பெரிய சமூக எதிரி பிளாஸ்டிக். இவை மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் இந்த உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் ஆபத்தின் வடிவம். இந்த ஆபத்தின் கரங்கள் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகின்றன. இதற்கு ஏராளமான சாட்சிகள் நம் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன.

இச்சூழலில் பேராவூரணியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்ட பிளாஸ்டிக் அனுபவம் பேரதிர்ச்சி ரகம்.

மருத. உதயகுமார்
மருத. உதயகுமார்

மருத.உதயகுமார். இவர் பேராவூரணி - செங்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர். அத்துடன் இயற்கை சார்ந்த நலன்களில் அக்கறை காட்டி வருபவர். 'தோழமை' என்ற அமைப்பையும் கட்டமைத்து செயல்படுத்தி வருகிறார். கஜா புயலின்போது முகநூல் மூலம் உலகத் தமிழர்களிடம் நிதி திரட்டி பேராவூரணியில் ஒரு வாரத்துக்கு ஊரெங்கும் உணவு சமைத்துப் போட்டவர். இயற்கையின் நலன் காக்க எப்போதும் முதலிடத்தில் நிற்பவர். 23 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து அப்பள்ளி மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளைப் பராமரிக்கப் பயிற்சி கொடுத்து நடச்செய்தவர். குறுங்காடுகள் வளர்ப்பையும் தீவிரப்படுத்தி வருகிறார். இதுபோன்ற பல்வேறு பசுமைத் திட்டங்களை தன் பள்ளி மாணவர்களுடனும் சக நண்பர்களுடனும் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த அடிப்படையில் தன்னுடைய பள்ளி அமைந்துள்ள செங்கமங்கலம் பகுதியில் உள்ள கண்மாய்ப் பகுதியில் பனை விதைகளை நடுவதற்காக இடங்களை தேர்வு செய்யப் புறப்பட்டிருக்கிறார் மருத.உதயகுமார். அப்போது அவர் கண்ட காட்சிதான் அவரை அதிர வைத்திருக்கிறது. அதைப்பற்றி அவரே விவரிக்கிறார்.

``பனை விதைகள் விதைக்கலாம் என்று எங்கள் பள்ளிக்குப் பின்புறம் உள்ள ஒரு குளக்கரையை சில தினங்களுக்கு முன் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் என் மனதை நடுங்க வைத்தது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு பெரிய மாட்டின் எலும்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்தன. அதன் எலும்புகளை நாய்களும் நரிகளும் கடித்து இழுத்துப்போட்டிருந்தன. இந்த மாடு இறந்து எப்படியும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகி இருக்கலாம்.

பிளாஸ்டிக்  மற்றும் மாட்டின் எலும்புகள்
பிளாஸ்டிக் மற்றும் மாட்டின் எலும்புகள்

மாட்டின் தலைப்பக்க எலும்புகளும் பின்பக்க எலும்புகள் மட்டுமே படுக்கை வசத்தில் கிடந்தன. ஆனால், அதன் வயிற்றுப் பகுதியில் சுமார் 20 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் மட்கிப் போகாமல் அப்படியே இருந்தன. இந்த மாட்டின் இறப்புக்கு இதுவே முக்கியக் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

இதைப் பார்த்த உடன் நான் அதிர்ச்சியடைந்து போனேன். உடனடியாக என் மாணவர்களை அழைத்து வந்து அந்த மாட்டின் நிலைமையைக் காட்டினேன். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் நமது மண் வளத்தை மட்டும் அழிக்கவில்லை; நமது உயிரினங்களையும் எவ்வாறு அழித்து வருகிறது என்பதை நேரடிக் காட்சியாக எம் மாணவர்களிடம் அந்தக் கொடூரத்தை விவரித்தேன். பிளாஸ்டிக்கின் பேராபத்தை மாணவர்கள் அப்போது நேரடியாக உணர்ந்தனர். பிளாஸ்டிக்கால் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? என்பதை மாணவர்கள் தங்கள் கண்முன்னே கண்டனர். அதன் பாதிப்பின் ஆழத்தை எம் பள்ளி மாணவர்கள் நேரடியாக உணர்ந்தனர். 'பிளாஸ்டிக் ஒழிப்பை நாம தீவிரமாக கையில் எடுக்கணும் சார்..' என அவர்கள் அப்போது சபதம் ஏற்றனர்...." என்றார்.

மாணவர்களுடன் மருத.உதயகுமார்
மாணவர்களுடன் மருத.உதயகுமார்

தொடர்ந்து அவர் ``பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாகக் குறைக்கவேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் முதல் உயர் அலுவலகங்கள்வரை இதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் தனிப்பட்ட ஒவ்வொருவரும் இதன் ஆபத்தை உணர வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பிரசாரத்தின் வீரியம் இப்போது குறையத் தொடங்கி விட்டது. மீண்டும் பிளாஸ்டிக் பொருள்கள் ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கிவிட்டன. இதைப் பயன்படுத்துவது என்பது நமக்கு நாமே தீங்கு செய்வதுடன் மட்டுமல்லாமல் நாம் சார்ந்திருக்கும் மண், மரம், சுற்றுச்சூழல், உயிரினங்கள் என அனைத்துக்கும் ஆபத்தை விளைவிக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமூகமாக நாம் வாழ முடியும்.அப்பாவி வாயில்லா ஜீவன்களை இந்தக் கொடிய வகை பிளாஸ்டிக்களிடமிருந்து காப்பாற்ற முடியும்... " என்கிறார் ஆசிரியர் மருத.உதயகுமார்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல