Published:Updated:

296 கிலோ மீட்டர்... 20 ஆயிரம் மரங்கள்..!- நிழற்சாலைகள் ஆகும் புதுக்கோட்டை நெடுஞ்சாலை #MyVikatan

சாலையோரத்தில் நடப்பட்ட  மரக்கன்றுகள்
சாலையோரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்

கஜாவின் கோரப்பசிக்கு அதிகமாய் இரையானவை அப்பகுதிகளில் நன்கு வளர்ந்து செழித்திருந்த மரங்கள்.

கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய கஜா புயலின் கபளீகரத்துக்குப் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சந்தித்த இழப்புகள் சொல்லிமாளாதவை. இன்னும் அதன் தாக்கத்திலிருந்து அப்பகுதி மீளவில்லை. குறிப்பாக, கஜாவின் கோரப்பசிக்கு அதிகமாய் இரையானவை அப்பகுதிகளில் நன்கு வளர்ந்து செழித்திருந்த மரங்கள். அவற்றை வேரோடு பிடுங்கிச் சென்றன கஜாவின் கொடுங்கரங்கள்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

இதனால் பசுமை போர்த்திய பூமி, வெறுமை சூழ்ந்த பகுதியாக வெறிச்சோடிப் போய்க்கிடக்கிறது. இதற்காக மீண்டும் பசுமையை உருவாக்கும் பணியில் பல்வேறு அமைப்புகளும் களம் இறங்கியிருக்கின்றன. அவற்றில் சாலைகளைச் சோலைகளாக்கும் முயற்சியில் வெகு தீவிரமாய்ச் செயல்பட்டு வருகிறது மாநில நெடுஞ்சாலைத்துறையின் புதுக்கோட்டை கோட்டம். அவர்களின் இந்தப் பசுமைப் பணிக்குப் பொதுமக்களிடையே ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மாநில நெடுஞ்சாலைத்துறையின் புதுக்கோட்டை கோட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கீரனூர், புதுக்கோட்டை மற்றும் திருமயம் என ஆறு உட்கோட்டங்கள் உள்ளன. அந்த ஆறு உட்கோட்டங்களிலும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முதன்மை நெடுஞ்சாலைகள் மற்றும் இதர மாவட்ட நெடுஞ்சாலைகளில் ஆலங்குடி உட்கோட்டத்தில் 47 கி.மீ, அறந்தாங்கியில் 30 கி.மீ, ஆவுடையார்கோவிலில் 41 கி.மீ, கீரனூரில் 55 கி.மீ, புதுக்கோட்டையில் 63 கி.மீ, திருமயம் உட்கோட்டத்தில் 60 கி.மீ. ஆக மொத்தம் 296 கி.மீ. நீளத்திற்கு நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 22 ஆயிரம் மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுத் தற்போது 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு நல்ல முறையில் பராமரித்தும் வருகின்றனர். இன்னும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மரக்கன்றுகளைக் கால்நடைகளிடமிருந்து பாதுகாக்கக் கூண்டுகள் அமைத்து, வறட்சிக் காலத்திலும் டேங்கர் வண்டிகள் மூலம் தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றி அசத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக புதுக்கோட்டை வட்டாரத்தில் முன்னோடி மரம் வளர்ப்பாளராக இருந்து வரும் சேந்தங்குடி தங்க.கண்ணன் என்னிடம் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

 தங்க.கண்ணன்
தங்க.கண்ணன்

``கஜா புயலினால் புதுக்கோட்டை வட்டாரத்தின் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வீழ்ந்துவிட்டன. இதனால் இருபுறச் சாலைகளும் மரங்களின்றி வெறிச்சோடிப் போயின. நிழல் தரும் மரங்களுடன் பயணம் செய்த பொதுமக்களும் பயணிகளும் இன்று வெறுமையை உணர்கிறோம். இந்த வெறுமைக்கு முடிவு கட்ட புதுக்கோட்டை கோட்ட நெடுஞ்சாலைத்துறை எடுத்துள்ள முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.

பயணம் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய மரக்குகைக்குள், பறவைகளின் இன்னிசையுடன் மகிழ்ச்சியாய்ச் சென்று வருவதுபோல் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்தப் பகுதி கஜா புயலுக்கு முன்னர் இருந்தது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறைக்கு முதலில் எனது பாராட்டுகள். வளிமண்டலத்தையும் இந்த பூமியையும் காப்பாற்ற மரங்களால் மட்டும்தான் முடியும். அதை நோக்கித்தான் உலக நாடுகள் செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐ.நா சபை முதல் வலுத்துவருகின்றன.

இதில் ஒரு பகுதியாக நமது புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையும் இறங்கி இருப்பது உண்மையிலேயே, ஒரு மரம் வளர்ப்பு ஆர்வலராய் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய இளைஞர்களும், தன்னார்வலர் அமைப்புகளும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகள் நட்டு வருவது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அதேபோல், நெடுஞ்சாலைத்துறையின் சாலையோர மரக்கன்று வளர்ப்பு இப்பகுதி மக்களுக்கு நிச்சயம் மிகுந்த பலனளிக்கும்.

டி இ அலுவலகம்
டி இ அலுவலகம்

வேம்பு, நாவல், வேங்கை, வாகை, புங்கை என அழிந்து வரும் நிலையில் உள்ள நாட்டு மரக் கன்றுகளை அவர்கள் தேர்வு செய்து நட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. இவை அனைத்தும் மண்ணுக்கும், மனிதர்களுக்கும் நன்மை தரக்கூடியவை. பலவிதப் பறவைகள், பூச்சிகள், அணில்கள், வௌவால்கள் போன்ற ஏராளமான வன உயிரினங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் இந்த மரங்கள் கட்டாயம் துணை நிற்கும்.

இப்போது நட்டுள்ள மரங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட எவ்விதச் சேதாரமும் இல்லாமல் நன்றாக வளர்ந்து வருகின்றன. தற்போது பெய்துவரும் தொடர் மழையால் அவை நன்றாகத் துளிர்விட்டு வேகமாய் வளர்ந்து வருகின்றன. 5 முதல் 6 அடி உயரத்துக்குக் குறைவில்லாத, தரமான மரக் கன்றுகளை புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் தேர்வு செய்து நட்டுள்ளனர். அடுத்து ஒவ்வொரு மரக் கன்றுக்கும் தக்க பாதுகாப்புக் கூண்டுகளையும் அமைத்துள்ளனர். இதை எல்லாம் தாண்டி டேங்கர் வண்டிகள் மூலம் வறட்சியான காலகட்டத்திலும்கூட தொடர்ச்சியாக ஒவ்வொரு மரக்கன்றுக்கும் தவறாமல் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். இதனால்தான் புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை ஓரம் நட்ட மரக் கன்றுகள் அனைத்தும் பழுது இல்லாமல் செழிப்பாக வளர்ந்து வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை வெறும் பேருக்கு வைக்காமல் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இதேபோல் தமிழ்நாட்டின் மற்ற மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினரும் களம் இறங்கினால் மாநிலச் சாலைகள் எல்லாம் மாபெரும் சோலைகள் ஆகும். இந்த மரக் கன்றுகள் வளர்ப்பினால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கே எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை விளங்கும். இதை மற்ற மாவட்டங்களும் பின்பற்றினால் தமிழ்நாடே இந்தியாவிற்கு உதாரணமாய்த் திகழும்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

இந்தப் பணியில் தீவிர அக்கறையும் ஆர்வமும் காட்டி வரும் புதுக்கோட்டை கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலையில் உள்ள சாலைப் பணியாளர்கள்வரை ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்வது புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கடமை” என்று பூரிப்புடன் கூறுகிறார் தங்க.கண்ணன்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல