Published:Updated:

இனி ஒழுகாத வீடுகள்..!

முத்தன்பள்ளம் கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்தன்பள்ளம் கிராமம்

துயர் துடைத்த வாசகர்கள்

இயற்கையால் பாதிக்கப்பட்டு மருகி நின்ற மக்களின் கனவை நனவாக்கினால், அங்கே பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்கு அளவேது! தமிழகத்தையே புரட்டிப் போட்ட மழை, வெள்ளத்துக்கு நடுவே, அத்தகையதொரு மகிழ்ச்சி வெள்ளத்தைக் கண்டு நாமும் மகிழ்ந்தோம் முத்தன்பள்ளம் கிராமத்தில்!

நவம்பர் 2018-ல் கஜா புயலின் கொடூர தாக்குதலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் (கொடைக்கானல்) ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்புகளை எதிர்கொண்டன. வீடுகள், வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர் மக்கள்.

விகடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான உதவிகளை செய்துகொண்டே, வாசகர்களிடமும் நிதி கோரியது. விகடன் குழுமத்தின் பங்காக 10 லட்சம் ரூபாய் சேர்க்கப்பட, தன் சார்பிலும் தன் சகோதரர் சூர்யா சார்பிலும் 20 லட்ச ரூபாயை விகடன் அலுவலகத்துக்கே வந்து வழங்கினார், நடிகர் கார்த்தி. கடமையை உணர்ந்த வாசகர்களும் நிதியைச் சேர்க்க, விகடன் குழும ஊழியர்களும் பங்களிக்க, மொத்தம் 1,43,79,224 ரூபாய் நிதி திரண்டது!

இனி ஒழுகாத வீடுகள்..!

அத்தியாவசியப் பொருள்கள், இலங்கை தமிழர் அகதி முகாம்களில் வீடுகள் சீரமைப்பு, தோட்டங்களில் மறுசீரமைப்பு, மின்சாரம் தடைபட்டதால் நீரின்றி சாகவிருந்த பயிர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சியது என தொடர்ந்தன உதவிகள். நிறைவாக, குடிசை இழந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டமும் தொடங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம், முதலியார்தோப்பு, வேட்டைக்காரணிருப்பு ஆகிய பகுதிகளில் 10 வீடுகள் கட்டப்பட்டு, 6.12.2019 அன்று ஒப்படைக்கப்பட்டன. அப்போதே, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள முத்தன்பள்ளம் கிராமத்திலும் வீடுகள் கட்டும்பணி ஆரம்பமானது.

வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நிர்வாகப்பூர்வமான பரிசீலனைகள் தொடர்ந்தன. கொரோனா வேறு குறுக்கிட்டது. அனைத்தையும் கடந்து, கடந்த நவம்பர் 18-&ம் தேதி, 13 குடும்பங்களிடம் முறைப்படி வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. மூன்று வீடுகளின் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. திருவாரூர் மாவட்டம், பூசலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரனின் குடிசையும் கஜா புயலால் சேதமடைய, அவருக்கும் வீடு கட்டித்தரப்பட்டுள்ளது.

அனைத்தையும் சாத்தியப்படுத்திய வாசகர்களின் சமூக அக்கறைக்கு வணக்கங்கள்!