Published:Updated:

ரீவைண்ட் 2021: காலநிலை மாற்றத்தின் தாக்கம் சென்ற ஆண்டு எப்படி இருந்தது? 2022-ல் எப்படி இருக்கும்?

காலநிலை 2021
News
காலநிலை 2021

இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது ரெட் அலர்ட் மழையால் சென்னை மிதந்துகொண்டிருக்கிறது. 2021 டிசம்பரின் இறுதியில் தொடங்கிய மழை இப்போதும் சென்னையில் தொடர்ந்தபடி எல்லாரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.

முன்னாலும் பின்னாலும் பார்க்கக்கூடிய இரண்டு முகங்களைக் கொண்ட ரோமானியக் கடவுளான ஜேனஸை அடிப்படையாகக் கொண்டுதான் ஆண்டின் முதல் மாதத்துக்கு 'ஜனவரி' என்ற பெயர் சூட்டப்பட்டது. கடந்துபோன ஆண்டைத் திரும்பிப் பார்த்துத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் எதிர்காலத்துக்கான சிறப்பான திட்டமிடல்களோடு ஒரு பயணத்தைத் துவக்குவதற்குமான மாதம் இது. மனித இனத்தின் எதிர்காலத்தையே நிர்ணயித்துக்கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் சென்ற ஆண்டில் எப்படி இருந்தது? 2022ல் எப்படி இருக்கப் போகிறது?

மனித வரலாற்றில் அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டுகளின் பட்டியலில் ஆறு அல்லது ஏழாவது இடத்தில் 2021ம் ஆண்டு இருக்கலாம் என்று உலக வானிலைக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. வெப்பநிலையைக் குறைக்கக் கூடிய 'லா நினா' என்ற பருவகால சுழற்சியின் தாக்கம் இருந்தபோதும், 2021ம் ஆண்டின் வெப்பம் மிகவும் கூடுதலாகவே இருந்தது என்றும், அதற்குக் காரணம் காலநிலை பாதிப்புதான் என்றும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். 2021ன் சராசரி உலக வெப்பநிலை, 1900ம் ஆண்டின் சராசரியை விட 1.09 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருந்திருக்கிறது.

காலநிலை மாற்றத்தை மறுப்பவர்கள்
காலநிலை மாற்றத்தை மறுப்பவர்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2013ம் ஆண்டிலிருந்தே அதிகரித்துவரும் கடல்மட்டம், 2021ம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 2020ம் ஆண்டில் தென்னமெரிக்காவில் தொடங்கிய வறட்சி, 2021ம் ஆண்டிலும் தொடர்ந்திருக்கிறது. உலகின் கடற்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை தாக்கியிருக்கிறது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆர்டிக் துருவப் பகுதியிலும் பல வெப்ப அலைகள் உருவாகி அங்குள்ள சூழலுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021ல் உலகளாவிய பசி அளவு 19% கூடியிருக்கிறது என்பது கவலையளிக்கும் ஒரு தகவல். முழு பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இதைத் தவிர பல நாடுகளில் உணவுப் பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கடந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள காலநிலை நிகழ்வுகளின் பட்டியல் மிகவும் பெரிது. அவற்றில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய சில நிகழ்வுகளை மட்டும் பார்க்கலாம்:

பிப்ரவரி: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் பனிப்புயல் வீசியது. சுமார் 170 பேர் இறந்தனர், 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதுவரை அமெரிக்காவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களிலேயே அதிகபட்ச பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது இந்த நிகழ்வுதான்.

மடகாஸ்கர்
மடகாஸ்கர்

மார்ச்: சீனாவில் தீவிரமான ஒரு புழுதிப்புயல் வீசியது. வானமே செக்கச்சிவந்துபோய் ஆரஞ்சு நிறத்தில் தெரியும் அளவிற்கு இது கடுமையானதாக இருந்தது.

ஏப்ரல்: இந்தோனேசியாவில் செரோஜா புயல் வீசியதில் 160 பேர் இறந்தனர். "கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு தீவிரமான புயலை சந்தித்ததில்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன்: வடமேற்கு பசிபிக் கடலை ஒட்டிய எல்லா பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை வீசியது. இதனால் 1400 பேர் இறந்தனர். "ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய இந்த நிகழ்வு, காலநிலை மாற்றத்தால் 150 மடங்கு தீவிரமடைந்திருக்கிறது" என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ஜூன்: மடகாஸ்கரில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவுக்காகப் போராடும் நிலை ஏற்பட்டது.

ஜூலை: சீனாவில் செங்க்சௌ நகரத்தில் ஒரு மணிநேரத்துக்குள் 201.9 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது! அதற்குப் பிறகும் பெய்த அதிகனமழை, இதுவரை சீன வரலாற்றிலேயே பெய்திராத மழை அளவாக இருந்தது. 301 பேர் மழைசார்ந்த பாதிப்புகளாலும் விபத்துக்களாலும் இறந்தனர்.

பிலிப்பைன்ஸ் ராய் புயல்
பிலிப்பைன்ஸ் ராய் புயல்
Jay Labra

டிசம்பர்: அமெரிக்காவின் கெண்டக்கியில் வீசிய ஒரு கடும் புயல், கிளைகளாகப் பிரிந்து 30 சிறு சூறாவளிகளாக மாறி 6 மாகாணங்களை உலுக்கியெடுத்தது. அமெரிக்காவில் மிக மோசமான சூறாவளிக்காலம் என்று இது குறிப்பிடப்படுகிறது. 90 பேர் இறந்த நிலையில் 1000 பேர் வீடுகளை இழந்திருக்கின்றனர்.

டிசம்பர்: பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய அதிதீவிரப் புயல் ராய் காரணமாக 375 பேர் இறந்தனர். 4 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். "புயல் வீசிய இடங்களில் இரண்டாம் உலகப் போர்க்காலத்தின் யுத்தகளங்களாகக் காட்சியளிக்கின்றன" என்று பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது ரெட் அலர்ட் மழையால் சென்னை மிதந்துகொண்டிருக்கிறது. 2021 டிசம்பரின் இறுதியில் தொடங்கிய மழை இப்போதும் சென்னையில் தொடர்ந்தபடி எல்லாரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. பிப்ரவரியில் இமயமலைப்பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவு, மழை வெள்ளம், கடும் புயல், வட இந்தியாவை வறுத்தெடுத்த ஜூலை வெப்ப அலை, அதிகரித்திருக்கும் மின்னல்கள் என இந்தியாவும் காலநிலை மாற்றத்தால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.
சென்னை மழை
சென்னை மழை

உலக அளவில் அதிகமான பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ள 10 காலநிலை நிகழ்வுகளில், இரண்டு நிகழ்வுகள் இந்தியாவைத் தாக்கியிருக்கின்றன. மே மாதம் குஜராத்தைத் தாக்கிய டவ் தே புயல் 100 கோடி பொருளிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே மாதத்தில் ஒடிசாவை உலுக்கிய யாஸ் புயலாலும் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. "இந்த ஆண்டு காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்னைகளால் 50.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமாகியிருக்கின்றன" என்று நவம்பர் 30ம் தேதி லோக்சபாவில் தெரிவித்தார் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமார்.

டவ் தே புயல்
டவ் தே புயல்
Rafiq Maqbool | AP

காலநிலை மாற்றத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம், தீர்வுகளுக்கான நமது பங்களிப்பு என்ன என்பதை அலசும் காலநிலை உச்சி மாநாடு 2021 நவம்பரில் க்ளாஸ்கோவில் நடந்து முடிந்திருக்கிறது. 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், நிகர பூஜ்ய உமிழ்வு, மின்சார வாகன பயன்பாடு, காடு அழிப்பைத் தடுத்தல், மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி உதவி போன்ற பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

COP26
COP26

கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்த நிகழ்வு எப்படிப்பட்ட முடிவுகளைக் கொண்டுவரும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநாட்டின் முடிவுகளில் சில போதாமைகள் இருந்தாலும் இது ஒரு முன்னோக்கிய நகர்வு என்பதில் சந்தேகமில்லை. அந்த அடிப்படையில் காலநிலை விவாதங்களுக்கான ஆண்டாகவும் 2021 மாறியிருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் மறு ஆய்வு மாநாடுகள் கூடுதல் செயல்பாடுகளை முன்வைக்கும் என்று நம்புவோம்.

2021 நவம்பர் மாதத்தில் காலநிலை திட்ட வரைவு மசோதா ஒன்றை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கும் ஊக்கமளிப்பதே உலக அரசியலின் வழக்கம் என்பதால், மற்ற நாடுகள் முன்பு பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவாவது அதிக உமிழ்வுகளை வெளியிடும் பிற நாடுகளும் இதுபோன்ற மசோதாக்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் மாசு
சுற்றுச்சூழல் மாசு

2022ம் ஆண்டில் குளிர் நிகழ்வான 'லா நினா'வின் வீரியம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் வெப்பநிலை பொதுவான சராசரியை விட அதிகமாகவே இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அட்லாண்டிக் கடல் புயல்கள், கடுமையான காலநிலை நிகழ்வுகள், காட்டுத்தீ பேரிடர்கள் ஆகியவை இந்த ஆண்டில் குறைவாக இருக்கும் என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தக் கணிப்புகள் ஆசுவாசம் தருகின்றன என்றாலும் தீர்வை நோக்கிய நகர்வை நிறுத்த முடியாது, நிறுத்தவும் கூடாது. நிகர பூஜ்ய உமிழ்வு, கரிமத் தொழில்நுட்பங்கள், நிலக்கரி பயன்பாட்டைக் குறைப்பது, வளங்குன்றா ஆற்றலை நோக்கி நகர்வது என்று எல்லா தளங்களிலும் நாம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். காலநிலை மாற்றத்தின் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் செயல்பட்டால் மட்டுமே மனித இனத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

ஐ.நா சபைத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி,

"மீண்டெழுதல் என்பதை 2022ம் ஆண்டுக்கான இலக்காக வைத்துக்கொள்வோம்!"