Published:Updated:

சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு; அச்சுறுத்தும் வெட் பல்பு டெம்பரேச்சர்!

கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த வெப்ப அலையில் WBT 30 டிகிரியை எட்டிவிட்டது. இதில் 2,500 நபர்கள் உயிரிழந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் சென்னையில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 26,500-க்கும் அதிகமான மக்கள் வசித்துவருகிறார்கள் என்கிறார்கள். சென்னையில் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரிப்பது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் காற்று மாசுபாடும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

சென்னை
சென்னை

சமீபகாலமாக, காற்று மாசுபாடு என்பது உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன், 1% கரியமில வாயு ஆகியவையும், மேலும் சில வாயுக்களும் உள்ளன. அனைத்து வாயுக்களும் சமநிலையில் இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் கிடையாது. அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, அழிக்கப்படும் காடுகள் அனைத்துமே இந்த வாயுக்களின் சமச்சீர் நிலையை மாற்றமடையச் செய்துள்ளன. சமச்சீர் நிலை மாறுவதைப் பின்வருமாறு நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

PM 2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள். காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவுதான் (பி.எம் 2.5). ஒரு மனித முடியைவிட 100 மடங்கு மெலிதானது. எரிபொருள் மற்றும் வளிமண்டலத்தில் நிகழும் ரசாயன எதிர்வினைகளின் விளைவாக இந்தத் துகள்கள் உருவாகின்றன.

காற்றின் தரத்தின் அளவு
காற்றின் தரத்தின் அளவு

காற்றின் தரநிலை என்பது, கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, அம்மோனியா, பி.எம் 2.5, பி.எம்10, டிரை ஆக்சிஜன், லெட் போன்ற எட்டு மாசுபடுத்திகளின் 24 மணிநேர கணக்கீட்டைக்கொண்டு மாசு 0-500 அளவில் நல்ல (0-50), திருப்திகரமான (51-100), மிதமானது (101-200), மோசம் (201-300), மிக மோசம் (301-400), கடுமையான (401-500) என்று ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.எம் 2.5 - ன் அனுமதிக்கப்பட்ட அளவு 60 மைக்ரோ கிராம். இந்த அளவு அதிகரிக்கும்போது காற்றின் நுண்துகள்கள் மாசடைந்து காணப்படும். காற்றில் சிலிகான் அளவு அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு நுரையீரல் பிரச்னை ஏற்படும். மாங்கனீஸ் அளவு அதிகரிக்கும்போது, நரம்பியல் பிரச்னை அதிகரிக்கும். மாங்கனீஸ் மிக அதிகமாக வெளியாகும்போது, மூளைச் சிதைவு வரை ஏற்பட வாய்ப்புள்ளது. நிக்கல் அதிகரிக்கும்போது மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் சுமார் 11,000 பேர் உயிரிழந்ததாக கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியா அமைப்பின் ஆய்வு முடிவு கூறுகிறது.

காற்று மாசுபாடு (கோப்பு படம்)
காற்று மாசுபாடு (கோப்பு படம்)

ஹெல்த்தி எனர்ஜி இனிஷியேட்டிவ் என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சென்னையில் 20 இடங்களில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவு (பி.எம் 2.5) 60 மைக்ரோ கிராமைவிடச் சென்னையின் பல இடங்களில் பலமடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தலைநகர் சென்னையில் ஒருபுறம் காற்று மாசுபடு அதிகரித்துவரும் சூழலில் இன்னொரு புறம் வெட் பல்பு டெம்பரேச்சர் (Wet Bulb Temperature - ஈரக்குமிழ் வெப்பநிலை) அதிகரித்துவருகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. வெட் பல்பு டெம்பரேச்சர் என்பது, மனித உடலின் தோல் வெப்பநிலை, 35°C-ஐ விட அதிகமாக இருந்தால், வியர்வையால் இனி உடலைக் குளிரூட்டும் வகையில் செயல்பட முடியாது, இதனால் உடல் விரைவாக வெப்பமடையும். அதனால் மரணம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலைகளால் மட்டும் 6,000-க்கும் அதிகமான இறப்புகள் நடந்துள்ளன.

காற்று மாசு
காற்று மாசு
`காற்று மாசு... போயே போச்சு...'; ஊரடங்கு கொடுத்த பரிசு! -பசுமை மண்டலங்களான டெல்லி, மும்பை

ஒவ்வொரு நகரத்தின் பகுதிக்கும், அதன் வெப்பநிலை, ஈரப்பதம் (Humidity) ஆகியவற்றைக்கொண்டு இந்த வெட் பல்பு டெம்பரேச்சர் (WBT) கணக்கிடப்படுகிறது. இந்த வெப்பநிலையை ஒரு பகுதி எட்டிவிட்டா,ல் நம் உடல் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்ளும் தன்மையை இழந்துவிடும். அதன் பிறகு குளிர்சாதன வசதியில்லாமல் இருக்க முடியாது. எவ்வளவுதான் அதிக வெப்பத்துக்குப் பழகியிருந்தாலும் இந்த WBT 32 -டிகிரியை எட்டிவிட்டாலே நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. 35 டிகிரியை எட்டிவிட்டால் மரநிழலில் இருந்தால்கூட 6 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துவிடும். கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த வெப்ப அலையில் WBT 30 டிகிரியை எட்டிவிட்டது. இதில் 2,500 நபர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``சென்னையில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளாக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து அவற்றை முறைப்படுத்த வேண்டும். சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பதுபோலவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெட் பல்பு டெம்பரேச்சர் 27 டிகிரியை எட்டிவிட்டது. இதேநிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் சென்னையில் 209 நாள்கள் அதிக வெப்பம் நிறைந்த நால்களாக இருக்கும் எனக் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் (IPCC) அறிக்கை தெரிவிக்கிறது" என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன்
சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன்

தொடர்ந்து பேசியவர், ``இது குறித்துப் பெரிதாக யாரும் பேச முன்வருவது கிடையாது. இந்த வெட் பல்பு டெம்பரேச்சர் அதிகரிப்பது பின்னாளில் பெரும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிக்காமல் இருக்க, தமிழகத்தில் காலநிலை அவசரநிலையை அறிவிக்க வேண்டும். மேலும் வாகனங்களில், தொழிற்சாலைகளில், அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கார்பனின் அளவைக் குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். உடனடியாக வெப்பநிலையைக் குறைப்பதற்கும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்" என்று கூறினார்.

சென்னையைப் பொறுத்தவரை 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வர்தா புயல்
வர்தா புயல்

தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருப்பது வெறும் 2.75 லட்சம் மரங்கள்தான். நகர விரிவாக்கம் என்ற பெயரில் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வர்தா புயலின்போது மட்டும் விழுந்த மரங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு