Election bannerElection banner
Published:Updated:

காடு, ஆறு, மலை கடக்கும் ஆபத்தான பயணம்... அகதிகளின் துயர வாழ்க்கை!

refugees

ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் எனக் குடும்பமாகவும் தனியாகவும் அமெரிக்கா நோக்கிய தங்களது பயணத்தைத் தொடங்குகிறார்கள். அவர்கள் பயணிக்கிற பாதையும், பயணமும் அத்தனை பேரையும் அவ்வளவு எளிதில் காலம், அமெரிக்காவிற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடாது.

இது வரை வாழ்ந்த நாட்டை விட்டு கிளம்ப முடிவாகிற தருணம் மனதிற்கு மிகப் பெரிய மனதிடத்தைத் தரும். அது பல போராட்டங்களைச் சந்திக்க வைக்கும். வீடு, நாடு, சொந்தம், உறவுகள் என எல்லாவற்றையும் முழுதாக இழக்க வேண்டும். எல்லாவற்றையும் இழந்து பயணிக்கின்ற அவர்களுக்குக் கிடைப்பது அகதி என்கிற பெயர் மட்டும்தான். உலகம் முழுக்க அகதிகள் இருக்கிறார்கள், அவர்கள் பற்றிய கதை தெரிந்தவர்களுக்கு அவ்வளவாக அவர்களின் பயணக் கதை தெரிய வாய்ப்பில்லை.

பான் அமெரிக்கன் சாலை, கொலம்பியா, டேரியன் கேப் (Darien Gap), பனாமா, எல் பாசோ, ரியோ கிராண்டே, அமெரிக்கச் சுவர் இந்த 7 பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெயர்கள் எல்லாம் பல லட்சம் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பெயர்கள். இந்தப் பெயர்கள் குறித்துத் தெரிந்து கொண்டால் கட்டுரையின் கருவுக்குள் செல்வதற்கு எளிதாக இருக்கும்.

பான் அமெரிக்கன் சாலை
பான் அமெரிக்கன் சாலை
கூகுள்

பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை PAN AMERICAN HIGHWAY தேசிய நெடுஞ்சாலை சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் கொண்டது. 14 நாடுகளின் நெடுஞ்சாலைகளை இணைக்கும் நெட்வொர்க் சாலை. அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்க நாடான சிலியின் நகரமான Quellon வரை செல்லக்கூடிய சாலை. சட்ட விரோத கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நிகழ இந்தச் சாலை மிக முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் இந்தச் சாலையில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்தச் சாலை ஓரிடத்தில் துண்டிக்கப்படுகிறது. அந்த இடத்திற்குப் பெயர் டேரியன் கேப்.

டேரியன் கேப் (Darien Gap).

பான் அமெரிக்கன் சாலையை இந்த இடம்தான் உடைக்கிறது. சுமார் 106 கிலோமீட்டர்கள். கொலம்பியா மற்றும் பனாமா நாடுகளின் எல்லைப்பகுதி. முழுவதும் மலைக்காடுகள் நிறைந்த வனப்பகுதி. பல மலைகளையும், ஆறுகளையும் கொண்டது. பாம்புகள், அட்டைகள், விலங்குகள் என அத்தனையும் நிரம்பியிருக்கிற காடு. கடத்தல்காரர்களின் சொர்க்கபுரி. சட்ட விரோதச் செயல்களைத் தடுக்க இராணுவத்தால் பாதுகாக்கப்படும் பகுதி. இந்தப் பகுதியை இயற்கையால் எழுப்பப்பட்ட சுவர் என அழைக்கிறார்கள்.

டேரியன் கேப்
டேரியன் கேப்
secretcompass

கொலம்பியா

நீங்கள் எதையெல்லாம் குற்றம், கடத்தல், சட்டவிரோதம் என நினைக்கிறீர்களோ அவை அனைத்தும் நடக்கிற இல்லீகல் பவர் ஹவுஸ். உலகின் எல்லா மூலைக்கும் இங்கிருந்துதான் போதைப் பொருள், ஆயுதம், மனிதர்கள் என எல்லா சட்ட விரோத சப்ளை நடக்கிற நாடு. சில நாட்டின் வரலாறுகள் அவ்வளவு எளிதில் மாற்றி எழுதப்படுவதில்லை. அதில் ஒரு நாடு கொலம்பியா. போதைப்பொருள் குற்றங்களின் ஏதாவது ஒரு கிளையைப் பிடித்துப் பயணிக்க ஆரம்பித்தால் அதன் வேர் கொலம்பியாவில்தான் போய் முடியும். அப்படித்தான் பல்வேறு நாடுகளும் கொலம்பியா குறித்துக் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள். கடத்தலுக்கு முக்கிய நாடாக கொலம்பியா இருப்பதற்கு இன்னொரு காரணம் அமெரிக்க டாலர். கொலம்பியாவில் அமெரிக்க டாலருக்கான மதிப்பு இன்றைய தேதியில் ஒரு டாலருக்கு 3214 (பெசோ) ரூபாய்.

Vikatan

பனாமா

கொலம்பியாவிலிருந்து வருகின்ற அத்தனை சட்டவிரோத பொருள்களும் இந்த நுழைவாயிலைத் தாண்டித்தான் வந்தாக வேண்டும். பல சட்ட விரோத கும்பல்கள் பல குழுக்களாக இங்கே முகாமிட்டு இருப்பார்கள். ஏனெனில் அத்தனை சட்டவிரோத பொருள்களும் இந்த இடத்திலிருந்துதான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறது. பான் அமெரிக்கன் சாலை இருப்பது கடத்தலுக்குக் கூடுதல் பலம்.

எல் பாசோ, அமெரிக்கச் சுவர்

அமெரிக்காவின் எல்லை தொடங்குகிற இடம். மெக்சிகோ நாட்டின் எல்லை முடிகிற இடம் எல் பாசோ. உலக வல்லரசு நாட்டின் நுழைவாயில். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் இருக்கிறார்கள். தீவிர சர்வைலன்ஸ் பகுதி. எல்லா வாகனங்களும் பல கட்டச் சோதனைக்குப் பிறகே அமெரிக்க எல்லைக்குள் அனுமதிக்கப்படும். எல் பாசோவில் தொடங்கி சான் டியாகோ எல்லை வரை அமெரிக்கா எல்லைச் சுவர் எழுப்பியிருக்கிறது. இந்தச் சுவர் 1000 கிலோமீட்டர்கள் கொண்டது. வெளிநாட்டவர்கள் யாரும் அமெரிக்காவிற்குள் வந்துவிடக்கூடாது என்கிற காரணத்தால் இந்தச் சுவர் எழுப்பப்பட்டது. இந்தச் சுவருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்தச் சுவர் அமெரிக்க அரசியலில் மிகப் பெரிய துருப்புச் சீட்டு.

அமெரிக்கா சுவர்
அமெரிக்கா சுவர்
REUTERS

ரியோ கிராண்டே

அமெரிக்காவின் முக்கியமான ஆறு. பல கிளை நதிகளைக் கொண்டது. அமெரிக்காவில் உருவாகி சுமார் 3060 கிலோமீட்டர்கள் பாய்ந்து அமெரிக்க எல்லையைக் கடந்து மெக்சிகோ கடலில் கலக்கிறது. இந்த ஆறுதான் அமெரிக்க-மெக்சிகோ நாடுகளைப் பிரிக்கிற சர்வதேச எல்லை. ஆற்றின் ஒருபுறம் அமெரிக்காவுடையது, இன்னொரு பகுதி மெக்சிகோ நாட்டுடையது. இந்தக் கட்டுரையின் கதையும் ரியோ கிராண்டே நதியில் தொடங்கி இதே ரியோ கிராண்டே ஆற்றில்தான் முடிய இருக்கிறது. அமெரிக்காவிற்கு அகதிகளாகச் செல்லும் மக்களின் சொல்லப்படாத ஒரு துயரமான கதை.

மக்கள் இரண்டு காரணங்களுக்காக தங்களுடைய சொந்த நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டில் அகதிகளாக அடைக்கலமாகிறார்கள். ஒன்று உள்நாட்டுக் கலவரம் அல்லது போர் போன்ற காரணங்களுக்காகப் பிழைத்தால் போதும் என்று வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வார்கள். இன்னொன்று சொந்த நாட்டின் வேலை வாய்ப்பின்மை, வறுமை, குழந்தைகள் எதிர்காலம் போன்ற காரணங்களால் வேறு ஒரு நாட்டிற்கு இடம்பெயர்வார்கள். இந்த இரண்டு காரணங்களாலும் சொந்த நாட்டை விட்டுச் செல்கிற மக்களின் முதல் நம்பிக்கை “எப்படியாவது அமெரிக்காவிற்குச் சென்றுவிட வேண்டும்” என்பதுதான். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. அமெரிக்கா போக வேண்டுமெனக் கிளம்புகிற ஒவ்வொருவருக்கும் அவர்களது கதைகளோடு சேர்த்துப் பல கனவுகளும் இருக்கின்றன. பணம், வேலை, உறவுகள், நிம்மதி, எதிர்காலம் என அமைதியான ஒரு வாழ்க்கையை விரும்பியவர்கள். ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் எனக் குடும்பமாகவும், தனியாகவும் அமெரிக்கா நோக்கிய தங்களது பயணத்தைத் தொடங்குகிறார்கள். அவர்கள் பயணிக்கிற பாதையும், பயணமும் அத்தனை பேரையும் அவ்வளவு எளிதில் காலம், அமெரிக்காவிற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடாது.

பனாமா எல்லையை கடக்கும் அகதிகள்
பனாமா எல்லையை கடக்கும் அகதிகள்
AL ZAZEERA

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குச் சட்ட விரோதமாகக் கிளம்புகிற அவர்கள் முதலில் கொலம்பியாவைக் கடந்தாக வேண்டும். முதலில் சட்ட விரோதமாக அழைத்துச் செல்லும் கொலம்பியா முகவர்களைச் சந்திக்க வேண்டும். அவர்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் இதற்காகப் பல ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு தொழில். முதலில் சந்திக்கிற ஏஜெண்டிற்கும் அடுத்துச் சந்திக்கிற ஏஜெண்டிற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இது மறைமுகச் சங்கிலித் தொடர் நிகழ்வு. எப்படிச் செல்லப்போகிறோம், யாருடன் செல்லப் போகிறோம் என்கிற எந்தக் கேள்விகளும் இடம்பெயர்கின்ற மக்களுக்கு இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கா சென்றாக வேண்டும்.

ஆயுதக்கடத்தல், போதை மருந்துக் கடத்தல் போன்றவை வெளியே தெரிந்து விடுகிற சம்பவங்கள். ஆனால் மனிதக் கடத்தல் வெளியே தெரியாத சம்பவங்கள். மனிதனுக்கே தெரியாமல் மனிதனைக் கடத்துவதெல்லாம் சாதாரணமாக கொலம்பியாவில் நடக்கும். அது, துயரங்களை விலை பேசுகிற இடம். தவறான மனிதர்களிடம் சிக்கிவிட்டால் காலத்துக்கும் யாரோ ஒருவரிடம் அடிமையாகவே இருக்க வேண்டி வரும். தென் ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல இந்தியா, நேபாளம், வங்கதேசம், இரான் எனப் பல நாடுகளிலிருந்தும் வருகிற மனிதர்கள் அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல இது ஒன்றுதான் வழி. வான் வழியாகவோ, அல்லது கடல் வழியாகவோ தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்பவர்கள் அங்கிருந்து தரை வழியாகக் கொலம்பியா சென்றுவிடுகிறார்கள். விமானம் மூலம் ஈக்வடார் நாட்டின் க்வாயேகில் நகருக்கு (guayaquil) வந்து அங்கிருந்து கொலம்பியாவிற்குப் பயணிக்கிறார்கள்.

பனாமா காடு
பனாமா காடு
Carlos Villalon wallstreet

ஈக்வடார் நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல விசா தேவையில்லை என்பதால் இந்த நாட்டை இந்தியர்கள் தேர்வு செய்கிறார்கள். கடல் வழியாக வருகிறவர்கள் கொலம்பியாவின் கடற்பகுதி எல்லையான காப்பர் கானா (Capurgana) வந்து அங்கிருந்து சாலை வழியாகக் கொலம்பியா, பனாமா எல்லைக்கு வந்து சேருகிறார்கள். கொலம்பியாவிற்கு வந்து சேருகிற ஒவ்வொருவரும் ஏஜெண்டுகள் மூலம் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். காடுகள், ஆறுகள் வழியாகப் பயணித்து டேரியன் கேப் (Darien Gap) பகுதிக்கு வந்து சேர்கிறார்கள். எல்லா இடங்களிலும் அகதிகளை அழைத்துச் செல்ல வழிகாட்டிகள் இருக்கிறார்கள்.

காடு, ஆறு, மலை கடக்கும் ஆபத்தான பயணம்... அகதிகளின் துயர வாழ்க்கை!

அவர்களது முழுநேரப் பணியே சட்டவிரோதமாக மக்களை இன்னொரு நாட்டின் எல்லைக்கு அழைத்துச் செல்வதுதான். சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவிற்குச் சென்றால் ஆறு லட்ச ரூபாய் செலவாகும், சட்டவிரோதமாகச் சென்றால் 3 லட்சம் ரூபாயில் அமெரிக்காவுக்குச் சென்று விடலாம். அதனால் இன்னொரு நாட்டில் குடியேற எல்லா மக்களும் சட்டவிரோதப் பயணத்துக்குத் துணிந்து விடுகிறார்கள். இடம்பெயர்கிற மக்களை மையமாக வைத்து அரசியல் நடக்கும்; பிழைப்பு நடக்கும். இது குறித்துத் தெரியாத மக்கள் அவற்றைச் சார்ந்துதான் பயணித்தாக வேண்டும்.

கொலம்பியா எல்லையைக் கடந்து டேரியன் கேப் (Darien Gap) பகுதியிலிருக்கும் காட்டைக் கடந்தாக வேண்டும். அவர்களோடு ஒரு வழிகாட்டி வருவார். அவருக்கு அந்தக் காட்டின் அத்தனை இடங்களும் வழிகளும் தெரியும். 106 கிலோமீட்டர்கள் கடந்தாக வேண்டும் என்றால் சுமார் 20 நாள்கள் அந்தக் காட்டில் பயணித்தாக வேண்டும். மலைகள், மேடுகள், ஆறுகள் எனப் பல சவால்களைக் கடந்தாக வேண்டும். விடியற்காலையில் நடக்க ஆரம்பித்துச் சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து நடந்து கொண்டே இருக்கவேண்டும். பெரும்பாலானோருக்கு உணவே தண்ணீர் மட்டும்தான். இரவில் மொத்தமாக ஓரிடத்தில் தங்குவார்கள். கொசு கடிக்கும், நோய்த் தொற்று ஏற்படும், உடல் ஒத்துழைக்க மறுக்கும், உயிர் பிரிந்தால் உடல் மட்டும் அங்கேயே கிடக்கும், உடன் பயணித்தவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்குவார்கள். மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடியிலும் அவ்வளவு வலி இருக்கும். எல்லாத் துயரங்களையும் கடந்து காலம் அவர்களை நடக்க வைக்கும். தேவையானது என எதையெல்லாம் கொண்டுவந்திருப்பார்களோ அவையெல்லாம் சுமையென ஒவ்வோர் இடத்திலும் வீசிவிட்டு நடக்க ஆரம்பிப்பார்கள். வலியோடு வழியில் போவதெல்லாம் எவ்வளவு பெரிய துயரம்.

டேரியன் கேப் அகதிகள் பயணம்
டேரியன் கேப் அகதிகள் பயணம்
கூகுள்

ஆனால் எல்லாமே அதோடு முடிந்து விடுவதில்லை. அடுத்த சவால் இவற்றை விட மோசமானது. பனாமா எல்லையிலிருந்து, பான் அமெரிக்க நெடுஞ்சாலை தொடங்கி விடுவதால் எளிதாக வாகனங்களில் பயணித்து அடுத்த நாட்டின் எல்லையை அடைந்து விடலாம். ஆனால் அப்படியெல்லாம் தப்பிச் செல்ல எந்த நாட்டின் ராணுவமும் விட்டு விடுவதில்லை. கடத்தலுக்குப் பெயர் போன கொலம்பியாவிலிருந்து வருகிற எல்லோரும் ஒவ்வோர் இடத்தில் கைது செய்யப்படுவார்கள். இடம்பெயர்கிற மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். முறையான ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டுக் குறிப்பிட்ட நாள்களுக்குள் அடுத்த நாட்டின் எல்லைக்குள் போக அனுமதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் ஓரிரண்டு நாள்களில் நடந்துவிடாது, வாரங்கள் ஆகலாம், மாதங்கள் கூட ஆகலாம். அது வரை காத்திருக்க வேண்டும். பிறகு தரை வழியாக அடுத்த நாட்டின் எல்லைக்குள் சென்றாக வேண்டும். எல்லா நாடுகளிலும் இந்த முறைதான். முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் மீண்டும் கொலம்பியாவிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். அகதிகளை அணுகுவது குறித்து எல்லா நாடுகளுமே சில சட்டத் திட்டங்களை வகுத்து வைத்திருக்கின்றன. அகதிகளுக்கு ஆதரவாகச் சில நாடுகளும் இருக்கின்றன. அவை ஆவணங்கள் சரிபார்த்து எல்லையைக் கடக்க அனுமதிக்கின்றன.

திருப்பி அனுப்பப்படுபவர்கள் பணம் இருந்தால் மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் அமெரிக்கா போனால்தான் வாழ்க்கை என நினைப்பவர்கள் அவ்வளவு எளிதில் திரும்புவதில்லை. அங்கிருக்கும் பொழுதே பல ஏஜெண்டுகளின் தொடர்பு கிடைக்கும். ஏஜெண்டுகள் பணத்தை வாங்கிக் கொண்டு ஆபத்தான இன்னொரு வழியைக் காட்டுவார்கள். இப்போது முன்பை விடக் குறைவான பணமே தேவைப்படும். ஆனால் ரிஸ்க் அதிகம். எல்லையைக் கடக்கும் சரக்கு ரயில்களில் உயிரைப் பணயம் வைத்து ஏறிவிடுவார்கள். இதில் தவறுபவர்கள் உடல்கள் அங்கேயே கிடக்கும். குழந்தைகள், பெண்கள் என ஒவ்வொருவராக ஓடுகிற ரயிலில் ஏறுவார்கள். இந்த ரயிலில் தன்னுடைய பிள்ளைகளை ஏற்றிவிட்டுப் பிறகு அவர்களைத் தொலைத்தவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் இன்னொரு நாட்டிற்கு அகதிகளாகப் போவதில் கூட அவ்வளவு ஆபத்தில்லை, அகதிகளாகப் பயணத்தைக் கடப்பதுதான் மிகப் பெரிய ஆபத்து. கொலம்பியாவிலிருந்து ஆறு நாடுகளின் எல்லைகளைக் கடக்க வேண்டும்.

Vikatan

பல நாள்கள் பல மாதங்கள் கடந்து கடைசியாக மெக்சிகோ எல்லைக்கு வருகிறவர்கள் கைது செய்யப்பட்டு பல கட்டச் சோதனைக்குப் பிறகு மீண்டும் விடுவிக்கப்படுவார்கள். இன்னும் ஒரே ஒரு நாட்டின் எல்லையைக் கடந்துவிட்டால் அமெரிக்கா சென்றுவிடலாம். ஆனால், உலக வல்லரசான அமெரிக்காவின் எல்லை, மற்ற நாடுகளைப் போல் இல்லை. ஒவ்வொரு நாட்டின் எல்லையும் ஒரு துயரத்தைக் கொடுக்கும். பல போராட்டங்களைச் சந்தித்தாக வேண்டும். நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கடைசி வரை பயணிக்கிறவர்கள் மட்டுமே அமெரிக்க எல்லையை அடைகின்றனர்.

அமெரிக்கா எல்லை சுவர்
அமெரிக்கா எல்லை சுவர்
Guillermo Arias

வாழ வேண்டும் என்கிற ஆசை, ஒருவனை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது, தவறிக்கூட அமெரிக்க எல்லைக்கு மட்டும் அனுப்பிவிடக் கூடாது. அமெரிக்காவின் எல் பாசோ நகரத்தில் இருக்கிறது மெஸ்சிக்கோ-அமெரிக்கச் சர்வதேச எல்லை. சுங்க அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள், அதி நவீன கேமராக்கள் என அனைத்தையும் கடந்து உள்ளே செல்வது என்பது முடியாத காரியம். வேறு வழியின்றி சிலர் போலீஸிடம் சரணடைந்து விடுவார்கள். அவர்கள் அமெரிக்க போலீஸால் கைது செய்யப்படுவார்கள் அல்லது தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

சட்டச் சிக்கல் எதுவுமில்லாமல் உடனடியாக எப்படியாவது அமெரிக்கா செல்ல வேண்டுமென நினைப்பவர்கள் வேறு இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒன்று அமெரிக்க எல்லைச் சுவர், இன்னொன்று ரியோ க்ராண்டே ஆறு. அமெரிக்க எல்லைச் சுவர் 1000 கிலோமீட்டர்கள் கொண்டது. வெளிநாட்டவர்கள் யாரும் அமெரிக்காவிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்கிற காரணத்தால் இந்தச் சுவர் எழுப்பப்பட்டது. இந்தச் சுவருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்தச் சுவர் அமெரிக்க அரசியலில் இப்போது மிக முக்கிய அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. 1993-ல் அதிபர் பில் கிளின்டன் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் அமல்படுத்திய பின், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. அந்த எல்லையில் காவலர்களும் ரோந்துப் படையும் அமைக்கப்பட்டன. எல்லை தாண்டி யாரும் வராமல் இருக்க, புதிய தொழில்நுட்பங்கள் பின்தொடரப்பட்டன. ஏறத்தாழ 20 கிலோமீட்டர்களுக்குச் சுவர் கட்டப்பட்டது.

2001 - ட்வின் டவர் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா-மெக்சிகோ எல்லை முழுவதும் பாதுகாக்கப்பட்டது. காவல்துறையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 2006-ல் அதிபர் ஜார்ஜ் புஷ் கொண்டுவந்த எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், ஏறத்தாழ 1000 கிலோமீட்டர்களுக்கு எல்லைகளில் சுவர்கள், வேலிகள், தடுப்பாண்கள் முதலானவை அமைக்கப்பட்டன. இதற்குத் தேசப் பாதுகாப்பு காரணமாகச் சொல்லப்பட்டது.

அகதிகள் இன்போ
அகதிகள் இன்போ
விகடன் டீம்

2011-ல் 1000 கிலோமீட்டர்களுக்குத் தடுப்பரண்கள் அமைக்கும் பணி முடிவடைந்தது. கண்காணிப்பு ட்ரோன்கள் பயன்படுத்தி, பாதுகாப்பை உறுதிசெய்யும் 'விர்ச்சுவல் சர்வயலன்ஸ்' திட்டத்திற்கான நிதியை ஒபாமா அரசு குறைத்தது. 2015-ல் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் எனவும், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது கடுமையாக்கப்படும் எனவும் அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்தார். ஜனவரி, 2017-ல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற சில நாட்களில், எல்லையில் சுவர் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2017 ஏப்ரல் மாதம், அமெரிக்க நாடாளுமன்றம் ட்ரம்பின் வாக்குறுதியான சுவருக்கு நிதி வழங்க மறுத்தது. அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையின் பெயரில், சுவர் கட்டுவதற்கான குறுகிய கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதில் ட்ரம்ப் கையொப்பமிட்டார்.

BORDER WALL DESIGN
BORDER WALL DESIGN
TWITTER

2017 மே மாதத்தில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கட்டப்படவிருக்கும் சுவருக்கான மாதிரிகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன. மார்ச், 2018-ல் அமெரிக்க நாடாளுமன்றம் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்க ஒப்புதல் தந்தது. அக்டோபர் 2018-ல், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காகவும் அதற்கு நிதி ஒதுக்குவதற்காகவும் தனிச்சட்டம் உருவாக்கப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமலாக்கப்பட்டது. டிசம்பர் 2018-ம் ஆண்டிலும் ஜனவரி 2019-ம் ஆண்டிலும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக ட்ரம்ப் கோரிய 5.7 பில்லியன் டாலர் பணத்தைத் தருவதற்கு நாடாளுமன்றம் மறுத்தது. இதனால் அரசுக் கோப்புகளில் ட்ரம்ப் கையொப்பமிட மறுக்க, அமெரிக்காவின் அரசு நிறுவனங்கள் பணியின்றி 35 நாள்களுக்கு முடங்கின. பிப்ரவரி 2019-ல் அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக அவசர நிலையை அமல்படுத்தினார்.

இப்படிப் பல பில்லியன் பணத்தை முழுங்கிய சுவரைத் தாண்டுவதென முடிவெடுத்துக் கிளம்புகிறவர்களில் பத்தில் 8 பேர் இறந்து போகிறார்கள். சுவர் தாண்டும் பொழுது துப்பாக்கிச் சூடு நடக்கும், தவறி விழ வேண்டி வரும். அகதிகள் என்கிற போர்வையில் சட்ட விரோதச் செயல் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதால் அமெரிக்க போலீஸார் கவனமுடன் இருப்பார்கள். அடுத்து இருக்கிற ஒரே வழி, ரியோ கிராண்டே ஆறுதான். அதைக் கடந்து அமெரிக்கா செல்வதும் ஆபத்துதான். ஏனெனில் இரண்டு பக்கமும் இருக்கிற ராணுவ நடவடிக்கைகளைவிட அந்த ஆறு ஆபத்தானது. அமெரிக்காவிலிருந்து தொடங்கி மெக்ஸிகோ கடலில் கலக்கிறது. அமெரிக்காவுக்குள் செல்ல மக்களுக்கு இருக்கிற கடைசி வழி இது மட்டும்தான்.

ட்ரம்ப் சுவர்
ட்ரம்ப் சுவர்

ஆறு வருகிற எதிர் திசை நோக்கி நடக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சாத்தியமல்ல. ஆழம் குறைவான இடம் பார்த்து ஆற்றை கடக்க வேண்டும். உயிரைப் பணயம் வைத்து ஆற்றில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த ஆறுதான் கடைசி சவால். கடந்த மாதம் 23 தேதியன்று மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரைச் சேர்ந்த ஆஸ்கர் அல்பெர்டோ என்னும் நபர் அமெரிக்காவில் குடியேறுவதற்கான கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேறு வழியில்லை, ரியோ கிராண்டே ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவது என்ற முடிவை எடுத்தார். குழந்தை, மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்தார். முதலில் மகளும், தந்தையும் ஆற்றைக் கடக்கின்றனர். மகளை கரையில் விட்டுவிட்டு மறு முனையில் இருக்கும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மீண்டும் ஆற்றில் இறங்குகிறார். தந்தை ஆற்றில் இறங்குவதைப் பார்த்த 2 வயது மகளும் ஆற்றில் இறங்கிவிடுகிறார். குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மகளை நோக்கி ஓடுகிறார் ஆஸ்கர். அதற்குள் குழந்தை தடுமாறி ஆற்றில் விழுகிறது.

குழந்தையைக் காப்பாற்ற ஆற்றுக்குள் சென்ற ஆஸ்கர், குழந்தையைக் காப்பாற்றி தனது சட்டைக்குள் வைத்து நீந்த முயன்றிருக்கிறார். ஆனால், முடியாமல் தோற்றுப்போகவே இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாகக் கரை ஒதுங்கினார்கள். இரண்டு நாள்கள் கழித்து அவர்களின் புகைப்படம் வெளியானது. தந்தையின் சட்டைக்குள் இருக்கும் 2 வயது மகளின் கை, தந்தையின் கழுத்தைச் சுற்றி இருக்கும் இந்தக் காட்சியைப் பார்த்து உலகமே உறைந்து போனது.

அழுகை, வேதனை, வலி, வெறுப்பு எல்லாம் ஒருநாள் மாறும். அவர்கள் விரும்பிய வாழ்க்கை ஒரு நாள் கிடைக்கும். காலம் அதை உருவாக்கும். அதை அவர்கள் திடமாக நம்புகிறார்கள். நாமும் பிரார்த்திப்போம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு