Published:Updated:

எங்கு விதைக்கணும்; அதன் நன்மைகள் என்ன? - விதைப்பந்து தாம்பூலம் வழங்கி அசத்திய மணமகள் வீட்டார்

தாம்பூலமாக வழங்கப்பட்ட விதைப்பந்துகள்.
தாம்பூலமாக வழங்கப்பட்ட விதைப்பந்துகள்.

`மண்ணில் செழித்து வளர்ந்து நிற்க வேண்டிய மரங்கள் எல்லாம் வேருடன் வீழ்ந்து கிடந்த சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. அப்போதே எனக்குள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு மாற்றாக நம்மால் முடிந்த அளவு மரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தேன்.'

மகளின் திருமண விழாவுக்கு வருகை தந்தோர் அனைவருக்கும் தாம்பூல பைகளுக்குப் பதில் புங்கன், பூவரசு, வேம்பு, சரக்கொன்றை மற்றும் நெல்லி, நாவல் மர விதைப் பந்துகளைக் கொடுத்து அசத்தியுள்ளனர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மணமகள் வீட்டார்.

விதைபந்தை தாம்பூலமாக வழங்கிய ராமநாதன் தம்பதி.
விதைபந்தை தாம்பூலமாக வழங்கிய ராமநாதன் தம்பதி.
உ.பாண்டி

திருமண விழாவில் பங்கேற்று சிறப்பிக்கும் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருக்கும் விருந்து கொடுப்பதுடன், அவர்களது கைகளில் தாம்பூல பைகளைக் கொடுக்கும் வழக்கம் பாரம்பர்யமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் திருமண வீட்டாரின் வசதியைப் பொறுத்து வெள்ளிப் பொருள்களில் தொடங்கி தேங்காய், மாம்பழம், ஆரஞ்சு பழம், இனிப்பு வகைகள், சில்வர் தட்டு, பிளாஸ்டிக் டப்பா என ஏதாவது ஒன்று இடம் பெறும். இவற்றுடன் வெற்றிலைப் பாக்கும் இடம் பெற்றிருக்கும். திருமண மாப்பிள்ளை குடும்பத்தின் கடைசிப் பிள்ளையாக இருந்தால் கூடுதலாக கடலை மிட்டாயும் இந்தப் பட்டியலில் இடம் பெறும்.

சமீபகாலமாக இதில் சற்று மாற்றம் ஏற்பட்டு தாம்பூலத்துக்குப் பதிலாகத் திருமண நிகழ்வுக்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நடைமுறையும் தொடங்கியுள்ளது. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தாம்பூல பைகளாக விதைப்பந்துகளை வழங்கியுள்ளனர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமநாதன் - கிருஷ்ணவேணி மற்றும் கோவை சூலூரைச் சேர்ந்த வேணு - காந்திமதி குடும்பத்தினர். ராமேஸ்வரம் காளவாய் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் பகவதி என்ற ஜனனிக்கும் கோவை சூலூரைச் சேர்ந்த கெளதம்ராஜுக்கும் ராமேஸ்வரத்தில் திருமணம் நடைபெற்றது.

தாம்பூல கவரில் பையில் இருந்த விதைபந்துகள்
தாம்பூல கவரில் பையில் இருந்த விதைபந்துகள்

இவ்விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு மணமகள் வீட்டின் சார்பில் தாம்பூல பை வழங்கப்பட்டது. சுருக்குப் பை போன்ற வடிவத்திலான துணிப் பையில் வெற்றிலை பாக்குடன் பால்கோவா பெட்டி போன்ற சிறு அட்டைப்பெட்டி ஒன்று இருந்தது. அதில் 'இது இயற்கை அன்னையைக் காப்பதற்கான எங்களின் சிறு முயற்சி. இந்த முயற்சியை வெற்றி ஆக்குவதும் மேலும் தொடர்வதும் உங்கள் கைகளில்...' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இதனால் ஆர்வத்துடன் இந்த அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்த விருந்தினர்கள் வியந்துபோயினர். அவர்களின் வியப்புக்கு காரணம் அந்த அட்டைப் பெட்டியினுள் புங்கன், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை மற்றும் நெல்லி, நாவல் மர விதைப்பந்துகள் இடம் பெற்றிருந்ததுதான்.

இயற்கையை வளர்க்கும் இந்த முயற்சி எப்படி ஏற்பட்டது என விவரித்த ராமநாதன், ''கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அலுவலக ரீதியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதிக்குச் சென்றிருந்தேன். அப்பகுதியில் கஜா புயல் ஏற்படுத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறுடன் வீழ்ந்து கிடந்தன. அவற்றில் வருவாய் தரக்கூடிய தென்னை மரங்கள் அதிகம். மண்ணில் செழித்து வளர்ந்து நிற்க வேண்டிய மரங்கள் எல்லாம் வேருடன் வீழ்ந்து கிடந்த சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. அப்போதே எனக்குள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு மாற்றாக நம்மால் முடிந்த அளவு மரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்.

மணமக்கள்
மணமக்கள்

அதற்கு ஏற்றவாறு அமைந்த என் மகளின் திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு விதைபந்துகளை வழங்கிட முடிவு செய்து என் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். அவர்களும் எனது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி பகுதியிலிருந்து 6,000-க்கும் அதிகமான விதைப் பந்துகளை வாங்கி வந்தேன். அவற்றை மர வகை, பழ வகை என இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பாக்கெட்டிலும் 6 விதைப் பந்துகளை வைத்து வழங்கினேன். இந்த விதைப்பந்து அடங்கிய அட்டைப் பெட்டியை இயற்கையைப் பாதிக்காத சிறு துணிப் பைகளில் வெற்றிலை மற்றும் பாக்குடன் இணைத்து தாம்பூல பையாக வழங்கினேன்'' என்றார்.

விதைப்பந்தின் வகைகள், அவற்றின் தேவை மற்றும் எந்தெந்தப் பகுதிகளில் அவற்றை விதைப்பது, அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்த தகவல்களையும் விதைப்பந்து அட்டைப் பெட்டிகளில் அச்சிட்டு வழங்கியதன் மூலம் மக்களிடையே இயற்கையின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி அசத்தியிருக்கும் ராமநாதன் குடும்பத்தினரின் முயற்சி பாராட்ட தக்க சிறந்த முயற்சியாகும்.

அடுத்த கட்டுரைக்கு