Published:Updated:

`குப்பையில் இருந்து உரம்!' - பாராட்டுகளைக் குவிக்கும் சிவகாசி நகராட்சியின் சீரிய முயற்சி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

ஆடு, கோழி, வாத்து, முயல் வளர்க்கும் சிவகாசி நகராட்சி

இயற்கை உரம் தயாரித்தல்
இயற்கை உரம் தயாரித்தல் ( ஆர்.எம்.முத்துராஜ் )

வீடுகள், கடைகளில் இருந்து கிடைக்கும் காய்கறி, பழங்கள் போன்ற மட்கும் குப்பைகளை விரைவில் உரமாக்கும் வகையில் சிவகாசி நகராட்சி நுண் உரக்குடில் மையத்தில் ஆடு, கோழி, வாத்து, முயல் போன்ற கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

வாத்து
வாத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து நாள்தோறும் 30 முதல் 35 டன் குப்பைகள் உற்பத்தியாகின்றன. இதில், பாதிக்கும் மேற்பட்டவை பழங்கள், காய்கறிகள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய மட்கும் கழிவுகள்தான். இந்த மட்கும் கழிவுகளை உரமாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.45.5 லட்சம் மதிப்பீட்டில், நுண் உரக்குடில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

`குப்பை அள்ளுவதில் மாமூல்; காட்டன் சூதாட்டத்தில் கமிஷன்?’-சர்ச்சையில் குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ

துப்புரவுப் பணியாளர்கள், குப்பைகளைச் சேகரித்து வந்து உரக்குடிலில் சேர்க்கின்றனர். பின்னர், அவை தரம் பிரிக்கப்பட்டு அங்குள்ள 14 தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. காய்கறிக் கழிவுகளை விரைவில் குப்பையாக மாற்றும் வகையில் ஆடு, கோழி, வாத்து, முயல் போன்ற கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அவை குப்பைகளைக் கிளறிக்கொண்டே இருக்கின்றன. இதனால் அவை எளிதில் உரமாகிவிடும். மேலும், காய்கறிக் கழிவுகளை உண்டு சில மணி நேரங்களிலேயே எருவாக மாற்றித் தருகின்றன.

கோழிகள்
கோழிகள்

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து கூறும்போது, ``சிவகாசி நகராட்சி பகுதியில் உருவாகும் மட்கும் குப்பைகளை உரமாக்க 6 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. வீடு, கடைகள், ஹோட்டல்களில் இருந்து வரும் கழிவுகளில் 45 முதல் 50 சதவிகிதம் வரை மட்கும் குப்பைகளான காய்கறி மற்றும் பழக்கழிவுகள்தான். இவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் உரமாக மாற்ற தொட்டிகளில் கொட்டுவோம். குப்பைகளை வாரம் ஒருமுறை கிளறிவிடுவோம். இங்கேயே பஞ்சகவ்யா தயார் செய்துள்ளோம். அவ்வப்போது குப்பைக்குள் பஞ்சகவ்யாவை தெளிப்பதால், நல்ல தரமான உரத்தை உற்பத்தி செய்யலாம்.

Vikatan

குப்பைகள் தானாக உரமாக மாறுவதற்கு 30 முதல் 45 நாள்கள் வரை ஆகும். ஆனால், காய்கறிக் கழிவுகளைக் கால்நடைகள் சாப்பிட்டு சாணமாக மாற்றுவதால், சில மணி நேரங்களிலேயே நமக்கு உரம் கிடைத்துவிடும். கோழி, வாத்துகள் குப்பைகளைக் கிளறுவதாலும் விரைவில் உரமாக மாற்ற முடியும். எனவே, வாத்து, கோழி, வான்கோழி, புறா, முயல், ஆடு போன்றவற்றை இங்கே வளர்க்கிறோம்.

சுகாதார அலுவலர் பேச்சிமுத்து
சுகாதார அலுவலர் பேச்சிமுத்து
Vikatan

1000 கிலோ குப்பையில் இருந்து 120 கிலோ வரை உரம் கிடைக்கும். பின்னர், அந்த உரத்தை சரியாகத் தெளித்து, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கும் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கும் இலவசமாகவே வழங்குகிறோம். இதுவரை 2 டன் உரம் வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.