Published:Updated:

ஊழிக்காலம் - 24: காலநிலை மறுப்பாளர்களின் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்!

காலநிலை மாற்றத்தை மறுக்கும் பிரசாரம்
News
காலநிலை மாற்றத்தை மறுக்கும் பிரசாரம்

காலநிலை (Climate) என்பது பருவநிலைகளின் (Weather) சராசரி. அதாவது, கிட்டத்தட்ட 30 வருடங்களின் அன்றாட பருவநிலைத் தரவுகளை சேகரித்தால்தான் காலநிலையைக் கணிக்க முடியும்.

காலநிலை செயல்பாடுகளின்போது பல சமயங்களில் காலநிலை மறுப்பாளர்களின் கேள்விகள் குறுக்கிடுகின்றன. எப்படிப்பட்ட அறிவியல் தரவுகள் முன்வைக்கப்பட்டாலும், "இது ஒரு கார்ப்பரேட் சதி" என்றபடி காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களுக்கு எந்தப் பதிலையும் தந்துவிட முடியாது. ஆனால், சிலருக்குக் காலநிலை மாற்றம் பற்றிய அடிப்படை சந்தேகங்கள் இருக்கலாம். அதற்கு இந்தக் கேள்வி - பதில் தொகுப்பு மூலமாகத் தெளிவு கிடைக்கக்கூடும். இந்தப் பதில்கள், பொதுவான விழிப்புணர்வுக்கும் நம் புரிதலை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும்.

ஐஸ் ஏஜ் என்ற ஒரு காலகட்டத்தில் பூமியில் பெரும்பங்கு நிலப்பரப்பைப் பனி மூடியிருந்தது. பிறகு அது உருகி இப்போதைய நிலப்பரப்பு வந்திருக்கிறது. அப்படியானால், பனி உருகி, கடல் மட்டம் அதிகரிப்பது என்பது பூமியின் இயல்பான சுழற்சிதானே? அதற்கு ஏன் பயப்படவேண்டும்?

அன்டார்டிகா பனிப்பாறைகள் உருகுதல்
அன்டார்டிகா பனிப்பாறைகள் உருகுதல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பூமியின் வரலாற்றில் பல பனியூழிகள் (Ice ages) வந்து போயிருக்கின்றன. சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுழற்சியில், அதன் சுற்றுப்பாதையில் ஏற்படும் சிறு மாற்றங்களால் மிலன்கோவிச் சுழற்சி என்பது உருவாகும். அதன் அடிப்படையில் பனியூழிகள் ஏற்படுகின்றன. ஆனால், அந்தப் பனியூழி காலகட்டங்கள் பல ஆயிரம் ஆண்டுகள்வரை தொடரக்கூடியவை. பனி உருகி கடல்மட்டம் உயர 1 லட்சம் ஆண்டுகள் வரை கூட ஆகலாம். ஆனால், வெறும் 100 வருடங்களில், மனித செயல்பாடுகளால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உறைந்த நிலையிலேயே இருக்கும் பனிப்பாறைகள் கூட உருகத் தொடங்கியிருக்கின்றன. ஆகவே, புவி வெப்பமடையும் நிகழ்வைப் பனியூழிகளோடு ஒப்பிட முடியாது. வெப்பநிலை அதிகரித்துப் பனி உருகும் வேகம் நம்மால் சமாளிக்க முடியாததாகவே இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கரியமில வாயு என்பது பல இயற்கை சுழற்சிகளில் ஓர் அங்கமாகத்தானே இருக்கிறது? இப்போது வளிமண்டலத்தில் அதிகரித்திருக்கும் கரியமில வாயுவுக்கு மனிதர்கள்தான் காரணம் என்பதற்கு என்ன ஆதாரம்?

கடந்த 66 மில்லியன் ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் காற்றில் கரியமில வாயு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது 2016ல் வெளிவந்த ஓர் ஆய்வு. காற்றில் கலக்கும் கூடுதலான கரியமிலவாயுவுக்கு மனிதர்கள்தான் காரணம் என்பதும் பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான இயற்கை சுழற்சிகள்மூலம் காற்றில் எந்த அளவுக்குக் கரியமில வாயு சேரும் என்பது நமக்குத் தெரியும். அந்தச் சுழற்சிகளில் எந்த மாறுதலும் இல்லை என்கிறபோது, காற்றில் சேர்கிற ஒவ்வொரு கரியமில வாயு மூலக்கூறும் மனித செயல்பாடுகளிலிருந்தே வந்திருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கார்பன் டை ஆக்ஸைடு அளவு ஒப்பீடு
கார்பன் டை ஆக்ஸைடு அளவு ஒப்பீடு
climate.nasa.gov

ஆங்காங்கே பனிப்பொழிவுகள் நடக்கின்றன என்று செய்திகளில் சொல்கிறார்கள், வெப்பமடைந்த பூமியில் பனிப்பொழிவு இருக்குமா என்ன?

காலநிலை மாற்றத்தால் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது, பொதுவாக ஒரு வருடத்தில் அதிக வெப்பமுள்ள நாள்களே இருக்கும். ஆனால், குளிரும் பனியும் இருக்கவே இருக்காது என்று சொல்லிவிட முடியாது. தவிர, காலநிலை மாற்றம் அதிகமாகும்போது, புவியின் பருவகாலங்களை சமநிலையில் வைக்கும் கட்டுமானங்கள் பாதிக்கப்படுகின்றன, தீவிர பருவகால நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. அவை மிகை வெப்பமாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. அளவுக்கு அதிகமான திடீர் மழை, பனிப்பொழிவு, பருவமழையில் ஏற்படும் கோளாறுகள் எல்லாமே காலநிலை மாற்றத்தின் விளைவுகள்தான்.

தொலைகாட்சி செய்திகளில் மழை பெய்யும் என்கிறார்கள், வெயில் சுட்டெரிக்கிறது. மழை அறிவிப்பு இல்லாதபோது திடீரென்று மழை கொட்டித் தீர்க்கிறது. நாளை வரப்போகும் மழையையும் வெயிலையும்கூட கணிக்க முடியாத விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தையா சரியாகக் கணித்துவிடப்போகிறார்கள்?

காலநிலை (Climate) என்பது பருவநிலைகளின் (Weather) சராசரி. அதாவது, கிட்டத்தட்ட 30 வருடங்களின் அன்றாட பருவநிலைத் தரவுகளை சேகரித்தால்தான் காலநிலையைக் கணிக்க முடியும். இவ்வாறு சராசரி எடுக்கும்போது, கணக்குகளில் ஏற்படுகிற சிறு பிழைகள் சரிசெய்யப்பட்டுவிடுகின்றன. ஆகவே, பருவநிலைக் கணிப்புகளில் ஏற்படுகிற பிழைகள், காலநிலைக் கணக்குகளில் ஏற்படாது.

பனிக்கட்டிகள் உருகுதல்...
பனிக்கட்டிகள் உருகுதல்...

தவிர, பரப்புகளின் வெப்பநிலையை அளக்கும் NASA GISS Data, CRU direct data, கடல் பரப்பின் வெப்பநிலை, கடல் மட்டம் பற்றிய அளவீடுகள், செயற்கைக்கோள் தரவுகள், பனிப்பாறைகள் உருகும் விகிதம், கடந்தகால காலநிலை ஆவணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, பிரமாண்டமான கணிப்பொறி ப்ரோக்ராம்களில் கணக்குகள் போடப்படுகின்றன. தகவல்களில் ஏற்படும் சிறு பிழைகளை சரிகட்டும் கணக்கும் அந்த ப்ரோக்ராமுக்குள்ளேயே செலுத்தப்பட்டிருக்கிறது என்பதால் அதிலிருந்து வரும் கணிப்புகள் சரியானவையே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொஞ்சம் வெப்பம் அதிகரித்தால்தான் என்ன? சில டிகிரிகளுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?

எந்த அளவுக்கு சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் என்பதைவிட, அது என்ன வேகத்தில் அதிகரிக்கிறது என்பதுதான் கவலையளிக்கிறது. இந்த வேகத்தில் வெப்பநிலை அதிகரித்தால், பூமியை சமநிலையில் வைத்திருக்கிற பல இயற்கை சுழற்சிகள் உடையும். அது எந்த மாதிரியான விளைவுகளைக் கொண்டுவரும் என்பது கணிப்பாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, நிதர்சனம் எந்த கணிப்பையும் விட மோசமானதாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் கிட்டத்தட்ட 90% உயிரிகளைக் கொன்ற ஒரு பேரழிவு (Great Extinction event) காலநிலை சீர்குலைந்ததால்தான் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. அந்தத் தரவோடு இப்போதைய நிலையைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

2012ல் உலகம் அழிந்துவிடும் என்று இப்படித்தான் புரளி வந்தது... இப்போது 2100ல் அழிந்துவிடும் என்றும், 2050ல் பாதி அழியும் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்....

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
Pixabay

இது த்ரில்லுக்காகக் கிளப்பப்பட்ட புரளி அல்ல. பன்னாட்டு அறிவியலாளர்கள் சில நூறு பேர் தீவிரமாக ஆராய்ந்து கொடுத்திருக்கிற ஆய்வறிக்கை. தவிர, உலகம் அழியும் என்று யாரும் சொல்லவில்லை. இந்த பூமியில் வாழ்வதற்கான தகுதி உள்ள இடங்கள் பெருமளவில் குறையும் என்றுதான் சொல்லப்படுகிறது. ஹாலிவுட் பேரிடர் திரைப்படங்களைப் போல அடுக்குமாடிக் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிவது, பூமி இரண்டாகப் பிளப்பது, அமில மழை பொழிவது, எங்கு பார்த்தாலும் பற்றியெரியும் நெருப்பு, கடலில் மிதக்கும் நகரங்கள் என்பதாக அந்த எதிர்காலத்தைக் கற்பனை செய்ய வேண்டாம். சிறு சிறு பேரிடர்கள் தொடர்ந்து தாக்கினாலே பூமி தீவிரமாக பாதிக்கப்பட்டுவிடும். இது மௌனமான ஊழிக்காலமாக இருக்கும்.

ஊடகங்களுக்கு இவ்வாறு பீதியைக் கிளப்புவதே வேலையாகிவிட்டது. எதையாவது சொல்லி நம்மைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்கள்...

காலநிலை சார்ந்து தீவிரமாக செயல்பட்டு வருபவர்களிடம் கேட்டால், இப்போது ஊடகங்களில் வரும் விவாதங்களே போதாது என்பார்கள். அன்றாடப் பிரச்சனைகள் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையில், இதன் பின்னணியில் பூதாகாரமாக நின்றுகொண்டிருக்கும் காலநிலை மாற்றம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், அவசரச் செய்தியின் முக்கியத்துவத்தோடு காலநிலை மாற்றமும் பேசப்படவேண்டும். அப்போதுதான் விழிப்புணர்வு வரும். ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தரும் அழுத்ததால் உலக நாடுகளின் அரசுகள் திட்டங்களை அமல்படுத்தும் நிலை வரவேண்டும்.

காலநிலை மாற்றம் தொடர்பான செய்திகள் அச்சமூட்டுபவைதான், ஆனால் அவை பீதிக்காகப் புனையப்படும் பேய்க்கதைகள் அல்ல, நம் எதிர்காலத்துக்கான எச்சரிக்கையாகவே அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்.

இது ஒரு கார்ப்பரேட் சதி...

காலநிலை மாற்றம் ஒரு கார்ப்பரேட் சதி அல்ல. இன்னும் சொல்லப்போனால், காலநிலை மாற்றம் என்ற ஒரு விஷயமே இல்லை என்று நீங்கள் நம்பவேண்டும் என்றே பெருநிறுவனங்கள் விரும்புகின்றன. காலநிலை மாற்றத்தின் தீர்வுகள் பலவும் அவர்களைக் குறிவைப்பதாக இருக்கிறது என்பதால் காலநிலை மறுப்புக்காக அவை பல லட்சம் டாலர்களை செலவழித்துவருகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனும்போது, காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களில் மட்டும் இவ்வளவு சந்தேகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று யோசித்தால் இது புரிந்துவிடும்.

காலநிலை மாற்றம் பற்றிய அறிவியல் சிக்கலானதாக இருக்கிறது, ஆகவே அதை நம்ப முடியாது.

காலநிலை என்பதே சிக்கலான அறிவியல்தான். அதிலும் பழங்காலக் காலநிலை ஆவணங்களை எடுத்து, தற்காலக் காலநிலைத் தரவுகளை சேர்த்து, எதிர்காலத்துக்கான கணிப்பை முன்வைப்பது என்பது எளிதல்ல. ஆனால், சிக்கலானது என்பதற்காகவே அதைப் பொய் என்று சொல்லிவிட முடியாது. அறிவியல் கட்டுரைகள் சிக்கலானதாக இருக்கின்றன என்றாலும், "காலநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அது ஆபத்தானது, கரிம உமிழ்வுகளைக் குறைக்கவேண்டும்" என்ற அடிப்படை அறிவியல் எளிதானதுதான்.

Climate Strike
Climate Strike
Pixabay

ஏற்கனவேதான் காலநிலை மாற்றம் வந்துவிட்டது என்கிறீர்கள். இனிமேல் என்ன செய்து என்ன பயன்?

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் உள்ள எதிர்காலம், கட்டுப்படுத்தப்பட்ட காலநிலை மாற்றத்தோடு உள்ள எதிர்காலம் என்று நம்மிடையே இரண்டு தேர்வுகள் உண்டு. காலநிலை மாற்றம் கட்டுப்படுத்தப்படும்போது, எதிர்காலம் நிச்சயமாக குறைவான பின்விளைவுகள் கொண்டதாகவே இருக்கும். ஆகவே விரக்தியைக் கைவிட்டுத் தீர்வுகளை யோசித்தால் நம் எதிர்காலத்தை நம்மால் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

காலநிலை மாற்றத்தின் முக்கியமான பல அம்சங்களை விவாதித்திருக்கிறோம். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பாடுகளை நாம் முன்னெடுப்பதே நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையாக இருக்கும்.

இறுதிக் கட்டுரையில் பேசலாம்...

- Warming Up