Published:Updated:

`சிறுத்தையால் தொந்தரவு இல்லை; ஆனா..!’ - கேமரா`மேன்’களால் தவிக்கும் நீலகிரி கிராமம்

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சிறுத்தையின் படம்
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சிறுத்தையின் படம்

அந்தச் சிறுத்தை சமீபத்தில் குட்டிகளை ஈன்றுள்ளதாகத் தெரிகிறது. ஈன்ற குட்டிகளுடன் சிறுத்தையைப் புகைப்படம் எடுக்க 10-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் அதன் அருகில் செல்ல முயன்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பல்லுயிர்ச்சூழல் மண்டலத்தின் மிக முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய நீலகிரியில் தற்போது காடுகளும் காட்டுயிர்களும் இக்கட்டான சூழலில் இருப்பதாகக் காட்டுயிர் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

காயமடைந்த சிறுத்தை
காயமடைந்த சிறுத்தை
File Photo

அதிகரிக்கும் மக்கள்தொகை, பெருகிவரும் விளை நிலங்கள், காட்டேஜ்கள், சாலைகள், மின்வேலிகள், சுருக்கு கம்பிகள், களைத் தாவரங்கள் என பல்முனை தாக்குதல்களையும் தாக்குப்பிடிக்க வேண்டிய சிக்கலான சூழல் வன விலங்குகளுக்கு உள்ளது.

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டுயிர்கள், தேயிலைத் தோட்டங்களிலும், விறகு தேவைகளுக்காக நடப்பட்ட யூக்காலிப்டஸ், வேட்டில் காடுகளிலும் தஞ்சம் புகுந்து வருகின்றன.

Indian Gaur
Indian Gaur
File Photo

யானை, கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலாவுவது இயல்பான ஒன்றாக மாறிவருகிறது. வனத்துறையினரும் மனித - வன விலங்கு எதிர்கொள்ளல்களைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் குன்னூர் அருகில் உள்ள அட்டடி கிராமத்தின் அருகில் உள்ள வனத்தில் உள்ள ஒரு பாறைக்கு சிறுத்தை ஒன்று அடிக்கடி வந்து சென்றுள்ளது. காலை மற்றும் மாலையில் அந்த பாறையின் மீது அமர்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இதனை அறிந்த பலரும் அந்த சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

காயமடைந்த சிறுத்தை [file photo]
காயமடைந்த சிறுத்தை [file photo]
Arun k

இதனைப் பார்த்து குன்னூர் பகுதியைச் சேர்ந்த பலரும் கேமிராவைத் தூக்கிக்கொண்டு நாள்தோறும் அந்த சிறுத்தையை புகைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் தொந்தரவு செய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். சிறுத்தையின் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வந்துள்ளனர்.

`செயலிழந்த பின்பகுதி; முதுகுத் தண்டுவடத்தில் காயம்!' -உயிருக்குப் போராடும் பெண் சிறுத்தை

இந்தநிலையில், குறிப்பிட்ட அந்தச் சிறுத்தை சமீபத்தில் குட்டிகளை ஈன்றுள்ளதாகத் தெரிகிறது. ஈன்ற குட்டிகளுடன் சிறுத்தையைப் புகைப்படம் எடுக்க 10-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் அதன் அருகில் செல்ல முயன்றுள்ளனர். மனித நடமாட்டத்தால் அச்சமடைந்த அந்தச் சிறுத்தை அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்துக்குள் குட்டியை வாயில் கவ்வியபடி சென்று தஞ்சம் புகுந்துள்ளது.

காயம்பட்ட தோட்டத் தொழிலாளி.
காயம்பட்ட தோட்டத் தொழிலாளி.

அங்கு தேயிலை பறிக்கும் பெண்கள் சிறுத்தையைப் பார்த்து அச்சத்தில் ஓடியுள்ளனர். மேகலா என்ற பெண் ஒருவர் இதனால் காயமும் அடைந்தார். தற்போது அந்த சிறுத்தையைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அட்டடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஆனால், எந்தத் தொந்தரவும் இல்லை. மனிதர்களைத் தாக்குவதும் கிடையாது. நாங்களும் எந்த இடையூறும் செய்வதில்லை. `பாறை மீது அமரும் சிறுத்தையை படம் எடுக்கிறேன்’ என்ற பெயரில் நாள்தோறும் வெளியூர்களில் இருந்து பலர் வந்து செல்கின்றனர். அவர்களால்தான் தொல்லை. காட்டுக்குள் குட்டியுடன் இருந்த சிறுத்தையை இவர்கள் அட்டகாசம் செய்து டீ எஸ்டேட்டுக்குள் விரட்டிவிட்டனர்.இப்போது நாங்களும் வனத்துறையினரும் தவிக்கிறோம்" என்றார்.

கண்காணிக்கும் வனத்துறையினர்.
கண்காணிக்கும் வனத்துறையினர்.

இது குறித்து குன்னூர் வனச்சரகர் சசிகுமார் கூறுகையில், ``அட்டடி பகுதியில் வன உயிர் புகைப்படக்காரர்கள் சிலர் தொடர்ந்து சிறுத்தையைத் தொந்தரவு செய்வதாக இன்று தகவல் வந்தது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கேமராக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதோடு வழக்குப்பதிவும் செய்யப்படும். வன உயிர் புகைப்படக்காரர்கள் என யார் வந்தாலும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்க சொல்லியுள்ளோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு