Published:Updated:

கொரோனா வைரஸை முதலில் அடையாளம் கண்ட ஷீ செங்லீ... சீனத்து சாகசப்பெண்ணின் சுவாரஸ்ய கதை!

ஷீ செங்லீ
ஷீ செங்லீ

சீனாவில் நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களின் எச்சில்களைப் பரிசோதனை செய்து அது கொரோனா வைரஸ்தான் என்று உறுதிப்படுத்தியவர் இவர்தான்.

இன்றைய தேதியில் உலகத்தில் இருக்கும் அனைவரும் பயப்படக்கூடிய ஒரே சூப்பர் ஹீரோ யார் தெரியுமா?

̀பேட் மேன்'

வௌவால்களில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது, வௌவால் இறைச்சி சாப்பிட்டதால்தான் வைரஸ் தொற்றியது, இந்திய வௌவால்களில் கொரோனா இருக்கிறது என வௌவால்கள் என்று சொன்னாலே, கிலி பிடித்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள் மக்கள். ஆனால், சீனாவில் ஒரு பெண் கடந்த 16 வருடங்களாக இதே வைரஸ்களைக் கண்டுபிடிக்க பேட் வுமன் கணக்காகப் பறந்துகொண்டிருக்கிறார். சீனாவில் தற்போது நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களின் எச்சில்களைப் பரிசோதனை செய்து அது கொரோனா வைரஸ்தான் என்று உறுதிப்படுத்தியவர் இவர்தான்.

நாம் இங்கே பேட் வுமன் எனக் குறிப்பிடுவது சீனாவின் வுகான் வைராலஜி ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஷீ செங்லீயை. ஷீ செங்லீ பயணம் செய்யாத சீன மலைகள் கிடையாது, சுரங்கங்களுக்குப் பெயர்போன சீனாவின் பழைமையான நகரங்கள் அத்தனைக்கும் பயணித்திருக்கிறார். ஒவ்வொரு சுரங்கத்திற்கும் சென்று அங்கிருக்கும் வௌவால்களில் இருந்து கிடைத்த எச்சங்களை எடுத்துவந்து ஆய்வு செய்து அதில் இருக்கும் வைரஸ்களைக் கண்டறிவதுதான் இவரது வேலை.

வௌவால் குகைகள்
வௌவால் குகைகள்

2004 தொடங்கி ஷீ மேற்கொண்ட வைரஸ் வேட்டைப் பயணங்கள் முதல், 30 டிசம்பர் 2019 அன்று அவரது ஆராய்ச்சிக் கூடத்துக்கு வந்த எச்சில் சாம்பிள்களில் இருந்தவை கொரோனா வைரஸ்தான் எனக் கண்டறிந்தது வரை நிகழ்ந்ததை இனி விவரிக்கிறேன்.

முதலில் சாம்பிள்கள் தனது ஆய்வுக்கூடத்துக்கு வந்தபோது ஷீ அது கொரோனா வைரஸாக இருக்கும் என நம்பவில்லை. ஏனென்றால் வுகான் இருப்பது மத்திய சீனாவில். ஷீக்குக் கொரோனா வைரஸ்கள் குவிந்து கிடக்கும் சீனப் பகுதி தெரியும். தெற்கு மற்றும் தென்கிழக்குச் சீனாவின் மலைக்குகைகள் மற்றும் சுரங்களில் குவிந்துகிடக்கும் வௌவால்களில்தான் கொரோனா இருக்கும் என்பதை அவர் தனது ஆய்வுகளின் வழியே கண்டறிந்திருந்தார். அதனால் மத்திய சீனாவில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பேயில்லை என்பது அவர் அனுமானம். ஆனால், சாம்பிள்களில் இருந்தது கொரோனாதான் என உறுதியானதும் அவருக்குத் தோன்றிய முதல் கேள்வி வுகான் மக்களிடம் கொரோனா எப்படிப் பரவியது, ஒருவேளை தனது ஆய்வுக்கூடத்திலிருந்தே பரவியிருக்கக்கூடுமா என அவர் அச்சப்பட்டார்! அதிர்ஷ்டவசமாக அவரது பரிசோதனைக் கூடத்தில் இருந்த கொரோனாவின் ஜீனோமிக் விவரங்களும் மனிதர்களிடமிருந்த எடுக்கப்பட்ட கொரோனா சாம்பிள்களின் ஜீனோமிக் விவரங்களும் வெவ்வேறாக இருந்தன.

வௌவால் - சீனச் சந்தை
வௌவால் - சீனச் சந்தை

இதன்பிறகுதான் பாங்கொலின்களில் இருந்து மனிதர்களுக்குக் கொரோனா பரவியதாகச் செய்திகள் வெளியாகின. இத்தனைக்கும் 2013 -ம் ஆண்டில் ஷீ வெளியிட்ட தனது ஆய்வு ஒன்றிலேயே விலங்குகளில் இருந்து குறிப்பாக வௌவால்களில் இருந்து பரவும் கொரோனா தொற்றுகள் குறித்து நாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டியது பற்றி வலியுறுத்தியிருக்கிறார்.

உலகெங்கிலும் சார்ஸ் வைரஸ் 8000-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த அதே காலகட்டத்தில்தான் ஷீ தனது வைரஸ் வேட்டைப் பயணத்தையும் தொடங்கியிருந்தார். சீனாவின் குவாங்ஷீ மாகாணத்தில் உள்ள நானிங் பிரதேசத்தில் வௌவால்களின் கூடாரங்கள் நிரம்பிய குகை அது. அப்படித் தொடங்கிய பயணம், அவரைப் பல கடினமான மலைகளை ஏறச் செய்தது. ஒரு சிலவாரங்களில் அவர் முப்பது அல்லது நாற்பது குகைகள் வரை வௌவால்களைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்படிப் பயணித்துச் செல்லும் இடங்களில் வௌவால்களே இல்லாமல் திரும்பிய அனுபவம்கூட அவருக்கு உண்டு. 2004-2006 காலகட்டத்தில் சார்ஸ் பாதிப்பு பரவத் தொடங்கியபோது அது சிவெட் எனப்படும் ஒருவகை கீரிப்பிள்ளை போன்ற விலங்கிலிருந்து பரவியது எனக் கண்டறிந்தது ஹாங்காங்கில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ஷீயின் குழுவைச் சேர்ந்தவர்கள்தான். அதுவரை சார்ஸ் வைரஸ் என்றால் சாதாரண சளி, ஜுர வைரஸ் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருந்தது.

வௌவால் மூலம் கொரோனா தொற்று; ஆராய்ச்சியைத்  தொடங்கிய சீனா! - நிதியுதவி அளித்த அமெரிக்கா

வௌவால்கள் நிறைந்த குகைகளுக்குக் கவசங்களுடன் பயணிப்பார் ஷீ. வௌவால்கள் வேட்டையாடச் செல்லும் சமயம் குகைகளின் வாசலில் வலைவிரிப்பார். அதில் கிடக்கும் வௌவால்களின் எச்சங்களைத் தொடர்ந்து சேகரித்து சார்ஸ் கொரோனா வைரஸ்களுக்கான தடயத்தைத் தேடினார். தொடக்கத்தில் அவரது பரிசோதனையில் கொரோனா வைரஸ்கள் தென்படவில்லை. அந்தநேரம் ஹார்ஸ்ஷூ எனப்படும் ஒருவகை வௌவால்களின் எச்சம் சாம்பிள்களாக ஷீ செங்லீயின் ஆய்வுக்கூடத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் மேற்கொண்ட ஜீனோமிக் மற்றும் நோய் எதிர்ப்பு ஆன்டிஜென் பரிசோதனைகளைக் கொண்டு அது கொரோனா வைரஸ்தான் என்றும் சீனாவில் அதே சார்ஸ் கொரோனா வைரஸ் இருக்கும் மையப்புள்ளியையும் ஷீ செங்லீயின் குழுவினரால் கண்டறிய முடிந்தது. பரிசோதனை முடிவுகளை வைத்து சீனாவின் குன்மிங் எனப்படும் இடத்தில் இருக்கும் ஷிட்டோவு குகைகளில் ஷீ செங்லீ ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது.

ஒன்று, அந்த ஷிட்டோவு குகை கொரோனா வைரஸுக்கான சுரங்கமாக இருந்தது. ஆனால், அவற்றில் பெரும்பாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத கொரோனா வைரஸ்கள். இரண்டு, அங்கிருந்தவற்றில் ஒரு டஜன் கொரோனா வைரஸ் மட்டும் மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கொரோனா ரகத்தைச் சேர்ந்ததாக இருந்தது. குகைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட சார்ஸ் கொரோனா வைரஸ்கள் ஆய்வுக்கூடத்தில் வைத்து மனித நுரையீரல் செல்களில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த வைரஸ், நுரையீரல் செல்லையே சின்னாபின்னமாக்கியிருந்தது.

அந்த டஜன் வைரஸ்களில் ஒன்றின் ஜீனோமிக் குறியீடுகள் மட்டும் 2004 -2006 காலகட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்திய சார்ஸ் வைரஸ் ரகத்துடன் 97 சதவிகிதம் ஒத்துப்போனது. ஷிட்டோவு குகைகளைச் சுற்றிலும் மனிதர்கள் வசிக்கும் நெருக்கடியான பகுதிகள் இருந்தன. குகைகளிலிருந்த வௌவால்களில் இருந்து சார்ஸ் கொரோனா மனிதர்களுக்குப் பரவுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் அந்த இடத்தில் இருந்தது.

2019ன் இறுதியில் ஷீயின் பரிசோதனைக் கூடத்துக்கு வந்த சாம்பிள்களில் இருந்த கொரோனா வைரஸின் ஜீன் குறியீடுகள் அவர் ஷிட்டோவு பகுதியில் இருந்து எடுத்து வந்த சாம்பிள்களுடன் 96 சதவிகிதம் ஒத்துப்போனது. தற்போதைய கொரோனா வைரஸுக்கு SARS –Cov2 எனப் பெயர் கிடைத்தது அப்படித்தான்.

சீனாவின் விலங்குகள் சந்தை
சீனாவின் விலங்குகள் சந்தை

கடந்த பிப்ரவரி 24 அன்று சீன அரசு வன விலங்குகளை மனிதர்கள் உண்பதற்கு எதிராக நிரந்தரத் தடை விதித்தது. இதனால் சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் விலங்குகள் விற்பனைச் சந்தையைச் சேர்ந்த14 மில்லியன் மக்கள் வேலையிழப்பார்கள். இது பலபேரால் வரவேற்கப்பட்டாலும் விலங்குகளை உண்பது சீன மக்களின் பாரம்பர்யத்தில் கலந்துவிட்ட ஒன்று. அதில் மாற்றம் கொண்டு வராமல் ஒரேயடியாகச் சந்தைக்குத் தடைவிதிப்பது இதற்குத் தீர்வல்ல. இன்னும் சொல்லப்போனால் கொரோனா பரவியதற்கு விலங்குகள் காரணமே அல்ல, விலங்குகளின் வாழ்விடங்களை மனிதர்களின் வாழ்விடங்கள் நெருங்குவதுதான் காரணம்” என்கிறார் ஷீ.

அடுத்த கட்டுரைக்கு