Published:Updated:

குவாரிகளாக மாறிய காடு..! - தம் நிலத்தை மீண்டும் எடுத்துக்கொண்ட காசிரங்கா விலங்குகள்

க.சுபகுணம்

கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் காசிரங்காவின் தெற்கே இருந்த கர்பி அங்லோங் காட்டுப் பகுதியில் இருந்த குவாரித் தொழிலுக்குத் தடை விதித்தது.

காசிரங்கா
காசிரங்கா

காசிரங்கா தேசியப் பூங்காவில் வாழும் விலங்குகள், தாங்கள் வலசைச் செல்லும் பாதைகளைப் பல ஆண்டுகளாக மறித்திருந்த கல் குவாரிக்களை இப்போது மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளன. இதற்குக் காரணமாக இருந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் காட்டுயிர் ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அஸ்ஸாம் காட்டெருமைகள்
அஸ்ஸாம் காட்டெருமைகள்
Anuwar Hazarika

காசிரங்கா தேசியப் பூங்காவின் தெற்குப் பகுதியில் கர்பி அங்லோங் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைப் பகுதிகளில் பல ஆண்டுகளாகக் கல் குவாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகமிருந்தது. அவை காசிரங்காவில் வாழ்ந்த காட்டுயிர்களின் வழித்தடங்களை மறித்திருந்தன. அங்கிருந்து கீழ்நோக்கிப் பாயும் நீர்நிலைகள் இவற்றால் மாசடைவதுடன், அதிகச் சத்தமாக இருந்ததால் காட்டுயிர்கள் இந்தப் பக்கம் வருவதையே தவிர்த்திருந்தன. இப்போது ஏற்பட்டிருப்பது போன்ற வெள்ளம் வரும் சமயங்களில் காசிரங்காவின் இப்போதைய பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிடும். அப்போது அங்கு வாழும் உயிரினங்கள் அடைக்கலம் தேடி இந்த மலைக்குத்தான் வந்துகொண்டிருந்தன. அத்தகைய பாதுகாப்பான பகுதியைக் குவாரிகள் ஆக்கிரமித்ததால், அவை அடைக்கலம் தேட முடியாமல் இத்தனை ஆண்டுகளாகத் தவித்துக்கொண்டிருந்தன.

காசிரங்கா பூங்காவைச் சூழ்ந்த வெள்ளநீர்! - கடைக்குள் பதுங்கிய புலி#AssamFloods

இந்தக் குவாரிகளால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகளைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் ரோஹித் சௌத்ரி என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அங்கு அமைந்திருக்கும் குவாரிகளை மூடுமாறு தீர்ப்பு வந்தது. அந்தப் பகுதியில் சுரங்கம் மற்றும் குவாரி வேலைகள் நடைபெறத் தடையும் போட்டது. அதைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநில வனத்துறை, ஏப்ரல் 30-ம் தேதியே கர்பி அங்லோங்கில் இருந்த குவாரிகளை மூடினர். இதனால், இந்த வெள்ளம் காரணமாகப் புலி, காண்டாமிருகம், யானை என்று பல காட்டுயிர்கள் அங்கு அடைக்கலம் தேடிச் செல்கின்றன.

இதுவரை வெள்ளத்தால் 18 காண்டாமிருகங்கள் உட்பட 205 காட்டுயிர்கள் பலியாகியுள்ளன.

ஒரு கடமானும் 16 பன்றி மான்களும் (hog deer) தப்பிப்பதற்காக நெடுஞ்சாலை பக்கம் சென்றபோது வாகனங்களில் விபத்து ஏற்பட்டுப் பலியாகியுள்ளன. இந்தக் குவாரிகளுக்கு அருகே யானைகள், மான் வகைகள், காண்டாமிருகங்கள் என்று பல விலங்குகள் பார்க்கப்பட்டுள்ளன.

புராபஹார் வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்த குவாரிக்கு அருகே புலியின் கால்தடம் பதிவாகியுள்ளது. வனக் காவலர்கள் கடந்த மூன்று நாள்களாக அங்கு சென்ற காண்டாமிருகம் ஒன்றைக் கண்காணித்து வருகின்றனர். வெள்ளம் வடிந்து அது பத்திரமாகத் திரும்பும் வரை அவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

காசிரங்கா தேசியப் பூங்கா
காசிரங்கா தேசியப் பூங்கா
PTI

காசிரங்காவில் வெள்ளம் வடிந்துகொண்டிருக்கிறது. இருப்பினும், கிழக்கு அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் நீடிக்கும் கடுமையான மழை காரணமாக வெள்ளம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்... சூழலியல் அகதிகளான லட்சக்கணக்கான மக்கள்!