Published:Updated:

ஒரே ஆண்டில் 20,914 சூழலியல் குற்றங்கள்... குற்ற ஆவண அறிக்கை சொல்வது சரிதானா?

தமிழகம், மற்ற மாநிலங்களைவிட சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது, தேசிய குற்ற ஆவணப் பதிவேடு.

சூழலியல் குற்றங்கள்
சூழலியல் குற்றங்கள் ( Pixabay )

ஒவ்வோர் ஆண்டும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் நடைபெறும் குற்றங்களின் புள்ளிவிவர அறிக்கையை வெளியிடும். 2017-ம் ஆண்டிற்கான குற்றப் புள்ளிவிவர அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இது, கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய அறிக்கை. இந்நேரம், 2018-ம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களையே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் வெளியாகவில்லை.

மரம் காக்க மரணித்த இந்தியாவின் முதல் பெண் சூழலியல் போராளி... அம்ரிதாவின் நெகிழ்ச்சிக் கதை!
கைவிடப்பட்ட சுரங்கம்
கைவிடப்பட்ட சுரங்கம்
Pixabay

குற்றப் புள்ளிவிவர அறிக்கையில் பல்வேறு துறைகளில் நடக்கும் குற்றங்களைத் தனித் தனியாகப் பிரித்து பட்டியலிடுவார்கள். அதில் 2014-ம் ஆண்டிலிருந்து சூழலியல் குற்றங்களையும் கணக்கில் எடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

2017-ம் ஆண்டின் தரவுகள்படி பார்த்தால், இந்தியாவில் நடைபெறுகின்ற சூழலியல் குற்றங்கள் 40 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 2016-ல் 4,732 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது பல மடங்கு அதிகரித்துவிட்டது. 4,732- ஆக இருந்த சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரித்திருப்பதன் காரணம் என்ன?

சூழலியல் குற்றங்கள்
சூழலியல் குற்றங்கள்
Pixabay

2014-ம் ஆண்டு, இந்திய வனச் சட்டம் 1927, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்று சட்டம் 1981 மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டம் 1974, அணு ஆற்றல் சட்டம் 1962 போன்ற ஆறு சட்டங்களின் கீழ் நடந்த குற்றங்கள் கணக்கில் எடுக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு, அணு ஆற்றல் சட்டத்தைத் தவிர மற்றவற்றை கணக்கில் எடுத்தார்கள். 2016-ல் அதுவே மீண்டும் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், 2017-ல் மூன்று சட்டங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், ஒலி மாசுபாட்டுச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் இந்த ஆண்டு புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அதோடு, வனச் சட்டத்தையும் வனப் பாதுகாப்புச் சட்டத்தையும் ஒரே பட்டியலாக இணைத்துள்ளார்கள்.

இதில், வனப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் வனச் சட்டத்திற்கும் வித்தியாசம் உள்ளது. வனச் சட்டம், ஆங்கிலேயர் ஆட்சியின்போது வன மேலாண்மைக்காகக் கொண்டுவரப்பட்டது. அதில், ஒரு சில குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வனப் பாதுகாப்புச் சட்டத்தில்தான், காடழிப்பு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அழித்தல், ஆக்கிரமித்தல் போன்ற முக்கியமான குற்றங்கள் குறித்துப் பேசப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக இணைத்ததால், குறிப்பாக எந்தச் சட்டத்தின்கீழ் எவ்வளவு குற்றங்கள் என்ற தெளிவு கிடைக்கவில்லை. அதேபோல், காற்று மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வரும் குற்றங்களின் பட்டியலையும் ஒன்றாக இணைத்துள்ளார்கள். இது, காற்றுச் சட்டத்தின்கீழ் எவ்வளவு குற்றங்கள் நடந்துள்ளன, நீர் சட்டத்தின்கீழ் எவ்வளவு குற்றங்கள் நடந்துள்ளன என்ற தெளிவான தரவுகள் கிடைப்பதைச் சிக்கலாக்குகிறது. இப்படி இரண்டு சட்டங்களை ஒரே பட்டியலின்கீழ் இணைப்பதே ஆரோக்கியமற்ற ஒரு செயல்தான் என்கிறார்கள், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள்.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்
Pixabay
வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்... சூழலியல் அகதிகளான லட்சக்கணக்கான மக்கள்!

தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள், அதிகாரங்கள், செயல்படவேண்டிய வழிமுறைகள் போன்றவற்றைப் பேசுகிறது. அதில், குற்றங்களைப் பற்றியோ, தண்டனைகளைப் பற்றியோ பேசவில்லை. அப்படியிருக்க, அதை எப்படி குற்றப் பிரிவின்கீழ் கொண்டுவந்தார்கள் என்பதும் தெரியவில்லை.

இந்தியாவில் நடந்த சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கையை மேம்போக்காக வைத்துப் பார்த்தால், தமிழகம் மற்ற மாநிலங்களைவிட முதலிடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. முதலிடத்தில் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களைவிட மிக அதிகமாக சூழலியல் குற்றங்கள் நடக்கும் மாநிலமாகவும் கருதும் அளவில்தான் புள்ளிவிவரங்கள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு, மொத்த சூழலியல் குற்றங்களில் முதலிடத்திலுள்ள தமிழகத்தில், குற்றங்களின் எண்ணிக்கை 20,914. இரண்டாவது இடத்திலுள்ள ராஜஸ்தானில் 10,122 குற்றங்கள். முதலிடத்திற்கும் இரண்டாமிடத்திற்கும் இடையே கிட்டத்தட்ட 50% வித்தியாசம் இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

அறிக்கையின்படி, தமிழகத்தில் ஒவ்வொரு சட்டத்தின் கீழும் பதிவான வழக்குகள் விவரம்! 

வனச் சட்டம் & வனப்பாதுகாப்புச் சட்டம் - 1
காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் - 0
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1
சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டம் - 20,640
காற்று மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டம் - 0
தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம்- 0
ஒலி மாசுபாட்டுச் சட்டம் - 272

மேற்குறிப்பிட்டுள்ள தமிழகத்தின் தரவுகளில், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. மிகவும் முக்கியமான சட்டங்களில் ஒன்றுமே இல்லை என்றெல்லாம் சொல்வதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வது என்ற கேள்வியும் வருகிறது. பொது இடங்களில் புகை பிடிப்பது, 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பது, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கடை வைப்பது போன்ற குற்றங்கள் பதிவாகும். இந்தச் சட்டத்தின் வழக்குகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் பார்த்தால், மற்ற பெரிய குற்றங்களின்மீது எந்த அளவுக்கு கவனம் செல்கிறது என்பதும் புரிகிறது.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகம்தான் முதலிடம். ஆனால், 'இந்த சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் சட்டத்தை சுற்றுச்சூழல் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தது சரியல்ல' என்றும் 'இரண்டு சட்டங்களை ஒருங்கிணைப்பதால் குழப்பமே நிலவும்' என்றும் சொல்கிறார் சூழலியல் குற்றங்கள் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்துவரும் அழகேசன் ஷங்கர் பிரகாஷ். அவரிடம் பேசியபோது, "பொதுவாக, வனச்சட்டத்திலும் வனப்பாதுகாப்புச் சட்டத்திலும்தான் அதிக அளவில் குற்றங்கள் பதிவாகும். அதோடு, நீர் மற்றும் காற்று மாசுபாடு, காட்டுயிர் பாதுகாப்பு போன்ற சட்டங்களின்கீழ்தான் பெரிய பெரிய குற்றங்கள் பதிவாகும். இவற்றில்தான் குற்றங்கள் அதிகமாக நிகழ்கின்றன. ஆனால், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் சட்டத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று புரியவில்லை. சூழலியல் குற்றங்கள் என்பது குறித்து இந்தியாவில் நாம் இன்னும் விரிவாகப் பேசத் தொடங்கவே இல்லை. மேலதிகமான விதிமீறல்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. அவை விதிமீறல்களாகவும் சிவில் குற்றங்களாகவும்தான் கவனிக்கப்படுகின்றன. கொடுங்கையூர், பெருங்குடி போன்ற பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுகிறோம். கொள்ளளவைத் தாண்டி கொட்டுகிறோம் என்று அரசுக்கே தெரியும். இருந்தாலும் செய்கிறோம். சூழலியல் குற்றங்கள் குறித்தும் இதில் இணைத்தது நல்ல முயற்சிதான். ஆனால், தரவுகள் தெளிவின்றி இருக்கின்றன. அதைச் சரியாகக் கொடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக, காவல்துறையில் எப்படி ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி யூனிட்டுகள் இருக்கின்றனவோ, அதேபோல் சுற்றுச்சூழல் குற்றப்பிரிவு என்ற தனிப் பிரிவும் கொண்டுவரப்பட வேண்டும். அதில் சூழலியல் ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்கிறார்.

சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டத்தைத் தவிர்த்துவிட்டு, சூழலியல் குற்றங்களைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.

சூழலியல் குற்றங்களில் முதன்மையாக உள்ள மாநிலங்கள்

ராஜஸ்தான் - 2,163
உத்தரப்பிரதேசம்- 1,854
மகாராஷ்டிரா- 285
இமாச்சலப்பிரதேசம்- 196
தமிழ்நாடு- 274
கர்நாடகா- 184
ஜார்கண்ட்- 158

உலக அளவில் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 20 நகரங்கள் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால், காற்று மற்றும் நீர்ச் சட்டம் இரண்டையும் சேர்த்து மொத்தமே வெறும் 36 குற்றங்கள்தான் பதிவாகியுள்ளன என்று இந்த ஆவணம் சொல்கிறது. இந்தத் தரவுகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து வாங்கி, தொகுத்துக் கொடுத்துள்ளது தேசிய குற்ற ஆவணப் பதிவேடு. சூழலியல் குற்றங்களைப் பொறுத்தவரை இந்தியா இன்னமும் அதைத் தீவிரக் குற்றமாகக் கருதவில்லை. விரைவாகி வரும் துருவப் பனி உருகுதல், கடல் அமிலமயமாதல், கடல் மட்ட உயர்வு போன்ற தீவிரப் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தொழிற்சாலை மாசுபாடுகள், சூழலியல் அக்கறையற்ற வளர்ச்சித் திட்டங்கள் போன்றவையே இந்தப் பெரிய பெரிய பேரழிவுகளுக்கு வித்திடுகின்றன. ஆகவே, சுற்றுச்சூழல் விதிமீறல்களைக் குற்றங்களாகக் கணக்கெடுத்து, தரவுகளைச் சேகரிக்க வேண்டும்.

சூழலியல் குற்றங்கள்
சூழலியல் குற்றங்கள்
Pixabay
100 லாக்அப் மரணம்; பெண்களுக்கு எதிராக 3.59 லட்சம் வழக்குகள்! -அதிர்ச்சி கொடுத்த குற்ற ஆவணக் காப்பகம்

குற்ற ஆவணம் என்பது வெறுமனே தரவுகளின் கூடாரமாக இருக்கக்கூடாது. குற்றங்களின் தீவிரத்தைப் பொறுத்து அதை முறையாகத் தொகுக்க வேண்டும். இந்தியாவில், சூழலியல் குற்றங்கள் பதிவுசெய்யப்படும் விதத்திலேயே பல சிக்கல்கள் இருக்கின்றன. அந்தக் குற்றங்கள் குறித்த தரவுகளைத் தொகுக்கும் முறை பற்றிய தெளிவான வரையறைகள் இல்லை. இந்தச் சிக்கல்கள் களையப்பட வேண்டும்.

சூழலியல் குற்றங்களில் பொதுவாக, அறிவியல் ஆதாரங்கள்தான் மிக முக்கியம். ஆகவே, சூழலியல் குற்றப்பிரிவு என்று காவல்துறையில் தொடங்கப்பட்டு, அதில் அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய சுற்றுச்சுழுல் குற்றப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.