Published:Updated:

ஆணி அடிப்பதால் ஆயுளை இழக்கும் மரங்கள்! - தடைபோடுமா தமிழக அரசு?

Trees
பிரீமியம் ஸ்டோரி
News
Trees

ஆபத்து

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒருபுறம் மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், விளம்பரத்திற்காக விளம்பரப் பலகைகள் வைத்தும், ஆணி அடித்தும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன மரங்கள். இதனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் ஆயுளை இழந்து வருகின்றன. மரங்களின் எண்ணிக்கை குறைந்தால் ஆக்சிஜன் குறைந்து காற்றில், ‘கார்பன் மோனாக்ஸைடு’ அதிகரித்துச் சுவாசிக்கவே திண்டாட வேண்டிய அபாய நிலை உருவாகும். வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த மரக்கன்றுகள் நட வேண்டும் என அறிவுறுத்தும் அரசே, சாலை விரிவாக்கத்திற்காகச் சத்தம் இல்லாமல் மரங்களைச் சாய்த்துக்கொண்டிருக்கிறது.

ஆணி அடிப்பதால் ஆயுளை இழக்கும் மரங்கள்! - தடைபோடுமா தமிழக அரசு?

தப்பி நிற்கும் மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் அமைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்கும் விதமாகச் சென்னையில் உள்ள சிநேகம் தொண்டு நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து இத்தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஜெயலெட்சுமியிடம் பேசினோம்.

“மழை பெய்வதற்கு ஆதாரமான மரங்களை நம் உயிரைப் போல நினைக்க வேண்டும். அடுத்த தலைமுறைகளின் மூச்சுக்காற்று மரங்கள்தான். சிறு துரும்பு பட்டாலே துடித்துப்போகும் நாம், மண்ணில் வேரூன்றி நிற்கும் மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை உணராமல் இருக்கிறோம். டிஜிட்டல் யுகத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் எனச் சமூக வலைதளங்கள் அதிகரித்துள்ள சூழலிலும், விளம்பரத்திற்காக மரங்களைத் தொந்தரவு செய்கிறார்கள். மரத்தில் ஆணி அடிப்பதால் நுண்திசுக்கள் பாதிப்பு ஏற்படும். உணவுக்குழாயும் தடைப்பட்டு மரம் வேகமாகப் பட்டுப்போகும். மழைக் காலத்தில் ஆணி துருப்பிடித்துத் தானாகவே கீழே விழுகிறது. அந்தத் துளையில் பூஞ்சாணம், பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜெயலெட்சுமி, பிரதீப்
ஜெயலெட்சுமி, பிரதீப்

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மரத்தில் ஆணி அடிக்கவும், விளம்பரம் செய்யவும் தடை உள்ளது. இதை மேற்கோள் காட்டியும், மரங்களில் ஆணி அடிப்பதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தியும் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளோம். ‘தமிழகத்தில் ஆணி அடிப்பதைத் தடுக்க என்ன சட்டம் உள்ளது’ என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்திடத் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். நல்ல தீர்ப்பிற்காகக் காத்திருக்கிறோம். கடந்த ஆண்டு இது தொடர்பான ஒரு வழக்கில், ‘மரங்களில் விளம்பர போர்டுகள் வைக்கச் சட்டப்படி அனுமதி கிடையாது. மீறினால், 2,000 ரூபாய் அபராதம் முதல் சிறைத் தண்டனை வரை வழங்கலாம்’ எனத் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. மரங்கள் வெட்டப்படுவது குற்றம் என்றால், மரங்களைச் சேதப்படுத்துவதும் குற்றமாகவே கருதப்பட வேண்டும்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆணி அடிப்பதால் ஆயுளை இழக்கும் மரங்கள்! - தடைபோடுமா தமிழக அரசு?

மரங்களில் இதுபோன்ற விளம்பரப் பலகைகள், ஆணிகளை அகற்றிப் பல தனியார் சமூக அமைப்பினர் புத்துயிர் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘சேலம் நண்பர்கள் குழு’ நிறுவனத் தலைவர் பிரதீப்பிடம் பேசினோம், “சேலத்தில் நண்பர்களாக இணைந்து தொடங்கிய அமைப்புதான் இது. கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இக்குழுவில் 70 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். ஆரம்பத்தில் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு வந்தோம். அப்போதுதான், ஒரு ஆலமரத்தில் 40-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள்மீது ஆணி அடித்தும், கம்பியால் இறுகக் கட்டியும் விளம்பரம் செய்திருந்தார்கள். ‘இது என்ன மரமா. இல்லை விளம்பரச் சுவரா’ என அதிர்ந்தே போனோம். மரக்கன்றுகளை மட்டும் நட்டுக்கொண்டே போனால், ஏற்கெனவே வளர்ந்து பல வருடங்களாக நிழல் தந்து கொண்டிருக்கும் மரங்களை எப்படிக் காப்பாற்றுவது என யோசித்தோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபடுவோம். இதில், மாதத்தில் ஒரு ஞாயிறு மட்டும் மரங்களில் ஆணிகள், விளம்பரப் பலகைகளை அகற்றுவது என முடிவு செய்து அகற்றி வருகிறோம்.

‘‘மரங்களில் ஆணிகளை அகற்றிவிட்டு அந்தத் துளையில் நல்லெண்ணெயில் மஞ்சள்பொடி கலந்த கலவையைத் தேய்த்து மூடிவிட்டால், துளை அடைக்கப்படுவதுடன் நோய்த் தொற்றும் ஏற்படாது.’’

பெருகிவரும் தொழில் போட்டியால் சித்தா, ஆயுர்வேத மருத்துவம், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், யோகா வகுப்புகள், செப்டிக் டேங்க் கிளினிங் போன்றவை குறித்த விளம்பரப் பலகைகள், விளம்பரத் தட்டிகளை மரத்தில் ஆணி அடித்தும், கம்பிகளால் கட்டியும் விளம்பரம் செய்கிறார்கள். இதில் மரங்களின் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள்தான் அதிகம். சுலபமாக ஆணி அடித்து மாட்டுவது விளம்பர யுத்திகளில் ஒன்றாக நினைக்கிறார்கள்” என்றவர் எங்கெங்கு இதைச் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் சொன்னார்.

ஆணி அடிப்பதால் ஆயுளை இழக்கும் மரங்கள்! - தடைபோடுமா தமிழக அரசு?

“மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களான பேருந்து நிலையம், கோயில், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகளில்தான் இதுபோன்ற விளம்பரத்தை அதிகமாகப் பார்க்க முடிகிறது. ‘நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களில் விளம்பரம் செய்தால் நடவடிக்கை எடுப்போம்’ எனப் பெயருக்கு அறிக்கைவிடும் அதிகாரிகளே, சாலைகளின் வளைவுகளில் தகரத் துண்டுகளில் எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் சிவப்புநிற ‘ரிப்ளக்டர் ஸ்டிக்கர்’ஐ ஒட்டி ஆணியால் அடிக்கிறார்கள்.

மரங்களில் ஆணிகளை அகற்றிவிட்டு அந்தத் துளையில் நல்லெண்ணெயில் மஞ்சள்பொடி கலந்த கலவையைத் தேய்த்து மூடிவிடுகிறோம். இதனால், துளை அடைக்கப்படுவதுடன் நோய்த் தொற்றும் ஏற்படாது. விளம்பரம் அகற்றப்பட்ட பிறகு அதே மரத்தில், ‘மரத்தில் ஆணி அடித்து விளம்பரம் செய்யாதீர்கள், மரத்தில் ஆணி அடித்தால் 2,000 ரூபாய் அபராதம்- நீதிமன்றச்சட்டம்’ என்ற அறிவிப்புப் பலகையை இலகுவாகக் கட்டிவிடுகிறோம். தொடர்ந்து ஒரு மாதம் கண்காணித்து, பிறகு அதை அகற்றி விடுகிறோம். மீண்டும், விளம்பரம் செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குப் போன் செய்து பேசுவோம். “நாங்க செய்யல. ஏஜென்சிகாரங்க ஆணி அடிச்சுட்டாங்க போல. எடுக்கச் சொல்லிடுறோம்” என மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பதிலைச் சொல்வார்கள். தகவலைச் சொல்லிவிட்டு அவர்களை எதிர்பார்க்காமல் நாங்களே அப்புறப்படுத்தி விடுகிறோம். இதுவரை நடப்பட்ட 13,500 மரக்கன்றுகளில் 8,500 மரக்கன்றுகள் வளர்ந்து ஓரளவு நிழல் தருகிறது என்பதைவிட 2,000 பழைமையான மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணி, விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்தியுள்ளோம் என்பதையே திருப்தியாக நினைக்கிறோம்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

நம்மைக் காக்கும் மரங்கள் காயப்படாமல் இருக்கத் தடைச்சட்டம் ஒன்றே தீர்வாகும்.