Published:Updated:

`இனி கடலில் இருந்து பிளாஸ்டிக் பிடிக்கலாம்..!’ கிரேட் பசிபிக் க்ளீன் திட்டம்

மிதக்கும் மிதவை மூலம் கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் திட்டம் வெற்றியடைந்துள்ளது. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவைச் சேகரிக்கும் மிதக்கும் மிதவை
கழிவைச் சேகரிக்கும் மிதக்கும் மிதவை

பிளாஸ்டிக், சுற்றுச்சூழலை மிகக் கடுமையாகப் பாதித்து வருகிறது. அதைத் தடுக்க உலக நாடுகள் போராடிவருகின்றன. பிளாஸ்டிக் துகள்களால் மனித குலத்திற்கு ஆரோக்கியக் கேடு உருவாகிவருகிறது. மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் பிளாஸ்டிக் துகள்களால் நீர்நிலைகளும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் துகள்களிலிருந்து வெளியேறும் ரசாயன நச்சு, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் ஊடுருவி, அதை உட்கொள்ளும் மனிதனின் ரத்தத்தில் கலந்துவிட்டது. அதன் பாதிப்புகள் புற்றுநோய்வரை உருவாக்கக்கூடும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 6,00,000 முதல் 8,00,000 மெட்ரிக் டன் மீன்பிடி வலைகள் கடலில் கைவிடப்படுகின்றன அல்லது இழக்கப்படுகின்றன. எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையிலிருந்து கடலுக்குள் பாய்கின்றன.

நாகரிக உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக கடல்கள் மாற்றப்பட்டுவிட்டன. பல்வேறு கழிவுகள் கடலுக்குள் கலந்துகொண்டே இருக்கின்றன. அதில், முதல் இடத்தில் இருப்பது பிளாஸ்டிக். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 6,00,000 முதல் 8,00,000 மெட்ரிக் டன் மீன்பிடி வலைகள் கடலில் கைவிடப்படுகின்றன அல்லது இழக்கப்படுகின்றன. எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையிலிருந்து கடலுக்குள் பாய்கின்றன. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்துவருகின்றன. அவற்றில் முக்கியமானது, பசிபிக் கடலை சுத்தம்செய்யும் 'கிரேட் பசிபிக் க்ளீன்' என்ற திட்டம்.

நெதர்லாந்தைச் சேர்ந்த 'போயான் சால்ட்' என்ற விஞ்ஞானி வடிவமைத்த முறை, பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஏரோஸ்பேஸ் பொறியியல் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிப்பதற்காக நகரும் வளையம் போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் திட்டம், பல்வேறு தோல்விகளைச் சந்தித்தது.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக்
கடலில் கலக்கும் பிளாஸ்டிக்

முதலில் பிளாஸ்டிக் எதுவும் சேகரமாகவில்லை. அதன்பிறகு, பாராசூட் நங்கூரம் சேர்க்கப்பட்டது. இப்படி, பல்வேறு மாறுதல்களைக் கடந்து, முதல் வெற்றியை அடைந்துள்ளது. தற்போது அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2000 அடி நீளமுள்ள மிதக்கும் சாதனம் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது, அப்புறப்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் பெரிய பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிப்பது மட்டுமல்லாமல், சிறிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக்கையும் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் சேகரிப்பு மிதவை, தரையின் கீழே மூன்று அடி ஆழம் வரை உள்ளது. இது, கீழே உள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் 1.8 டன் பிளாஸ்டிக் துண்டுகள்வரை சிக்கவைக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது. அதில், டிரான்ஸ்மீட்டர்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் நிலையை செயற்கைக்கோள் வழியாக ஒரு கப்பலுடன் தொடர்புகொள்ள முடியும்.

போயான் சால்ட்
போயான் சால்ட்

வாரம் ஒருமுறை சேகரிக்கப்படும் கழிவுகள், கப்பல்கள்மூலம் எடுத்து வரப்படுகின்றன. இதைப் பற்றி குறிப்பிடும் போயன் சால்ட், ''ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பயணம் தற்போது முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இது, உலகின் பெருங்கடலில் நடக்கும் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை. பசிபிக் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துவருகிறோம். தற்போது, அதிக அளவு சேகரமாகி வருகிறது. இது, இந்தத் திட்டத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

சில ஆண்டுகளில் முழு அளவில் இதைச் செயல்படுத்தும்போது, சேகரிக்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி, இதற்கான செலவை ஈடுசெய்ய முடியும். இதுவரை சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக், மறுசுழற்சிக்காக டிசம்பர் மாதம் கரைக்குக் கொண்டுவரப்படும். கடலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு, பிரீமியம் சந்தை இருக்கலாம்'' என ட்விட் செய்துள்ளார்.

சேகரமான கழிவுகள்
சேகரமான கழிவுகள்

ஹவாய் மற்றும் கலிபோர்னியாவுக்கு இடையில், பரந்த அளவிலான பகுதியைக் கொண்டுள்ளது பசிபிக் பெருங்கடல். அந்தப் பகுதியில்தான் சோதனை முயற்சி நடந்துவருகிறது. இதன் வெற்றி, கடல் பகுதிகளைச் சுத்தமாக்கும் நம்பிக்கையை விதைக்கும் என்கிறார்கள், சூழலியல் ஆர்வலர்கள்.