Published:Updated:

ஊழிக்காலம் - 14 | "அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்" - சர்வதேச காலநிலை ஒப்பந்தங்களின் அரசியல்!

காலநிலை மாற்றம்
News
காலநிலை மாற்றம்

சர்வதேச ஒப்பந்தங்களில் இதுபோன்ற அரசியல் சிக்கல்கள் குறுக்கிடுகின்றன என்றால், காலநிலை மாற்றத்தைப் பற்றிய சமூகப் புரிந்துணர்வில் பல உளவியல் சிக்கல்கள் குறுக்கிடுகின்றன. அதில் முக்கியமானது காலநிலை மறுப்பு.

ஒரு குற்றம் நடக்கிறது. குற்றவாளிகள் இருவரையும் பிடித்து தனித்தனி அறைகளில் அடைத்துவிட்டார்கள். ஒருவனிடம் போய், "இதோ பார், நீ குற்றங்களை ஒப்புக்கொண்டு உன் கூட்டாளியைக் காட்டிக் கொடுத்தால், நீ விடுவிக்கப்படுவாய், அவன் தண்டிக்கப்படுவான். ஒருவேளை அவனுக்கு நேர்மையாக இருப்பதாக நினைத்துக்கொண்டு நீ குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால், அவன் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டால் என்ன ஆகும்?! யோசித்துப் பார்... அவன் தப்பித்துக் கொள்வான்" என்று சொல்கிறார் வழக்கறிஞர்.

"ஒருவேளை இருவருமே எதையும் ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டால், கையிலிருக்கும் சொற்ப ஆதாரத்தை வைத்து இருவரையும் தண்டித்தால் சில மாதங்கள் சிறையில் இருப்பீர்கள்" என்றும் சொல்கிறார்.

இதே விஷயம் இருவரிடமும் தனித்தனியாக முன்வைக்கப்படுகிறது.

1950களில் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம் இது. இதை முரண் போலத் தெரிகிற ஒரு உண்மை (paradox) என்று வகைப்படுத்துவார்கள். இதன் பெயர் சிறைவாசிகளின் குழப்பம் (prisoner's dilemma).

இந்த கற்பனைச் சூழலில் குற்றவாளிகள் என்ன என்ன செய்வார்கள்? இருவரும் ஒப்புக்கொண்டால் இருவருக்குமே அதிக தண்டனை கிடைக்கும், ஒருவர் ஒப்புக்கொண்டாலோ மற்றவருக்கு தண்டனை அதிகமாகும், இருவருமே வாயைத் திறக்கவில்லை என்றால் குறைந்தபட்ச தண்டனையோடு வெளியேறலாம்.
prisoner's dilemma
prisoner's dilemma

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனிதர்கள் பெரும்பாலும், மற்றவர்கள் தண்டிக்கப்பட்டு தாங்கள் தப்பிக்கின்ற வழியையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறது உளவியல். "எப்படியும் அவன் என்னை மாட்டிவிடுவான்" என்பதுபோன்ற நம்பிக்கையின்மையாலும் தான் தப்பிக்கவேண்டும் என்கிற சுயநலத்தாலும் உந்தப்படுகிற முடிவு இது. சிறைவாசிகளின் குழப்பம் என்கிற இந்த முரணுக்கு மிகச்சிறந்த உதாரணம் காலநிலை சார்ந்த சர்வதேச ஒத்துழைப்பு.

உலகத்தின் எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண முடியும். ஆனால் காலநிலைமாற்றத்துக்கான தீர்வு எளிதில் எட்டப்படுவதில்லை. ஒப்பந்தங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதெல்லாம் சர்வதேச அரசியல் சூழலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. "காலநிலை மாற்றம் சமகாலத்தின் மிகப்பெரிய சூழலியல், அமைப்பியல், அரசியல் சவால்" என்கிறார் எழுத்தாளர் ராபர்ட் கியோஹான்ஸ். "சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?" என்று சர்வதேச மாநாடுகளில் கேள்வி எழுப்பப்படும்போது, ஆசிரியரின் பார்வையைத் தவிர்த்து ஒளிந்துகொள்ளும் மாணவர்களைப் போலத்தான் பல உலக நாடுகள் இன்றும் நடந்துகொள்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காலநிலை மாற்றத்தின் பொறுப்பு யாருடையது என்பதில் முதல் சிக்கல் எழும். "யார் காரணமோ அவர்கள்தான் அதை சரிசெய்யவேண்டும்" என்பது இதன் தர்க்கரீதியான அடிப்படை. "தொழிற்புரட்சிக்குப் பின்னான காலங்களில் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும்தான் அதிகமான அளவில் கரிம உமிழ்வை வெளியிட்டன. ஆகவே, இப்போதைய தீர்வின் சுமை அவர்களுடையதுதான். எவ்வளவு அசௌகரியமாக இருந்தாலும், எத்தனை செலவு வந்தாலும் தீர்வை நோக்கிய திட்டங்களை அவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும். எங்களால் ஓரளவுதான் ஒத்துழைக்கமுடியும்" என்கின்றன வளரும் நாடுகள்.

காலநிலை மாற்றத்தால் யாருக்கு பாதிப்பு அதிகம் என்பது இன்னொரு கோணம். "நாங்கள் அதிக அளவில் உமிழ்வுகளை வெளியிடுவதில்லை என்றாலும், கடல்மட்டம் உயரும்போது எல்லாரையும்விட அதிகமாக பாதிக்கப்படப்போவது நாங்கள்தான். ஆகவே, எங்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி தீர்வின் சுமையைக் குறைக்கவேண்டும்" என்கின்றன தீவு நாடுகள்.

Climate Change | காலநிலை மாற்றம்
Climate Change | காலநிலை மாற்றம்
கேட்பதற்கு இது நியாயமாகத் தானே தெரிகிறது, பிறகு ஏன் இத்தனை குழப்பம் என்று உங்களுக்குத் தோன்றலாம். சர்வதேச அரசியல் ஒப்பந்தங்களில் நியாயத்துக்கான இடம் மிக மிகக் குறைவு. ஓங்கி ஒலிக்கின்ற குரல் யாருடையது என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.

உதாரணமாக, உமிழ்வுகளைக் குறைக்கும் விவாதம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். விவாதத்தின்போது உறுப்பினர்கள் எப்படிப்பட்ட அம்சங்களை யோசிப்பார்கள்? முதலில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை/உமிழ்வுகளைக் குறைக்கவில்லை என்றால் பேரிடர்களால் ஏற்படப்போகும் கூடுதல் செலவு எத்தனை என்று விவாதிப்பார்கள்.

அடுத்ததாக, ஒருவேளை உமிழ்வுகளைக் குறைத்தால், காலநிலை பாதிப்பும் குறைந்து, செலவும் குறையுமா என்று தேடுவார்கள். அதாவது, திட்டங்களின் மூலம் உமிழ்வுகளைக் குறைத்தால் எதாவது பலன் கிடைக்குமா என்பதை பொருளாதார ரீதியாக ஆராய்வார்கள். அதற்கான அழுத்தமான தரவுகள் உள்ளனவா என்பதும் தேடப்படும். இங்கு ஒரு பிரச்னை வரலாம். "உமிழ்வுகளைக் குறைத்தால் பேரிடர்கள் குறைய வாய்ப்பு உள்ளது" என்பதுபோன்ற தரவுகள் கிடைக்கும்போது, "குறையும்" என்றுகூட அழுத்தமாக சொல்ல மறுக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சாத்தியக்கூறுகளை ஆதாரமாக வைத்து நாங்கள் செயல்பட முடியுமா?" என்று கேள்வி எழுப்புவார்கள் அரசியல்வாதிகள். அறிவியலாளர்கள் மீதான அழுத்தம் அதிகமாகும். அவர்கள் உறுதியான முடிவுகளைத் தரும்வரை அனைவரும் காத்திருக்க முடிவு செய்தால் நேரம் விரயமாகும்.

அடுத்ததாக, கரிம உமிழ்வுகளைக் குறைப்பதற்கான திட்டங்களை நோக்கி உரையாடல் நகரும். திட்டங்களை அமல்படுத்த எவ்வளவு செலவாகும், நிகர லாபம் எத்தனை என்பது கணக்கெடுக்கப்படும். இவை எல்லாமே அந்தந்த நாடுகளின் பொருளாதாரப் பின்னணியில் நிகழும். அதாவது, அப்போதைக்கு ஒரு நாடு இருக்கும் சூழலில், காலநிலை மாற்றம் என்கிற ஒற்றை பிரச்சனைக்காக எவ்வளவு செலவு செய்யலாம் என்கிற உச்சவரம்பின் அடிப்படையில் இந்தக் கணக்கீடுகள் அலசப்படும்.

சர்வதேச ஒப்பந்தங்களில் ஏன் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்று இப்போது புரிந்திருக்கும். எல்லா நாடுகளும் தங்களது கண்ணோட்டத்தின் அடிப்படையில் இதை அணுகுகின்றன. அதை மற்ற நாடுகளால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட 'தேசிய நலன்' திட்டங்கள் உண்டு.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

இவற்றுக்குள் சர்வதேச ஒப்பந்தங்கள் குறுக்கிடாதவரை எதுவுமே பிரச்னையில்லை. ஒருவேளை தேசிய நலனுக்கும் ஒப்பந்தத்தின் மையக்கருத்துக்கும் முரண் இருந்தால் நாடுகள் உடன்பட மறுக்கும். பிறகு மற்ற நாடுகள் இதையே காரணமாக வைத்துத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும். சுட்டுவிரல்கள் நீட்டப்படுவதும் வாக்குவாதமுமாகப் பலநாள்கள் கழியும். ஒப்பந்தம் நீர்த்துப்போகும்.

"உலகப் போருக்குப் பின்னான சர்வதேச சூழலை உற்று கவனித்தால், அங்கு ஒத்துழைப்புக்கே இடம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்" என்று எழுதுகிறார் ராபர்ட் கியோஹான்ஸ். 'ஒருங்கிணைந்த செயல்பாடு' என்பதன் பொருளே மாறியிருக்கிறது. சர்வதேச அரங்கில் பெரியண்ணனாக இருந்து ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் மீது பிற நாடுகளுக்குத் தீவிர அதிருப்தி இருக்கிறது. சர்வதேச ஒப்பந்தங்களில் பழிபோடும் அறிக்கைகளும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளும் அதிகம் புழங்குகின்றன. குற்றம்சாட்டுவதிலேயே பல மாநாடுகள் முடிந்துவிடுகின்றன. பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் விலகியபோது, இதையே காரணமாக வைத்துப் பிற நாடுகளும் விலகலாம் என்ற அச்சம் நிலவியது. ஆக, ஒரு நாட்டின் நிலைப்பாடு பிற நாடுகளின் ஒத்துழைப்பையே கேள்விக் குறியாக்கிவிடுகிறது.

சர்வதேச ஒத்துழைப்புகுறைவதற்கு, நவதாராளமயக் கொள்கையும் (Neoliberal policies) ஒரு முக்கியக் காரணம் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. சர்வதேச அளவில் வேற்றுமைகளைக் களைந்துவிட்டு அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டிய நேரத்தில், இந்தக் கொள்கையின் அம்சங்கள் அதற்குப் பெரிய தடையாக வந்து நிற்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். காலநிலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது கூட நவதாராளமயக் கொள்கையால் ஊக்குவிக்கப்படும் நுகர்வுக் கலாசாரம் பெரிய சிக்கலாக இருக்கிறது.

தவிர, தொழிற்புரட்சிக்குப் பின்னால், புதைபடிவ எரிபொருட்களான பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் நவீன சமூகங்கள் வானுயரத்திற்குக் கட்டமைக்கப்பட்டன. இப்போது முன்வைக்கப்படும் மாற்று எரிபொருள் திட்டங்கள் அந்த அடிப்படையையே மாற்றியமைக்கின்றன. ஆகவே உலக நாடுகள் சற்றுப் பின்வாங்குகின்றன.

வெளிப்படையாகப் பார்த்தால் இது சரியானதாகவே தெரியும். ஆனால் மாற்று எரிபொருட்களில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதற்காகக் குறைந்துகொண்டேவரும் புதைபடிவ எரிபொருட்களை நம்பிக்கொண்டிருக்க முடியாதே! இப்போதைய சௌகரியங்களை முன்வைத்து மட்டுமே யோசித்தால் எதிர்கால சந்ததிகள் என்னவாகும்?!

புதைபடிவ எரிபொருட்களை விடுத்து, மாற்று எரிபொருளை அடிப்படையாக வைத்தே நவீன சமூகங்களை இயக்கமுடியும். இது சுலபமான வேலையல்ல என்பது உண்மைதான்.

(2019ல் இத்தாலியத் தலைவர்கள் காலநிலை மாற்றம் பற்றிய முன்னெடுப்புகளை நிராகரித்த சில நிமிடங்களிலேயே விவாதம் நடந்த Council கட்டடம் நீரில் மூழ்கியது. சமகால காலநிலை வரலாற்றின் மிகப்பெரிய நகைமுரண் இது.)
Venice, Italy - காலநிலை மாற்றம் குறித்த விவாதம் நடத்திய கவுன்சில் அறை
Venice, Italy - காலநிலை மாற்றம் குறித்த விவாதம் நடத்திய கவுன்சில் அறை

இந்த மாற்றத்தை நாம் நிலைப்படுத்துவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கலாம். இந்த மாற்றத்தில் நடைமுறைச்சிக்கல்கள் அதிகம், தொடக்க காலங்களில் கூடுதல் செலவும் ஏற்படலாம். ஆனால், புதைபடிவ எரிபொருட்களோடு ஒப்பிடும்போது இவை எல்லா வகையிலும் மேம்பட்டவை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டால் சமூகம் தடுமாறும் என்பதைவிட, சந்தை தடுமாறும் என்பதே உண்மை. இதை நன்றாகப் புரிந்துகொண்ட எண்ணெய் நிறுவனங்கள் வெவ்வேறு வழிகளில் புதைபடிவ எரிபொருள் சந்தையைக் கட்டிக்காக்க முயற்சி செய்கின்றன.

சர்வதேச ஒப்பந்தங்களில் இதுபோன்ற அரசியல் சிக்கல்கள் குறுக்கிடுகின்றன என்றால், காலநிலை மாற்றத்தைப் பற்றிய சமூகப் புரிந்துணர்வில் பல உளவியல் சிக்கல்கள் குறுக்கிடுகின்றன. அதில் முக்கியமானது காலநிலை மறுப்பு. அதற்குக் காரணங்கள் என்ன? அதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?

- Warming Up...