Published:Updated:

கட்டடங்களாக மாறிய குளங்கள்; நீதிமன்ற உத்தரவால் மீட்கப்படுமா? எதிர்பார்ப்பில் ஆர்வலர்கள்

சென்னை உயர் நீதிமன்றம்
News
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுத்து அவற்றை அகற்றுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இது திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள குளங்களை மீட்டெடுப்பதை வலுப்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மக்களுக்கு பயனளித்துக்கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட குளங்களும் இவற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களும் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாக மாறிப்போயின. இந்நிலையில்தான் இக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இவற்றை இயல்பான நிலைக்கு மீட்டெடுத்து, தண்ணீர் சேமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக, வருவாய்த்துறை சார்பில் ஆவனங்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுத்து அவற்றை அகற்றுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இது திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள குளங்களை மீட்டெடுக்க, மேலும் வலுசேர்த்துள்ளது. இதனால் தங்களது ஊரில் இருந்த அனைத்துக் குளங்களும் நிச்சயம் மீட்கப்படுமென இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

சென்னை மழை
சென்னை மழை

கடந்த ஒரு மாதமாகப் பெய்த தொடர் கனமழையின் காரணமாகத் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் நகரப் பகுதிகளில், மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகத் தோற்றமளித்தன. பல நாள்களாகியும் வெள்ளநீர் வடியவே இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர். குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டதால்தான் இந்த அவலநிலை உருவானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த யதார்த்த உண்மை அனைவரும் அறிந்ததுதான் என்றாலும்கூட, இதற்குத் தீர்வு ஏற்படாமலே உள்ளது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் பலமுறை, நகரப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டபோதிலும்கூட, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியாளர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்கறிஞர் அய்யப்பன்
வழக்கறிஞர் அய்யப்பன்

இந்தச் சூழலில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் சில தினங்களுக்கு முன்பு நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

``தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் என்று 2018-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும் பணியை அரசு தீவிரப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ``ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் தொடர்பாகத் தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது. நீர்நிலைகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கும் முன்னோடி திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, ``வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள், அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுப்பு செய்து விரிவான அறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நீர்வளத் துறை வழங்கியுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இறையன்பு ஐ.ஏ.எஸ்
இறையன்பு ஐ.ஏ.எஸ்

சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவும், தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகளும் நீர்நிலை மீட்பாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில், வெள்ளக்காடாகவும் கோடைக்காலங்களில் கடுமையான வறட்சி நிலவக்கூடிய பகுதியாகவும் விளங்கும் திருத்துறைப்பூண்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள் புத்துயிர் பெறும் என இப்பகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அய்யப்பன், ``திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிகள்ல மட்டுமே 46 குளங்கள் இருந்துச்சு. இதுல பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள், கடைகளாக மாறிப்போயிடுச்சு. இதெல்லாமே கடந்த பத்தாண்டுகள்ல அதிகமா ஆக்கிரமிக்கப் பட்டது. அரசு அதிகாரிகளின் துணையோடு, அரசியல் கட்சி பிரமுகர்கள்தான் அதிகமா ஆக்கிரமிச்சு இருக்காங்க. இந்தப் பகுதி மக்களுக்கு முக்கிய நீராதாரமா இருந்த, ஓடையில ஒரு தனியார் மருத்துவமனையே கட்டப்பட்டிருக்கு. அந்த மருத்துவமனை நிர்வாகம் பணம் கொடுத்து வாங்கியது, வெறும் 3,000 சதுர அடிதான். ஆனால், வாகனங்கள் நிறுத்துறக்கு மட்டுமே 5,000 சதுர அடி இடம் ஒதுக்கியிருக்காங்க. அப்படினா மருத்துவமனை கட்டடம் எதுல கட்டப்பட்டிருக்குனு நல்லா தெளிவாகவே தெரியுது.

பாப்பான் ஓடை குளத்துல மருத்துவமனை மட்டுமல்ல... அடுக்குமாடி குடியிருப்பு உட்பட ஏகப்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கு. பிரதி மருந்தீஸ்வரர் கோயிலுக்கு எதிர்ல உள்ள குளம் பல ஏக்கர் பரப்பளவும் கொண்டது. அதோட ஒரு பகுதியில கல்யாண மண்டபம் கட்டப்பட்டுக்கிட்டு இருக்கு. அதுல இன்னும் பல ஆக்கிரமிப்புகள் இருக்கு. நகராட்சி குளத்துல, இரும்புகடை குடோன் இயங்கிக்கிட்டு இருக்கு. குட்செட் பகுதியில உள்ள நகராட்சி குட்டையை ஆக்கிரமிச்சி, ஒரு தனியார் மருத்துவமனையே கட்டப்பட்டிருக்கு. இதுமாதிரி இன்னும் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களா மாறிக்கிடக்கு.

தேனிக்குளம், வெட்டுக்குளம், ராமர்குளம், தாளான் குளத்தோட நீர்வழிப்பாதைகள்லயும் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள். இந்த குளங்கள்லதான் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களோட கழிவுகள் விடப்படுது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, இங்கயிருந்த குளங்களை பழைய இயல்பான நிலைக்கு மீட்டெடுத்தால்தான், கனமழை காலங்கள்ல் திருத்துறைப்பூண்டி மக்கள் நிம்மதியா வாழ முடியும், இந்த குளங்கள்ல தண்ணீரை சேமிச்சி, கோடைக்காலங்கள்ல மக்கள் பயன்படுத்தவும் உதவியா இருக்கும்.

Court -Representaional Image
Court -Representaional Image

இதை வலியுறுத்திதான் 2018-ம் வருஷம் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு போட்டேன். எனக்கு ஏகப்பட்ட கொலை மிரட்டல்கள். ஆனாலும், நான் இந்த வழக்குல உறுதியா இருந்துக்கிட்டு இருக்கேன். நீர்நிலைகள்ல உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான ஆவணங்களை வருவாய்த்துறையினர் நீதிமன்றத்துல தாக்கல் செஞ்சாங்க. எந்தெந்த சர்வே நம்பகள்ல என்னென்ன ஆக்கிரமிப்புகள் இருக்குறதை உறுதிப்படுத்தி, பிரமாணப் பத்திரமும் தாக்கல் செஞ்சிருக்காங்க. ஆனாலும் கூட நில அளவை பிரிவு அலுவலர்கள், கணக்கெடுக்க வேண்டிய நீர்நிலைகள் மிச்சமிருக்கு. அந்தப் பணிகள் ரொம்ப மந்தமா நடந்துச்சு. இந்த நிலையிலதான், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, தமிழ்நாடு முழுக்கவே நீர்நிலைகள்ல உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணியில தமிழக அரசு தீவிரமா இறங்கியிருக்கு. திருத்துறைப்பூண்டி பகுதியில உள்ள குளங்கள் அனைத்தும் மீட்கப்படும்னு உறுதியா நம்புறோம்’’ என்றார்.