
இடுக்கண் வருங்கால் நகுக!
`பச்ச, மஞ்ச, ரோஸ் தமிழன்டா...’ என்றொரு சினிமா பாடல் உண்டு. தமிழ்நாட்டின் எண்ணற்ற தெருக்களில் தண்ணீருக்காகக் காத்திருக்கும் வண்ண வண்ண பிளாஸ்டிக் குடங்களும் அதையே சொல்கின்றன. `பச்ச நானு, ஆரஞ்சு குமாரு, மஞ்ச மஞ்சு’ என்பதாக தமிழ்ச்செல்விகளும் செல்வன்களும் குழாயடியில் சண்டையிடுகிறார்கள். தமிழர்களின் சமீபத்திய இடுக்கண், தண்ணீர்ப் பஞ்சம்தான். வாராவாரம் லாரிகளில் தண்ணீர் வாங்குவதில் பணம் தண்ணீராக, தண்ணீர் பணமாகச் செலவழிகிறது.
பற்றாக்குறை காலத்தில் எத்தனையோ பேரின் வாழ்க்கை மாறியிருக்கிறது. குறிப்பாக, தண்ணீர் லாரி உரிமையாளர்கள், `நீங்க புக் பண்ணி நாலு நாள்தானே ஆச்சு. பத்து நாளுக்கு முன்ன புக் பண்ணவங்களே இன்னும் காத்திருக்காங்க' என்று கெத்துகாட்டுவதில், அரசு அதிகாரி தோரணை தெரிகிறது. பரிந்துரை கேட்டு கவுன்சிலர், எம்.எல்.ஏ, மந்திரி வரை மக்கள் தங்கள் சக்திக்கேற்ப அதிகார எல்லையைத் தொட்டுப்பார்க்கிறார்கள். சினிமாக்காரர்கள் நீச்சல்குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட, ரசிகர்களின் இன்னொரு முகமும் வெளியே வந்தது. இன்னும், மணமக்களுக்கு தண்ணீர் கேன் பரிசளிப்பது, ரயிலில் தண்ணீர் தனியாகப் பயணிப்பது போன்ற யுகப்புரட்சியெல்லாம் நடக்கின்றன. முக்கியமாக, ஆசை ஆசையாக வளர்த்த செடிகள் பாரமாகத் தெரிகின்றன.
இப்போது, நாங்கள் இருக்கும் வீட்டுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. நிசப்தமான பொழுதுகளில் கடிகாரம் பார்க்காமல் சத்தங்களைக்கொண்டே மணி கண்டுபிடிப்போம். பக்கத்து வீட்டில் சுப்ரபாதம் ஒலித்தால், காலை 5.30 மணி. எதிர் வீட்டில் பால் குக்கர் சத்தமிட்டால் மணி 6.00 பின், வீட்டிலிருந்து மோட்டார் சத்தம் என்றால், 6.15. `காக்கா... காக்கா’ என்றழைக்கும் எதிர்வீட்டுக் குரல் காட்டுவது 8.00 மணி. இப்போது, போர் போடும் சத்தம் எந்நேரமும் காதைத் துளைக்கிறது. அது ஒருவழியாக நின்றுவிட்டால், 24 மணி நேரம் ஆகிவிட்டது எனப் புரிகிறது. மீண்டும் ஒரு வீட்டில் முதலில் இருந்து காதையும் மண்ணையும் துளைக்கத் தொடங்குகிறார்கள்.

மழைக்காக சென்னை வானிலை மையத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்த நாள்கள் உண்டு. `தமிழகத்தின் ஒருசில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்’ என்பார்கள். இத்தனை புராபபிலிட்டி உள்ள கணிப்பைக்கொண்டு, ஒரு பய `ஏன் எங்க ஊர்ல மழை பெய்யல?’ என்று கேட்க முடியாது. ஆனாலும், பெய்தது. இப்போது, `அய்யம்பேட்டை மூன்றாவது தெருவுக்கு, இரண்டு சொட்டு மழை பெய்யும்’ என்கிறார் வெதர்மேன். சரியாக இரண்டு சொட்டு பெய்துவிட்டு நின்றதும், அறிவியலை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.
எங்கெங்கும் தண்ணீரே பேச்சு என்றிருக்கும்போது, அலுவலகங்கள் மட்டும் தப்பிக்க முடியுமா? கணவரின் அலுவலக நண்பர் ஒருவர் 800 அடி ஆழத்துக்கு போர் போட்டிருக்கிறாராம். கூடுதலாக 200 அடி சேர்த்தால் மண்ணுக்கு அடியில் ஒரு கிலோமீட்டர் ஆழம். இப்படியே போனால், வீட்டுக்கு வீடு பெட்ரோல் தயாரிக்கலாம். பிறகு, அதை விற்று தண்ணீர் வாங்கலாம். அதையும் கொஞ்சம் தாண்டினால், அமெரிக்காவுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் போக எளிமையான வழி கிடைத்துவிடும். சென்னையைப் பொறுத்தவரை வற்றாத ஜீவநதி என்றால், சாலைகளின் இருமருங்கிலும் ஓடும் சாக்கடைதான். வீட்டைச் சுற்றி சிறிது மண்கூட இல்லாமல் பார்த்துக்கொள்வது, கான்கிரீட் சாலைகளில் பெருமிதம்கொள்வது என்று மழை பெய்தால்கூட உள்வாங்கிக்கொள்ளவோ, நிலத்தடிநீர் அதிகரிக்கவோ முடியாதபடி செய்துவிட்டதில் நம் புத்திசாலித்தனம் பல்லிளிக்கிறது.

நண்பன் ஒருவன் மேன்ஷனில் வசிக்கிறான். தினமும் சீக்கிரமே அலுவலகம் வந்துவிடுவதால் மிகுந்த நல்ல பேர். பல் தேய்ப்பது, குளிப்பது, இன்னபிற எல்லாமே அந்தச் சீக்கிரத்தில்தான். இப்போது தண்ணீர்ப் பஞ்சத்தால், வேலையை வீட்டில் இருந்தே பார்க்கச் சொல்லிவிட்டார்கள். அதிலும் ஒரு லாபம், `ஜட்டி மட்டும்தான் தினம் துவைக்கவேண்டியிருக்கிறது!’ என்று மகிழ்ச்சி கொள்கிறான். இந்த ஊரில் யார் வீட்டுக் கதவையும் தட்டாமல் உள்ளே நுழையக் கூடாது என்பதே இதிலிருக்கும் செய்தி.
எங்கள் வீட்டு அருகில் ஒரு சேட்டுக் கடை இருக்கிறது. சேட்டு இல்லாதபோது சேட்டம்மா கல்லாவைப் பார்த்துக்கொள்வார். நம்ம ஆள்களுக்கு சேட்டு என்றால் உசத்திதான். 16 வயதில் ஆரம்பித்து 80 வயதானாலும் தாவணியோடு இருக்கும் வரம் பெற்றவர்கள் அந்தப் பெண்கள். தண்ணீருக்குப் பஞ்சம் வந்ததும், ராஜஸ்தான் சேட்டம்மா சென்னையிலும் குழாயடியில் காத்திருக்கிறார். `இவை ஒரே நிலம்' என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஒரு கேன் தண்ணீர் பிடித்து தலையில் தூக்கிவைத்து இரண்டு தெரு நடந்துபோகிறார். சேட்டம்மாவுக்காக சக தண்ணீர் சுமக்கும் பெண்கள் வருத்தப் படுகிறார்கள். தங்களுக்குத் தண்ணீரை ஏந்த சைக்கிள் தராத கணவர்களைவிட சேட்டம்மா வுக்குத் தராத சேட்டு, வில்லனாகத் தெரிகிறார்.
நிலத்தடிநீர் இன்னும் எங்களை கைவிடவில்லை. அகில உலக அளவில் மோட்டருக்கு திருஷ்டி சுற்றிப் போட்ட சம்பவம் எங்கள் குடும்பத்தில்தான் நடந்தேறியது.
மாநகர உணவகங்களில் கை கழுவும் இடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம், `தண்ணீரை வீணாக்காதீர்’. கும்பகோணம் தாண்டினால், `கை கழுவிய பிறகு பைப்பை மூடவும்’ என்கிறார்கள். `என்ன அராஜகம், சீக்கிரமே மாநகரமாகிவிடுவீர்கள்!’ என நினைத்துக்கொண்டேன். வாட்ஸ்அப் வதந்திகளும் தண்ணீர்ப் பஞ்சத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. காஞ்சிபுரம் அத்திவரதர் தண்ணீருக்குள் மீண்டும் போகும் வரை தண்ணீருக்குக் கஷ்டம்தானாம். கடவுள், `நான் தூணிலும் துரும்பிலும் இருப்பேன்; வாட்ஸ்அப்பில் மட்டும் இருக்க மாட்டேன்’ என்று சபதமிட்டிருப்பார். ஏரிகளையும் குளங்களையும் நாம் ஆக்கிரமித்துவிட்டு பழியை அத்திவரதர் மேல் போடுவதற்கு, கருடபுராண தண்டனை என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன்.
எங்கள் வீட்டு பிளம்பரின் மனைவி ஒருநாள் அழைத்து, `யாருங்க நீங்க, அடிக்கடி என் புருஷனைக் கூப்பிட்டிருக்கீங்க?’ என்று கோபமாகக் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. இந்த ஒரு மாதத்தில் இருபது முறையாவது மோட்டார் ரிப்பேருக்காக பிளம்பரை அழைத்திருப்பேன். கணவரின் அலைபேசி கால் ஹிஸ்டரியைப் பார்த்துப் பயந்திருப்பார். பாட்டியானதும் பால்கனியில் அமர்ந்து சொல்லிக்கொண்டிருப்பேன், `வீட்டை கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்... மோட்டாரை ஓடவிட்டுப்பார்.'
அடுக்குமாடி குடியிருப்புகளின் தண்ணீர்க் கதை இன்னும் சுவாரஸ்யமானது. பெரும்பாலும் நல்லுள்ளம்கொண்ட வயதானவர்கள், பள்ளிக்குச் சென்றுவிடும் அளவுக்குப் பெரிய குழந்தைகளைக்கொண்ட குடும்பஸ்திரீகள் - இவர்களே தண்ணீர் டிபார்ட்மென்ட்டை கவனித்துக்கொள்வார்கள். மோட்டார் போடுவது, அணைப்பது, டேங்க் சுத்தம் செய்வது, ரிப்பேருக்கு ஆள் தேடுவது, அதற்கான செலவுகளைப் பகிர்வது என்பதாக வாழ்க்கை சுவாரஸ்யமாகப் போகும்.
`5.30-க்கு போட்டேன்கிறீங்க. 5.35-க்கு எனக்கு தண்ணி வரல’ என்று சண்டைக்கு வருவார் நான்காவது மாடிக்காரர். நான்காவது மாடிக்கு தண்ணீர் வர, குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும் என்பது தெரியாமல், கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் வாங்கியிருந்தாலும் காமன்சென்ஸில் கோட்டைவிடுவார்.

ஒருவழியாக அந்த வயதானவரையும் குடும்பஸ்திரீயையும் பாடாப்படுத்தித் துரத்திவிட்டு, மீட்டிங் போட்டு அடுத்த `கைப்புள்ள'யைத் தேடுவார்கள். பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீருக்கு மீட்டர் வைத்துவிடுகிறார்கள். சிறிய குடியிருப்பு என்றால், தலைக்கு இவ்வளவு அல்லது ஒரு வீட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்படுகிறது. `நாங்கள் பத்து நாள்கள் ஊரில் இல்லை, போன ஞாயித்துக்கிழமை காது குத்துக்குப் போனோம். காலையிலேயே ஆபீஸுக்குப் போயிடுறேன். நானும் அதே பில் கட்டணுமா?’ என்பதாக ஒவ்வொரு குடியிருப்பிலும் எந்நேரமும் வெடிக்கக்கூடிய எரிமலை காத்திருக்கிறது. வாடகைக்கு வீடு தேடினால், `தண்ணி வந்தா ஒரு ரேட்டு. தண்ணி வராதுன்னா பாதி ரேட்டுதான்' என்கிறார்கள். எந்த நாடோ, ஊரோ, நிலமோ இனி நீரின்றி அமையாது வாடகை.
வாழைதான் தண்ணீரை அதிகம் வாங்கும் என்பார்கள். இங்கே தண்ணீர் சேமிக்கவும் அதுவே உதவுவதுதான் அழகிய முரண். இன்னும் மூடப்படாத சென்னை உணவகங்களில் தட்டுக்குப் பதிலாக வாழையிலை அல்லது தட்டுக்கு மேல் வாழையிலை என்பதாகப் பயன்படுத்துவதால், பாத்திரம் தேய்க்கும் தண்ணீரை மிச்சப்படுத்துகிறார்கள். ஸ்பூன், ஃபோர்க் எல்லாம், கேட்டால் மட்டுமே கிடைக்கும். வார இதழ்களில், தண்ணீரைச் சேமிக்க பத்து வழிகள் சொல்லித்தருகிறார்கள். பக்கெட்டில் பிடித்துக் குளிக்கவும், சொம்பில் பிடித்து பல் தேய்க்கவும், தினமும் சோப்புப் போட்டு குளிக்கத் தேவையில்லை, துணிகளை வாஷிங்மெஷி னில் போட வேண்டாம், அரிசி களைந்த நீரை செடிக்கு ஊற்றவும் என்பதாக நீள்கிறது.
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், நவீனத்தால் சங்கடம் வரும்போதெல்லாம், பழைமையிடமே தஞ்சமடைகிறோம். சங்கடம் தீர்ந்ததும் ஞாபகமாக கற்றதை மறந்தும்போகிறோம்.
பழைமை என்றதும் நினைவுக்குவருகிறது. சமீபத்திய செய்தித்தாள்களில், மீசையால் லாரியை இழுத்தவர், ஆணியை மட்டுமே உணவாகச் சாப்பிடும் குந்தாணி, ஒரே அடியில் மாமியாரின் அத்தனை பற்களை யும் பிடுங்கிப்போட்ட பெண் போன்ற சாதனையாளர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 50 வருடங்களாக கிணற்றை வற்றாமல் பார்த்துக்கொள்ளும் தம்பதி, வீட்டிலேயே தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்திவரும் பேராசிரியர், தன் வீட்டுத் தண்ணீரை 60 வருடங்களாக இனாமாகத் தரும் தாத்தா போன்றோர் புதிய சாதனையாளர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். கழிவறை யில் தண்ணீருக்குப் பதிலாக பேப்பர் பயன் படுத்தும் நிலை வந்தால், நம்மாள்கள் செய்தித் தாளை வீணாக்க மாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஊரெல்லாம் தண்ணீர்க் கதை கண்ணீர்க் கதையாக மாறிவிட்டபிறகு, நாங்கள் மட்டும் இந்த வருடம் நூலிழையில் தப்பித்திருக்கிறோம். நிலத்தடிநீர் இன்னும் எங்களை கைவிடவில்லை. அகில உலக அளவில் மோட்டாருக்கு திருஷ்டி சுற்றிப் போட்ட சம்பவம் எங்கள் குடும்பத்தில்தான் நடந்தேறியது. நீர்ச் சேமிப்பின் தொடர்ச்சியாக மழையின் பெருமை பற்றி குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் ராஜாக்கள் `மாதம் மும்மாரி பொழிகிறதா?’ என்று மந்திரியிடம் கேட்டுப் பார்களாம் என, தம்கட்டி நடித்துக் காண்பித்தால், `ஏன்... ராஜாவே வெளியே வந்து பார்த்துக்க மாட்டா ராமா?’ என்கிறாள் மகள்.
மகனோ, `மாரி-1, மாரி-2 வந்தாச்சும்மா, மாரி-3 அடுத்த வருஷம் ரிலீஸ் பண்ணுவாங்க’ என்கிறான்.
எனக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது... வீட்டைவிட்டு வெளியே கிளம்பினால், கதவைப் பூட்டினோமா, கேஸை நிறுத்தினோமா என்று கேள்வி கேட்டே மனது என் நிம்மதியைக் கெடுக்கும். இப்போது, இதயத்தை மோட்டார் ஆக்கிரமித்துவிட்டது. சதா மோட்டார் ஓடுவதுபோல பிரமையாகவே இருக்கிறது. மோட்டாரையும் மனத்தையும் நிறுத்தி, பையனைத் தரதரவென இழுத்துக்கொண்டு மேத்ஸ் டியூஷனுக்கு விரைந்துகொண்டிருந்தேன்.
``நல்லா படிக்கிறானா, கணக்கு வருதோன்னோ?” என்றார் எதிர் வீட்டு மாமி.
``கணக்குதானே மாமி, அதெல்லாம் அவனுக்கு தண்ணிபட்ட பாடு!’’ என்றேன்.