Published:Updated:

`கரையோரம் பனை விதை; பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!’- பாலாற்றை மீட்டெடுக்கும் வேலூர் இளைஞர்கள்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

பாலாற்றில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஆற்றங்கரையோரம் பனை விதைகளை நட்டுவருகிறார்கள், வேலூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர். மணல் கொள்ளையாலும், தோல் கழிவுகளாலும் `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞர்களோடு பொதுமக்களும் கைகோத்திருக்கிறார்கள்.

Young people disposing of plastic trash in palaru river
Young people disposing of plastic trash in palaru river

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் சரவணன் (30). சென்னையில், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் இவர், இளைஞர்கள் சிலருடன் கைகோத்து வேலூரில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறார்.

dinesh saravanan
dinesh saravanan

சமீபத்தில், வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் கணவரை இழந்து மகள்களுடன் வறுமையில் வாடிய ஏழைப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.37,000 மதிப்பில் இலவசமாகக் கழிவறை கட்டிக் கொடுத்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தனர்.

மாதந்தோறும் இரண்டு ஏழைக் குடும்பங்களைத் தேர்வுசெய்து 3 மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற மளிகைப் பொருள்களையும் வாங்கிக் கொடுக்கிறார்கள், இந்த `சூப்பர்’ ஹீரோக்கள். தவிர, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் முயற்சிசெய்கிறார்கள்.

vellore youths
vellore youths

வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளை வழங்கி மலைகளில் விதைப் பந்துகளை தூவுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று `சுற்றுச்சூழல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். இதற்குத் தேவையான நிதியை தங்களின் சம்பளத்திலிருந்தே ஓரளவு ஒதுக்குகிறார்கள்.

இந்த நிலையில், மணல் பரப்பு இல்லாமல் `பாழாய்’ போன பாலாற்றை மீட்டெடுக்க ஆற்றங்கரையோரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு 3500 பனை விதைகளை நட்டுப் பராமரித்துவருகிறார்கள், தினேஷ் சரவணன் தலைமையிலான இளைஞர்கள். அதோடு, பாலாற்றையும் தூய்மைப்படுத்திவருகிறார்கள்.

Young people disposing of plastic trash in palaru river
Young people disposing of plastic trash in palaru river

பாலாற்றில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதே நேரத்தில், மணல் கொள்ளையை தடுக்க ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளைஞர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.