விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 'சஞ்சீவி மலை' உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக விளங்கும் 'சஞ்சீவி மலைக்கு' புராதான கதைகளும் உண்டு. இந்த மலையில் பல அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள், உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதியாக விளங்கும் இம்மலை பகுதியில், யானை, மலைப்பாம்பு, கரடி, மலைமாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாகவும் இருக்கிறது.

தற்போது, தேனி-ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதிகளின் 626 ச.கி.மீ. பரப்பளவை இணைத்து புலிகள் சரணாலயப் பகுதியாக அறிவித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில், இம்மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பரவுவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனி மேகமலை பகுதியிலும், 'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியிலும் காட்டுத் தீ பரவியது. இதில் பல அரியவகை மூலிகை செடிகளும், 100 ஆண்டுகள் பழமையான மரங்களும் தீ வளையத்துக்குள் சிக்கின.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைப்பதற்கு 40க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் ராஜபாளையம் அருகே உள்ள 'சஞ்சீவி மலை' பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றிக்கொண்டது. இந்த தீ மளமளவென மற்ற இடங்களும் பரவி கரும்புகை மண்டலம் விண்ணை முட்டும் அளவுக்கு எழும்பியது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் 'சஞ்சீவி மலை' பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால், சூரியக்கதிரொளி மறைந்து இருள்சூழ்ந்து கொண்டது. இதனால் மலைப்பகுதியில் பற்றி எரியும் தீயை வனத்துறையினர் அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுவாக மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் அதிக வெயில் தாக்கத்தின் காரணமாக காட்டில் தீ விபத்து ஏற்படுவது அதிகமாகியிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் எடுத்துவரும் நடவடிக்கை பலன்கொடுக்காததால் இயற்கை வளங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வன உயிரினங்கள் தங்களின் வசிப்பிடம் இழந்து மலையடிவாரங்களை நோக்கி படையெடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மலையில் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கும், வனஉயிரினங்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதற்கும் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கேட்டுள்ளனர்.