Published:Updated:

`பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை.. வருகிறது வாட்டர் ஏ.டி.எம்' - நீலகிரியில் அதிரடி!

ஆகஸ்ட் 15 முதல் நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் மற்றும் குளிர்பானம் விற்க தடைவிதிக்கப்படவுள்ள நிலையில்,மாற்றாக 70 தண்ணீர் ஏ.டி.எம்கள் திறக்கப்படவுள்ளது.

பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஏ.டி.எம்
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஏ.டி.எம் ( கே.அருண் )

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி கழிவுகள் சூழலியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. வனப்பகுதி, ஆறு, ஓடை, கால்நடை, வன விலங்குகள் போன்றவை கடுமையாக பாதிப்படைகின்றன. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடையில் உள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவுக்கு குறைக்க முடிந்ததே தவிர முழுமையாக ஒழிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

ஊட்டி
ஊட்டி

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியாரக பொறுப்பேற்ற இன்னசென்ட் திவ்யா பிளாஸ்டிக் தடையில் தீவிரம் காட்டி பல அதிரடி நடைவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். தமிழகம் முழுவதும் 14 பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக மேலும் சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் குப்பைகளை வீசிச் செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதி மன்றம் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவைகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. முதற்கட்டமாக, இந்த தடை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள தண்ணீர் ஏ.டி.எம்
புதிதாக நிறுவப்பட்டுள்ள தண்ணீர் ஏ.டி.எம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டத்தில் தற்போது 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி உள்ள பகுதிகளில் இந்த குடிநீர் ஏடிஎம்.,கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி நகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சியில் 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியில் 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், 11 பேரூராட்சிப் பகுதிகளிலும், சுற்றுலாத் துறை சார்பில் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய இடங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தல் 70 குடிநீர் ஏடிஎம்., மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில் “வரும் 15ம் தேதி முதல் இந்த தண்ணீர் ஏ.டி.எம்கள் பயன்பாட்டுக்கு வரும். 10 தேதி முதல் பயன்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இது குறித்து ஊட்டி ஜனார்தனன் கூறுகையில் “இந்த குடிநீர் ஏடிஎம்., மையங்களில் உள்ள இயந்திரந்தில் ரூ.5 காயின் செலுத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும். இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு வெகுவாகக் குறையும் வாய்ப்பு உள்ளது என்றார்”.