Published:Updated:

"மழைநீர் சேகரிப்பில் மட்டுமே 8,00,000 லிட்டர் தண்ணீர் சேமித்தோம்!" - கிரண்ஃபோஸ் CEO ரங்கநாத்

இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் நிலைக்கு நாம் வந்துவிட்டோமே என்று வருந்தத்தான் வேண்டும்.

தண்ணீர்
தண்ணீர் ( Pixabay )

2015-ம் ஆண்டு, சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது... ஐ.டி நிறுவனங்கள், மால்கள், தொழிற்சாலைகள் பலவும் நீரில் மூழ்கின. நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் ஆறுகளின் வெள்ள வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டிருந்தவை அனைத்துமே நீரில் மூழ்கின. அந்தச் சூழலிலும்கூட, தம் ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, வெள்ளத்தில் மூழ்காமல் தப்பித்துநின்றது ஒரு நிறுவனம். தம் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அந்த வளாகத்தைச் சுற்றி நீரில் மூழ்கிய பகுதிகளில் வாழ்ந்த பாம்புகள், கீரிகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கும் அந்த நிறுவனம் அடைக்கலம் தந்தது. அது, கிரண்ஃபோஸ் (Grundfos) என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம்.

கிரண்ஃபோஸ்
கிரண்ஃபோஸ்

காலநிலை வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இச்சூழலில், ஒரு கட்டுமானம், அது அமைந்திருக்கும் நிலப்பகுதியோடு எந்த அளவுக்கு சூழலியல் ஒத்திசைவுகொண்டிருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக நிற்கிறது, அந்த நிறுவனத்தின் கட்டுமானங்கள். தாங்கள் பயன்படுத்தும் நீரை முற்றிலுமாக சுத்திகரித்து, மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் தொடங்கி, வளாகத்திற்குள் வளர்க்கப்படும் மரங்கள் முற்றிலும் நாட்டு மரங்கள்தான் என்பதை உறுதிசெய்தே நடுவது வரை அனைத்திலும் நிலவியல் தகவமைப்புக்குத் தகுந்தவாறு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், 2008-ம் ஆண்டு 31 சதவிகிதமாக இருந்த அவர்களின் கரிம வாயு வெளியேற்றத்தை 2018-ம் ஆண்டில் 10.3 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள். அதேபோல், தண்ணீர் மறுசுழற்சி மூலமாகத் தண்ணீர் செலவை 34 சதவிகிதம் குறைத்துள்ளார்கள்.

இந்தியாவிலேயே பசுமைக் கட்டடம் என்ற அங்கீகாரத்தைப் பெற்ற முதல் வளாகம் என்ற பெருமையையும் இதன்மூலம் பெற்றுள்ளார்கள். 100 சதவிகிதம் கழிவுநீர் சுத்திகரிப்பு, வளாகத்திற்குள் பெய்யும் மழைநீரை முழுக்க முழுக்க சேகரித்துப் பயன்படுத்துவது, பயன்படுத்திய நீர் போக மிச்சத்தை நிலத்தடி நீர் மீள்நிரப்புக்கு அனுப்புவது எனப் பல சூழலியல் ஒத்திசைவான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

2018-ம் ஆண்டு அவர்கள் சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள். சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் மீள்நிரப்புக்கு அனுப்பியுள்ளார்கள்.

தங்கள் வளாகத்தினுள் உற்பத்தியாகும் கழிவுநீரை கொஞ்சம்கூட வெளியேற்றாமல், அவற்றை முழுக்க முழுக்க சுத்திகரித்து, தோட்டங்களுக்கு, கழிவறைகளுக்கு என மீண்டும் பயன்படுத்துகிறார்கள். கழிவுகளை உரமாக்கி, அதைத் தாவரங்களுக்குப் பயன்படுத்துவதோடு, அந்த உரங்களை நிறுவன ஊழியர்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கும் கொண்டுசெல்கிறார்கள். வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே கூடாதென்ற உறுதியோடு செயல்படும் நிர்வாகம், தேநீர் அருந்துவதற்குக்கூட ஊழியர்களை அவரவர் கோப்பைகளோடு வரச்சொல்லி அறிவுறுத்தியுள்ளது. அதன் விளைவை அங்கு பணிபுரிந்த ஒவ்வொருவரின் மேசையிலும் இருந்த தேநீர் கோப்பைகள் நமக்கு உணர்த்தின.

இந்த நிலையை அவர்கள் அடையக் காரணமானவர்களில் ஒருவரான கிரண்ஃபோஸ் நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கான தலைமை நிர்வாக அதிகாரி ரங்கநாத்தை சந்தித்துப் பேசினோம். பொறியாளரும் நீரியல் வல்லுநருமான அவரிடம், நிகழ்கால நீரியல் பிரச்னைகள் குறித்து சில கேள்விகளைக் கேட்டோம்.

சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வந்ததைப் பெரிய சாதனையாக தற்போதைய அரசு பேசுகிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து?

அப்படிக் கொண்டு வந்ததை ஒரேயடியாகத் தவறு என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு நகரம், சுயசார்பாக இருக்க வேண்டும். எனினும் இப்போதைய நிலையில் அது சாத்தியமே இல்லை என்னும்போது, இப்படியொரு தற்காலிகப் பூர்த்தி தேவைப்படுகிறது. ஆனால், இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. இப்படிக் கொண்டுவரும் நிலைக்கு நாம் வந்துவிட்டோமே என்று வருந்தத்தான் வேண்டும். இந்த நிலை எதிர்காலத்தில் வராமலிருக்க, தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

சி.இ.ஓ ரங்கநாத்
சி.இ.ஓ ரங்கநாத்

சராசரி மக்கள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை தண்ணீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் செய்யவேண்டிய அடிப்படை விஷயமாக எதைச் சொல்வீர்கள்?

மறுசுழற்சி, மறுபயன்பாடு ஆகிய இரண்டையும் முறையாகப் பின்பற்றுவதன்மூலம், சராசரியாகச் செலவாகும் நீரின் அளவை குறைப்பதே, பாரபட்சமின்றி அனைவரும் செய்யவேண்டியது. பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும். அதற்கு, பல எளிய வழிமுறைகள் உள்ளன. அதை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே, நாம் வெளியிலிருந்து வாங்குகின்ற தண்ணீர் அளவு குறைந்துவிடும். அது, தானாகத் தண்ணீர் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்னமும்கூட மாநில அரசுகள் நிதி ஆயோக் ஆய்வறிக்கையைப் பெரிய பிரச்னையாகக் கருதாமல் இருக்கும் நிலையில், அது இந்தியாவுக்குத் தரும் எச்சரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிதி ஆயோக் சொல்வது நடக்க சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. நீர் இல்லாதவர்கள் சிரமப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, சென்னையில் வசிப்பவர்களுக்கு இப்போது அதன் அவசியம் புரிந்திருக்கும். ஆனால், மற்ற பகுதிகளிலும் இது புரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. நாம் இதுகுறித்த விழிப்புணர்வை இன்னமும் வேகமாகக் கொண்டுசெல்ல வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். நிதி ஆயோக் சொல்வதுபோல் இதே வேகத்தில் நாம் நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் அது கொடுக்கும் காலக்கெடுவுக்கும் முன்னாலேயே பெரிய பிரச்னையைச் சந்திப்போம். இனி, நிலத்தடி நீர் எடுப்பதைவிட அதை மீள்நிரப்பு செய்வதிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கிரண்ஃபோஸ்
கிரண்ஃபோஸ்

நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை நீரை எப்படிப் பார்க்கின்றன என்று நினைக்கிறீர்கள்?

நீர் அளவின்றிக் கிடைப்பதைப் போலவே அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், அது மிகக் குறைவாகவே உள்ளது. உலகிலிருக்கும் நீர் மொத்தத்தையும் ஒரே வாளியில் நிரப்புவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த வாளியில் நாம் குடிப்பதற்குக் கிடைப்பது ஒரு சொட்டு மட்டுமே. அதைப் புரிந்துகொள்வதில்லை. இந்த மனநிலை மாறினாலே போதும். அடுத்ததாகக் கழிவுநீர். அவற்றை அப்படியே நீர்நிலைகளில் கலந்துவிடுவது. நீர்நிலை ஒன்றும் கழிவுநீர் வடிகால் இல்லை. கழிவுகளைத் திறந்துவிடுவதற்கான வடிகால் பாதைதான் நீர்நிலைகள் என்ற பார்வை மாற வேண்டும்.

தண்ணீர் குறித்த கிரண்ஃபோஸ் நிறுவனத்தின் பார்வை என்ன?

கிரண்ஃபோஸ் நிறுவனம், தண்ணீர் சேமிப்பிலும் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. அதன்மூலம், விநியோகத்தின் அளவை குறைத்துள்ளோம். 100 சதவிகித நீரையும் சுத்திகரிப்பு செய்ய முயல்வதன் மூலம், நாங்கள் சுமார் 70 சதவிகிதம் நீரை மீண்டும் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள கழிவுகளை இயற்கை உரமாக்கி விற்கிறோம். அதோடு, நிறுவன ஊழியர்களும் அவர்களின் மாடித்தோட்டங்களுக்காகக் கொண்டுசெல்கிறார்கள். மழைநீர் சேமிப்பில், முறையாக ஈடுபடுவதன்மூலம், கடந்த ஆண்டு 8,00,000 லிட்டர் சேமித்துள்ளோம். அதனால் இந்த ஆண்டு, நகரம் முழுவதும் ஏற்பட்ட நீர் பற்றாக்குறை எங்களைப் பெரிதும் பாதிக்கவில்லை.

உற்பத்தியிலும்கூட பாதிக்கு மேல் சுத்திகரிப்பு செய்த நீரையே பயன்படுத்துவதால், எங்களுக்கு வெளியிலிருந்து கிடைக்கவேண்டிய நீர்த் தேவை மிகவும் குறைவுதான். அனைத்து தொழிற்சாலைகளும் இதேபோல் செய்தால், தண்ணீர் பிரச்னையிலிருந்து ஓரளவுக்கு நம்மால் தப்பிக்க முடியும்.

குடிநீர்
குடிநீர்

சென்னை பெருவெள்ளத்தின்போது கிரண்ஃபோஸ் வளாகம் பெரிய அளவில் பாதிப்புகளைச் சந்திக்கவில்லை என்று கேள்விப்பட்டோமே...

ஆம், அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. இந்தப் பகுதியில் நாங்கள் தேர்ந்தெடுத்திருந்த இந்த நிலம், ஓரளவுக்கு மேடானது. அதனால், இங்கு நீர் உட்புகவில்லை. ஊழியர்கள் பலரின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவர்கள் தம் குடும்பத்தோடு இங்குதான் தங்கியிருந்தார்கள்.

அருகிலிருந்த நிலங்களில் வாழ்ந்துகொண்டிருந்த கீரிகள், பாம்புகள் போன்ற பல உயிரினங்கள், எங்கள் வளாகம் பாதுகாப்பானது என்றெண்ணி உள்ளே வந்துவிட்டன. நாங்கள் அவற்றுக்கும் ஆதரவு கொடுத்தோம். தரைத்தளத்தை யாருமே பயன்படுத்தவில்லை. அதை மற்ற உயிரினங்களுக்காக விட்டுவிட்டு, அடுத்த தளத்திலிருந்தே நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். அவையும் மனிதர்களுக்கு எந்தவித இடையூறும் தராமல், வெள்ளம் வடியும்வரை இருந்தன. இறுதியில், அவற்றின் வாழிடங்களில் வெள்ளநீர் வடிந்தவுடன் திரும்பிச் சென்றுவிட்டன. இந்த நிலம் நமக்கு மட்டும் சொந்தமில்லையே.