Published:Updated:

தீபாவளி விற்பனைக்கு பசுமைப் பட்டாசுகள் தயார்! மக்களைக் கவருமா? 

இனிவரும் காலங்களில் நாம் மேற்கொள்ளும் செயல்கள், மாசுபாட்டை அதிகப்படுத்தாத வகையில் இருந்தாக வேண்டும். அதேநேரம், மக்களின் பண்டிகைக் கொண்டாட்டங்கள் பாதித்து விடாமலும் இருக்கவும் வேண்டும். அதற்கு வழிசெய்யும் வகையில் கடந்த ஆண்டு அறிமுகமாயின இந்தப் பசுமைப் பட்டாசுகள்.

பட்டாசு
பட்டாசு

குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் ஆசையாய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாள்தான் தீபாவளித் திருநாள். ஆண்டு முழுக்கக் காத்திருந்த குழந்தைகளுக்குத் தீபாவளிக்கு முந்தைய நாளின் இரவைக் கழிப்பது எப்போதுமே பெரும்பாடுதான். வாங்கிய பட்டாசுகளைப் பொத்திப்பொத்திப் பாதுகாத்து, அவற்றை ஒவ்வொரு நாளும் வெயிலில் காயவைத்துப் பத்திரப்படுத்திய நம் குழந்தைப்பருவ நினைவுகள் பசுமையானவைதான்.

நினைவுகளில் பசுமையாய்ப் பதிந்திருக்கும் பட்டாசுகள் இன்றுள்ள மாசுபாட்டுப் பிரச்னைகளுக்கு நடுவே எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போலாகிவிட்டன.

பட்டாசு
பட்டாசு

அத்தகைய தீபாவளியை நம் சந்ததிகள் கொண்டாட முடியாத வகையில் நாம் சூழலை அழித்துவிட்ட குற்றஉணர்வு ரணமாகப் பதிந்துகிடப்பது நிதர்சனம். தீபாவளியைச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத விதமாகக் கொண்டாட வேண்டுமென்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 8 முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதோடு, கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் காலங்களில் இரவு 11.55 முதல் 12.30 வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

மக்களும் குழந்தைகளும் விரும்பி வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்ததும், பசுமைப் பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியதற்கும், நாட்டில் அதிகரித்துவரும் காற்று மாசுதான் காரணம். இனிவரும் காலங்களில் நாம் மேற்கொள்ளும் செயல்கள், மாசுபாட்டை அதிகப்படுத்தாத வகையில் இருந்தாக வேண்டும். அதேநேரம், மக்களின் பண்டிகைக் கொண்டாட்டங்கள் பாதித்து விடாமலும் இருக்கவும் வேண்டும். அதற்கு வழிசெய்யும் வகையில் கடந்த ஆண்டு அறிமுகமாயின இந்தப் பசுமைப் பட்டாசுகள். கடந்த ஆண்டு போதுமான அளவுக்குச் சந்தைக்கு வராத காரணத்தால், அதிகம் மாசடைந்த நகரங்களுக்கு மட்டும் இவை விற்பனைக்கு அனுப்பப்பட்டன.

பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றம், கந்தக ஆக்ஸைடு போன்ற ஆபத்தான வாயுக்களை வெளியேற்றும் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் பட்டாசுகளைக் கடந்த ஆண்டு தடைசெய்தது.

அவை தவிர, வாயு வெளியேற்றுவதில் மிகக் குறைவான திறனுடைய பட்டாசுகளையும் அவற்றோடு பசுமைப் பட்டாசுகளையும் வெடிக்கலாம். அதைத் தவிர, மற்றவற்றை வெடிக்கக் கூடாது. அத்தகைய தயாரிப்புகள் மட்டுமே சந்தைகளுக்குச் செல்ல வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு.

` பட்டாசு வெடிக்கக் கூடாது; ட்ரோன் பறக்கக் கூடாது!' -உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி

அதென்ன பசுமைப் பட்டாசுகள்?

தற்போது புழக்கத்திலிருக்கும் பட்டாசுகள் அளவுக்கு, இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காது. இவற்றில் வேதிமக் கலவையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் இதில் வாயு உமிழ்வும் குறைவாகவே இருக்கும். அதன் விளைவாகக் காற்று மாசுபாட்டு அளவும் குறைவாகவே ஏற்படும். மாசுபாடே ஏற்படாத வகையில் வெடிக்காது என்றாலும் முடிந்தவரை மாசடையும் அளவைக் குறைக்கலாம். இதைத் தயாரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூலப்பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீபாவளி
தீபாவளி
Pixabay

இந்த யோசனை முதலில் மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Cousil of Scientific Institute for Research- CSIR) விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களோடு மத்திய மின் வேதிம ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேதிமத் தொழில்நுட்பக் கழகம், மத்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இணைந்து பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவதற்கு முயன்றார்கள். அவர்களின் திட்டப்படி ஆபத்தான வேதிமப் பொருள்களுக்குப் பதிலாகக் குறைந்தபட்ச பாதிப்புகளைக் கொண்ட மூலப்பொருள்களை மாற்றிவிட்டால் பட்டாசுகளால் ஏற்படும் சூழலியல் கேடுகளும் குறையும். அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது மொத்தம் நான்கு வகைச் சூத்திரங்களைக் கண்டறிந்தனர். இப்போது வெளியாகும் மாசுபாட்டில் அதிகபட்சம் 40 சதவிகிதம் குறைவான நுண்துகள்களை அவை வெளியேற்றின. அதே 40 சதவிகிதம் நுண்துகள் வெளியேற்றத்தைக் குறைத்து இரவுநேர கொண்டாட்டத்துக்கான புஸ்வானங்களையும் உருவாக்கினார்கள். பேரியம் நைட்ரேட் (Barium Nitrate) என்ற நச்சுப்பொருளைத் தவிர்த்துப் புஸ்வானங்கள் தயாரிக்கப்பட்டன.

குழந்தைகளால் வெடிக்கப்படும் ஊசி வெடிகளின் (Bijli) தரமும் கடந்த ஆண்டு சோதனையிலிருந்தது. அதிலும் பசுமைப் பட்டாசு வகைகள் விரைவில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அவர்கள் குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சாம்பல்களை வெளியேற்றும் ஈரமுறிஞ்சி வேதிமங்களைத் (Desicants) தவிர்த்துள்ளார்கள்.

பசுமைப் பட்டாசுகள்
பசுமைப் பட்டாசுகள்

வெடிக்கும்போது சத்தம் வரச் செய்யும் கந்தக அமிலத்தைத் தவிர்த்தாலும்கூட, அதேபோன்ற சத்தம் வரச்செய்யும் திறனோடு இருப்பவை இந்தப் பசுமைப் பட்டாசுகள். அதனால் வெடித்தபின் கந்தக அமிலம் வெளியாகி வளிமண்டலக் காற்றின் தரத்தைப் பாதிக்கும் என்ற பிரச்னைகள் இவற்றால் இருக்காது. அதேசமயம், வெடித்தால் புகை வெளியேறாமல் நீரை வெளியேற்றும் பட்டாசு வகைகளும், குறைவான அலுமினியத் துகள்களை வெளியேற்றும் வெடிகளும் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

தரக்குறைவான மூலப்பொருள்களைப் பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்துவது ஆபத்தானது. அதை நெறிமுறைப்படுத்துவதே இந்த ஆய்வாளர்களின் நோக்கம். அதற்காகத் தற்போது பசுமைப் பட்டாசுகளின் நச்சுப்புகை வெளியேற்றத்தையும், ஒலி மாசுபாட்டையும் சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

வெடிக்கும்போது அந்தப் பட்டாசுகள் நீராவியை வெளியேற்றுவதால் அதிலிருந்து வெளியாகும் நுண்துகள்களைக் காற்றில் கலக்கவிடாமல் மண்ணோடு அழுத்திவிடும். இந்த வகைப் பட்டாசுகள் தற்போது பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பில் (Petroleum and explosives safety organisation) சோதனையிலிருந்தபோது, இவற்றின் அடிப்படைச் சோதனை முடிவுகள் தமிழகத்தின் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலருக்கு செயல் விளக்கமளிக்கப்பட்டது.

சிவகாசி
சிவகாசி

இனி, பசுமைப் பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டுமென்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, சிவகாசி பட்டாசு ஆலைகளை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதைத் தொடர்ந்து சுமார் 348 பட்டாசு தயாரிக்கும் ஆலைகளுக்குப் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான உரிமத்தை CSIR-NEERI இந்த ஆண்டு வழங்கியுள்ளது. அவை மட்டுமே இந்த ஆண்டுக்கான பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும். இந்த தீபாவளிக்கு நீங்கள் வெடிக்கப்போகும் அனைத்துமே பசுமைப் பட்டாசுகளா என்றால் இல்லை. சுமார் 400 பட்டாசு வகைகள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றில் சுமார் 25 சதவிகிதப் பட்டாசுகளே தற்போது பசுமைப் பட்டாசுகளாக மாற்றமடைந்துள்ளன. விற்பனையாகும் மற்றவை அனைத்துமே வழக்கமான பட்டாசுகள்தான்.

நாட்டின் 90 சதவிகிதப் பட்டாசு உற்பத்தி சிவகாசியிலிருந்துதான் வருகின்றது. சிவகாசியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு பசுமைப் பட்டாசு தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டிருந்தாலும், அங்கு மொத்தம் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. பசுமைப் பட்டாசு தயாரிக்கும் அனைத்து ஆலைத் தொழிலாளர்களுக்கும் அதுகுறித்துச் செயல் விளக்கமளித்து மாறிவரும் சூழலுக்கு அரசு விரைவில் அவர்களைத் தயார் செய்தாக வேண்டும். அப்போதுதான் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் இனிவரும் தீபாவளிகளும் அமையும்.

இனி 'பசுமைப் பட்டாசு'களை வாங்கலாம்...