Published:Updated:

தமிழக அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறதா? - நியூட்ரினோ திட்டத்தின் இன்றைய நிலை

நியூட்ரினோ திட்ட பகுதி
News
நியூட்ரினோ திட்ட பகுதி

பல வழக்குகளையும், சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறது, நியூட்ரினோ திட்டம். திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை. 

"நியூட்ரினோ திட்டம்"... பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை. அந்த திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டு, 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் எழுந்த சர்ச்சைகளாலும், சூழலியல் சிக்கல்களாலும் உயர் நீதிமன்றம் திட்டத்துக்கு தடை விதித்தது. அப்போது முதல் இப்போது வரைக்கும் நியூட்ரினோ திட்டம் குறித்த வழக்கோ, அறிவிப்போ எழும்போதெல்லாம், சர்ச்சைகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 28-ம் தேதி, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கும் பொட்டிபுரம் கிராமத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் ஊர் மக்கள் சார்பாக மனு கொடுத்தனர்.

நியூட்ரினோ மாதிரி வரைபடம்
நியூட்ரினோ மாதிரி வரைபடம்

இந்நிலையில் நியூட்ரினோவிற்கு ஆதரவாகவும் சில குரல்கள் இணையதளத்தில் எழ ஆரம்பித்தன. அவற்றில் பெரும்பாலானவை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது, அதனால் மற்ற மாநிலங்களுக்குப் போகப்போகின்றன, இது மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் திட்டம் என்பதாகவே இருந்தன. உண்மையாகவே மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளதா... என்ன நிலையில் அந்தத் திட்டம் இருக்கிறது என்பது குறித்து அலசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நியூட்ரினோ என்பது என்ன?

உலகின் மிகச் சிறிய துகள் தற்போதைக்கு நியூட்ரினோதான் . நியூட்ரினோவை வைத்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. கர்நாடகத்தின் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1962-ம் ஆண்டிலேயே நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், அதன் பின்னர் அந்த ஆராய்ச்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. பின்னர், மீண்டும் 1990-களில் நியூட்ரினோ மீண்டும் முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கிறது.

நியூட்ரினோ திட்ட பகுதி
நியூட்ரினோ திட்ட பகுதி

மற்ற மாநிலங்களுக்கு பெருமையா?

இந்தியாவில் நிச்சயம் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தது, ஆராய்ச்சியாளர் குழு. அதற்கான இடத்தை இமயமலை தொடங்கி, குஜராத், கோவா எனப் பல இடங்கள் பரிசீலனையில் இருந்தன. இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காரா பகுதி தேர்ந்தெடுக்கப்படுகிறது. அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது. இறுதியாகத் தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலை தேர்வு செய்யப்படுகிறது. எங்கள் திட்டத்துக்கு தேவையான கார்னோகைனட் பாறைகள் இங்கு இருக்கிறது என்று காரணம் சொன்னது விஞ்ஞானிகள் குழு. அங்குதான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான ஐ.என்.ஓ (Indian based Neutrino Observatory) அமைக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. பின்னர் அது பல்வேறு தடைகளால் நிறுத்தப்பட்டன. இங்குதான் 'இத்திட்டம் மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் திட்டம் என்றால், மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கு வேண்டும் என ஏன் உரிமை கோரவில்லை' எனும் பலத்த சந்தேகம் எழுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்ச்சைகள் என்னென்ன?

ஐ.என்.ஓ அமைக்க 2011-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்தது. `சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று, முதன்முதலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார் வைகோ. இந்தத் திட்டம் குறித்த ஆவணங்களைச் சூழலியலாளர்கள் ஆராயத் தொடங்கியபோது, முதல் கட்டத்திலேயே அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் திட்டத்தைப் பிரிவு 1 (E) கீழ் விண்ணப்பித்திருந்தது, ஐ.என்.ஓ. அதாவது, அணு மற்றும் அணுக்கழிவு மேலாண்மைப் பிரிவு. இந்தியா முழுவதிலுமிருந்து அணுக்கழிவுகளை இங்குக் கொண்டுவந்து கொட்டவிருக்கிறார்கள் என்று சந்தேகங்களை எழுப்பினர். ஆனால், அது எழுத்தர் பிழை (Clerical Error) என்று சாதாரணமாகக் கூறிக் கடந்தது, ஐ.என்.ஓ. 'மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும், முக்கியமான நாடுகளில் ஒன்றாகும்' எனக் காரணம் சொல்லப்பட்ட இத்திட்டம், எழுத்தர் பிழை எனச் சாதாரணமாக சொல்லப்பட்ட பின்னர்தான், சந்தேகம் வலுவாக எழ ஆரம்பித்தது.

நியூட்ரினோ திட்ட பகுதி
நியூட்ரினோ திட்ட பகுதி

நியூட்ரினோ வழக்குகளும், இன்றைய நிலையும்!

பிப்ரவரி 14, 2015 அன்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பாக சென்னையில் இருக்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டலப் பிரிவில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், '2010-ல் ஐ.என்.ஓ, ஒரு `சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு' அறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை கோவையைச் சேர்ந்த ``சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்" மேற்கொண்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையைத் தயாரிப்பதற்கான மத்திய அரசின் அங்கீகாரம் சலீம் அலி ஆராய்ச்சி மையத்துக்குக் கிடையாது. ``நியூட்ரினோ ஆய்வுக்காகத் தோண்டப்படும் சுரங்கத்தினால், அதற்கு வைக்கப்படும் வெடிகளால், வெடிகள் உடைத்து நொறுக்கும் பாறைகளால்... (Blasting Impact) என்ன மாதிரியான சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படும் என்பதை ஆராய வேண்டும். ஆனால், எங்களால் அதைச் செய்ய இயலாது. நாங்கள் அதைச் செய்யவில்லை'' என்று சலீம் அலியின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், 2.5 கிமீ சுரங்கம் தோண்ட, பல்லாயிரம் கிலோ வெடி மருந்துகள் கொண்டு, 6 லட்சம் டன் பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப்படும்; இந்தத் திட்டத்தினால் ஏற்படும் ``Blasting Impact" குறித்த எந்த ஆய்வுகளுமே இதுநாள் வரை மேற்கொள்ளப்படவில்லை.

சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற, மொத்தம் இருக்கும் 12 பிரிவுகளையும் செக்‌ஷன் A மற்றும் செக்‌ஷன் B என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள். செக்‌ஷன் B என்பது சாதாரணமான கட்டடங்களுக்குரிய பிரிவு. செக்‌ஷன் A என்பது சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம் அல்லது கவனத்துடன் பரிசீலிக்க வேண்டிய கட்டடங்களுக்கான பிரிவு. இதில், நியூட்ரினோ திட்டத்தை செக்‌ஷன் B பிரிவில்தான் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. இந்தச் சட்டத்தின் பொது விதி என்பது..."சில திட்டங்கள் செக்‌ஷன் B பிரிவில் வந்தாலும் கூட, திட்டத்தின் இடம் தேசியப் பூங்காக்களுக்கு அருகில் அமைந்திருந்தால் அதை செக்‌ஷன் A வாக கருத வேண்டும்" என்று இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வகத்தைப் பொறுத்தவரை, அது கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவிலிருந்து 4.5 கிமீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது. அதனால் இத்திட்டத்தில் பல குளறுபடிகள் இருக்கின்றன' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ``இந்தத் திட்டத்தைக் கண்டிப்பாக செக்‌ஷன் A பிரிவில்தான் சேர்க்க வேண்டும். எனவே திட்டத்தை மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்யுங்கள்" என்று சொல்லி 20-03-2017 அன்று திட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது, தேசிய பசுமை தீர்ப்பாயம்.

இதற்குப் பிறகு, ஐ.என்.ஓ மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்து (இந்த முறையும் செக்‌ஷன் B பிரிவில்தான் விண்ணப்பித்தது) பல சட்ட சிக்கல்களைக் கடந்து...இறுதியாக, மத்திய நிபுணர் குழு (Expert Appraisal Committee) அளித்த பரிந்துரையின் பேரில்... "நியூட்ரினோ திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகக் கருதி, உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும்" என்று 26-03-2018 அன்று உத்தரவிட்டது மத்திய அரசு.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், சிறப்புத் திட்டம் எனும் பெயரில் கொடுக்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் வழக்குத் தொடுத்தனர். அதில், `நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பில், 'மத்தியச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்குத் தடை இல்லை. தேனி நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க இடைக்காலத் தடை. வன உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான், இந்தத் திட்டத்தைத் தொடர முடியும்" என்று குறிப்பிட்டிருக்கிறது. இதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பேசும்போது,"உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் கொஞ்சம் முக்கியமானது. தமிழக அரசின் தரப்பில் 'தொழில்நுட்ப ரீதியிலான ஆராய்ச்சி செய்யாமல் அனுமதி கொடுக்க மாட்டோம்' எனச் சொல்லப்பட்டது. மாநில அரசும் இன்னும் முழுமையாக நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை." என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 'மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்காமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ தடை ஆணை வாங்கியிருக்கிறார்.

இத்தனை வழக்குகளையும், பல சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறது, நியூட்ரினோ திட்டம். நாட்டுக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருந்தால், எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை.

இப்போது தேசிய வனவிலங்கு வாரியம், தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்காகவும், மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறது, நியூட்ரினோ திட்டம்.