Election bannerElection banner
Published:Updated:

கார்பன் வெளியேற்றமும், புவி வெப்பமயமாதலும் - என்ன தொடர்பு... நாம் என்ன செய்யவேண்டும்?

புவி வெப்பமயமாதல் | கார்பன் வெளியேற்றம்
புவி வெப்பமயமாதல் | கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை நாம் குறைக்காமல் இதே நிலையில் புவி தொடர்ந்து வெப்பமடைந்தால், அடுத்த நூறு ஆண்டுகளில் 26-ல் இருந்து 82 செ.மீ வரை கடல் மட்டம் உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாகவே, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பல நாடுகளும், தனியார் நிறுவனங்களும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் பொருட்டு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றன. முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் அடுத்த சில ஆண்டுகளில் முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களையே தயாரிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றன. எல்லா பக்கங்களிலிருந்தும் குரல்கள் எழுகின்றன. நாமும் கார்பன் வெளியேற்றம், புவி வெப்ப மயமாதல் என்ற வார்த்தைகளை தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், கார்பன் வெளியேறுவதால் புவி ஏன் வெப்பமாகிறது, அதனால் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு என்ன பிரச்னை என்பன குறித்த சந்தேகங்களும், குழப்பங்களும் உங்களுக்கு எழுந்திருக்கிறதா? கார்பன் வெளியேற்றத்துக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் என்ன தொடர்பு என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

Global Warming
Global Warming
உலகத்தின் அழிவை நாம் நெருங்கிவிட்டோமா... அது குறித்த பயம் நமக்கு ஏன் இல்லை?!

கரிம வாயுக்களும், புவி வெப்பமாதலும்!

சூரியனிலிருந்து வரும் வெப்பம் புவியை அடைந்தவுடன், அது பெருமளவு பிரதிபலிக்கப்பட்டு மீண்டும் வானுக்கே செல்லும். அப்படிப் பிரதிபலிக்கப்படும் வெப்பம் பூமியின் வளிமண்டலத்தை விட்டு வெளியேற விடாமல் தடுக்கும் ஆற்றல் கரிம வாயுக்களுக்கு, அதாவது கார்பன் வாயுக்களுக்கு உண்டு. இவ்வாறு வெப்பத்தைத் தடுக்கும் வாயுக்களுக்கு பசுங்குடில் வாயுக்கள் என்று பெயர் (Greenhouse gases). கார்பன் டை ஆக்ஸைடு (Carbon di-oxide), மீத்தேன் (Methane), நைட்ரஸ் ஆக்ஸைடு (Nitrous Oxide), ஓசோன் (Ozone) மற்றும் நீராவி (Water vapour) ஆகியவை பசுங்குடில் வாயுக்கள். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடுதான் கார்பன் வாயுக்களில் அதிகளவில் வளிமண்டலத்தில் நிறைந்திருக்கிறது. நிலக்கரி, எண்ணெய் போன்ற புதை படிவ எரிபொருட்களை நாம் அதிகளவில் உபயோகப்படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு அதிகளவில் வெளியிடப்படுகிறது.

Climate Change
Climate Change
Pixabay

இந்தப் பசுங்குடில் வாயுக்களால் தான் பூமி உயிரினங்கள் வாழத் தகுந்த இடமாக இருக்கிறது. பசுங்குடில் வாயுக்கள் இல்லையெனில் சூரியனில் இருந்துவரும் வெப்பம் பிரதிபலித்தலின் காரணமாக, பூமி பனி படர்ந்த பிரதேசமாக மாறியிருக்கும். ஆனால், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல், பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிக அளவில் சேர்ந்ததன் காரணமாக பூமி அதிகமாகச் சூடாகத் தொடங்கியது. இதனால்தான் புவி வெப்பமாதலுக்குக் கார்பன் வெளியேற்றம் காரணமாக இருக்கிறது.

புவி வெப்ப மயமாதலினால் ஏற்படும் விளைவுகள்!

புவி வெப்பமாதலால், புவியின் சராசரி வெப்பநிலை இப்போது 1.6 டிகிரி செல்ஸியஸ் அளவு அதிகரித்திருக்கிறது. இதனால் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. இதன் மூலம் ஆண்டிற்கு 3.2 மிமீ அளவு கடல் மட்டம் உயர்கிறது. சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை வளிமண்டலத்திற்குப் பிரதிபலிப்பதில் பனிக்கட்டிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பனிக்கட்டிகள் உருகுவதால், வெப்பம் நிலத்திலேயே உள்வாங்கப்பட்டு, பூமி இன்னும் வெப்பமாகும். புவி வெப்பமடைவதால் பல விலங்கினங்கள் பாதிக்கப்படும். எல்லா விலங்கினங்களாலும் எல்லா சூழ்நிலைகளிலும் வாழ முடியாது. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்கினங்கள் இந்தப் புதிய மாற்றத்தைத் தாங்க முடியாமல் அழியும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.

carbon emission
carbon emission
phys.org

தற்போதே பல விலங்கினங்கள் வெப்பம் குறைவான இடங்களைத் தேடித் புலம்பெயரத் தொடங்கிவிட்டன. புவி வெப்பமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால், பூமியின் சில இடங்களில் அளவுக்கு அதிகமான கடுமையான மழைப்பொழிவு ஏற்படும். சில இடங்களில் துளியளவும் மழையின்றி கடுமையான வறட்சி நிலவும். இதனால், பயிர்கள் செழிக்காமல் உணவுப் பஞ்சம் ஏற்படும். இவற்றிலும், அதிகமாகப் பாதிப்புக்குள்ளாக இருப்பது ஏதும் அறியாத விலங்கினங்கள் தான்.

இதே நிலையில் புவி தொடர்ந்து வெப்பமடைந்தால், அடுத்த நூறு ஆண்டுகளில் 26-ல் இருந்து 82 செ.மீ வரை கடல் மட்டம் உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புயல்களும், சூறாவளிகளும் வலுப்பெறும். தண்ணீர் பஞ்சம் தான் நம் எதிர்காலமாக இருக்கும். உயரும் வெப்பநிலைக்குத் தகவமைத்துக் கொள்ள முடியாத விலங்குகள் அழிவின் பாதைக்குச் செல்லும்.

பாரிஸ் ஒப்பந்தம்!

புவி வெப்பமாதலைத் தடுக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் 196 நாடுகள் இணைந்து 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி அடுத்த அரை நூற்றாண்டுக்குள் புவி வெப்பமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்கும்படி கட்டுப்படுத்த வேண்டும். கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தின்படி 2020-க்குள், கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் மற்ற நாடுகள் சமர்ப்பிக்க வேண்டும்.

co2 emission per capita
co2 emission per capita
wikipedia

75 சதவிகித கார்பன் வெளியேற்றத்திற்கு, குறிப்பிட்ட 20 நாடுகள் தான் காரணமாக இருக்கின்றன. அவற்றில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. கார்பன் வெளியேற்றம் அதிகம் இல்லாத சூரிய சக்தி, மின்சாரம் ஆகியவற்றை மக்கள் அதிகம் உபயோகப்படுத்த அனைத்து நாடுகளும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் வெப்பமாதல் காரணிக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கக்கூடாது எனத் திட்டமிடப்பட்டன.

என்னதான் தீர்வு?

வெப்பமாதலைத் தடுப்பதற்கான தீர்வைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும், ஏற்கெனவே நாம் வெளியிட்ட அதிகப்படியான பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனியாக வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம், வீட்டில் உபயோகிக்கும் ஏசி, குளிர்சாதனங்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

Air Pollution
Air Pollution

பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்டதுதான், ஆனால் முழுமையான நடவடிக்கைகள் அனைத்து நாடுகளிலும் எடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதில் இல்லை. காடுகளை உருவாக்க வேண்டும் என நாம் பேசிக் கொண்டு இருக்கும் வேளையில், பல லட்சம் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. தனி வாகனங்களின் விற்பனை தினமும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. புவி வெப்பமாதல் பற்றி நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டியது தான். இங்கே கேள்வி, 'என்னதான் தீர்வு?' என்பது அல்ல, 'எப்போது நாம் செயல்படப்போகிறோம்?' என்பதுதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு