Published:Updated:

``சூழலியல் பொருளாதாரம் இந்தியா, சீனாவுக்குக் கைகொடுக்குமா?" - பொருளாதார வல்லுனர் டாக்டர்.கவிக்குமார்

Representational Image
Representational Image

COVID-19 பரவலுக்குக் காரணமே சூழலியலை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள் உலக நாடுகளிடம் இல்லாததுதான்.

கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்திருக்கிறது. சர்வதேசப் பங்குச் சந்தை நிலவரம் அதலபாதாளத்தில் சரிந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் இரண்டாவது வார நிலவரப்படி அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.6 மில்லியன் என அதிகரித்திருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது சர்வதேசப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு எதிராகப் போராடப் பிரதமர் மக்களிடமே நிதி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதிலிருந்து உலகம் எப்படி மீளப்போகிறது? நோய்த்தொற்றிலிருந்து ஓரளவு மீண்டுவரும் சீனாவின் பொருளாதாரத்தைச் சரிசெய்வது குறித்த உலக பொருளாதரக் கூட்டமைப்பின் வட்டமேசையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்ட உலகின் முக்கிய பிசினஸ்மேன்கள் சூழலியலை மையமாகக்கொண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதில் சீனாவை முன்னோடி ஆக்குவது என்று முடிவு செய்துள்ளனர். கோவிட்-19 பரவலுக்குக் காரணமே சூழலியலை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள் உலக நாடுகளிடம் இல்லாததுதான் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. இதுகுறித்துச் சூழலியல் பொருளாதார வல்லுநர் டாக்டர் கவிக்குமாரிடம் உரையாடினேன்.

டாக்டர் கவிக்குமார்
டாக்டர் கவிக்குமார்

சூழலியலில் கவனம் செலுத்தாததுதான் கொரோனாவுக்குக் காரணமா?

சூழலியலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பொருளாதார முன்னேற்றத்தைதான் நாம் இந்த நூற்றாண்டிலும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றம் சூற்றுச்சூழலில் காலநிலைமாற்றம் உள்ளிட்ட பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்தக் கிருமித் தொற்றும் அதன் காரணமாகவே ஏற்பட்டிருக்கச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதேநேரம் இனி எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் ஆபத்துகளுக்கான முன்னோட்டம்தான் இந்தக் கொரோனா. இந்த முன்னோட்டம் எதிர்காலத்துக்கான பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்
AP

சமூக, பொருளாதார ரீதியாக உலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமா?

இத்தனை நாள்களாக நாம் செய்துவந்த பலவற்றையும் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. அதில் உலகமயமாக்கலும் அடங்கும். உலகமயமாக்கல்தான் இவை அத்தனைக்கும் ஆதாரப் பிரச்னை. ஆனால், உலகமயமாக்கலையே ஒழித்துக்கட்டுவது என்பது தற்போது சாத்தியமற்றது. இனிவரும் காலங்களில் வெளிப்படைத்தன்மையுடன்கூடிய உலகமயமாக்கல் கொள்கையைச் சிந்திப்பதே இதற்குத் தீர்வாக இருக்கும். சீனா தற்போதுவரை தங்களின் விலங்குச் சந்தையிலிருந்துதான் உலகநாடுகளுக்கு நோய் பரவியது என ஒப்புக்கொள்ள மறுக்கிறது, அதே சமயம் அமெரிக்காவின் மீதும் யூகங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. சர்வதேச நடுகளின் இந்தப் பனிப்போரில் பெரிதளவும் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கான நியாயம் என்ன? வெளிப்படைத்தன்மை இருந்திருந்தால் இவற்றில் பலவற்றைத் தவிர்த்திருக்க முடியும். இதனால் தற்போது சில ஐரோப்பிய நாடுகள் தங்களது சர்வதேசத் தொடர்புகளைக் குறிப்பாக, சீனாவுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கின்றன. விநியோகச் சங்கிலியை (Supply chain) துண்டித்துக்கொண்டு உள்ளூர்மயமாக்கல் கொள்கையைப் பின்பற்றப்போவதாக அறிவித்திருக்கிறார்கள், இது சிக்கலை ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு திசைதிருப்புமே தவிர சரியும் பொருளாதாரத்துக்குத் தீர்வாக இருக்காது. மேலும் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்ப்பும் கடுமையாக இருக்கும்.

கொரோனா பற்றி அச்சப்படுகிறோம். தலைநகர் டெல்லியை ஒவ்வொரு வருடமும் சூழ்ந்துகொள்ளும் காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களைக் கொன்றுகொண்டிருக்கிறதே, அதற்கு என்னத் தீர்வு முன்வைக்கப்போகிறோம்.
டாக்டர். கவிக்குமார்

சீனா சூழலியலை முன்னிறுத்திய பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்க வேண்டும் என உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. அது குறித்து?

சூழலியலை முன்னிறுத்தியப் பொருளாதாரக் கொள்கைகள் (Environmentally sustainable economic goals) என்பது ஒரே இரவில் உருவாகிவிடவில்லை. ஓர் இரவில் நிகழ்த்திவிடக்கூடியதும் அல்ல. நீண்ட நாள்களாக வலியுறுத்தப்படும் ஒன்றுதான். இந்தப் பேரிடர் நம்மை இப்படியான பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிச் சிந்திக்க வைப்பது வரவேற்கத்தக்கதுதான். 2013-ல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பேராசிரியர் தாஸ்குப்தா தலைமையிலான குழு தேசியத்தின் பசுமைக் கணக்கீட்டுக் கொள்கையை முன்வைத்தது. அதன் தற்போதைய நிலை என்னவென்றே தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்படும் பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதார முன்னேற்றக் குறியீடுகளில் சூழலியல் சார்ந்த குறியீடுகள் இருப்பதே இல்லை. ஆனால், வளர்ச்சி விகிதத்தை மட்டும் தவறாமல் குறிப்பிட்டு வருகிறார்கள். நம்முடைய அடித்தளம் (Natural assets) செல்லரித்துக் கிடக்கும்போது நம் பொருளாதாரம் (Man-made assets) வளர்ந்திருக்கிறது என நமக்கு நாமே சமாதானம் செய்துகொள்வது ஆபத்தானது. கொரோனா பற்றி அச்சப்படுகிறோம். தலைநகர் டெல்லியை ஒவ்வொரு வருடமும் சூழ்ந்துகொள்ளும் காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களைக் கொன்றுகொண்டிருக்கிறதே, அதற்கு என்னத் தீர்வு முன்வைக்கப்போகிறோம்?

சூழலியலை உள்ளடக்கிய பொருளாதாரம் என்றால் என்ன என்பதை எளிமையாக விளக்க முடியுமா?

அமெரிக்காவில் பெருகிவரும் தொழில்துறைக்காக காடுகள் இன்றளவும் அழிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. காடுகளை அழிப்பதால் அங்கே வசிக்கும் ஓநாய்கள், நரிகள் உள்ளிட்ட விலங்குகளும் அழியத் தொடங்கியது. அதே நேரம் அமெரிக்க விளைநிலங்களில் எலிகளின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு எலிகளின் இனப்பெருக்கம் அதிகரித்தது. எலிகளால் ஏற்படும் நோய்த்தொற்று இன்றளவும் அமெரிக்காவில் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. உண்மையில், எலிகளை அழிக்கும் ஓநாய்களின் இனப்பெருக்கத்தைக் காடுகளை அழித்துக் கட்டுப்படுத்தியதால்தான் என்பதை யாரும் உணரவில்லை. தொழில்துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்காகக் காடுகளை அழித்தவர்களுக்குக் காடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியில் பங்கிருக்கிறது எனப் புலப்படவில்லை.

ஆனால், இந்த நூற்றாண்டில்தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மரங்களை வளர்க்கும் கொள்கைகளை இந்தியா உட்பட உலக நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இதை இயற்கையை அழிப்பதாக எப்படிச் சொல்ல முடியும்?

நான் பணிபுரியும் கல்லூரியில் இருக்கும் வயதான மரங்களில்தான் பறவைக் கூட்டம் அதிகமாகக் காணப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நடப்பட்ட மரங்களில் பறவைகளின் கூட்டம் அவ்வளவாகத் தென்படாது. இயற்கையை நாம் புரிந்துகொண்டிருக்கும் முறையே தவறு. ஒரு இடத்தில் வெட்டப்பட்ட 10 மரங்களுக்குப் பதிலாக வேறோர் இடத்தில் 10 மரங்களை நடுவது தீர்வல்ல, இயற்கையிடம் நாம் கோரும் மன்னிப்பு. மரங்களை வெட்டாமல் இருப்பதுதான் தீர்வு.

மக்கள்தொகை அடர்த்தியும் நோய் பரவலாக்கத்துக்குக் காரணம். அந்த வகையில் இந்தியா இந்தச் சூழலில் இருந்து எப்படி மீளும்?

அதிக மக்கள்தொகை அடர்த்தியை உடைய சிறிய ஜனநாயக நாடுகள் பொது சுகாதாரத்தில் பெரிய அளவிலான முதலீட்டைச் செய்ய முடிந்ததால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடிந்தது. நாம் அண்டை நாடான பங்களாதேஷைவிட மிகக் குறைந்த அளவில்தான் பொதுசுகாதாரத்தில் முதலீடு செய்திருக்கிறோம். 2025-க்குள் பொதுசுகாதாரச் செலவீடுகளை 2.5 சதவிகிதம் அதிகரிப்பது அரசின் குறிக்கோள். அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இத்தாலி தனது 2016-ம் ஆண்டுக்கான நிதிநிலையின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவிகிதத்தைப் பொதுசுகாதாரத்தில் செலவிட்டுள்ளது. நாம் நோய்த்தாக்கத்தின் ஆரம்பகட்டத்தில்தான் இன்னும் இருக்கிறோம். வீட்டில் லாக்டவுனில் இருப்பதைத் தவிர நம்மிடம் வேறு தீர்வு இதற்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்.

பங்களாதேஷ் - இந்தியா
பங்களாதேஷ் - இந்தியா

ஆனால், கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தினால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்கிற கருத்து நிலவுகிறதே?

அது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவில் கிராமப்புறத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. தற்போது நிலவும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூட கிராமப்புறங்களில் விதிகளைச் சற்று தளர்த்திக்கொள்வதுதான் தீர்வாக இருக்கும். அதனால் நுகர்வு அதிகரிக்கும். நுகர்வு அதிகரிக்கும்போது பொருளாதாரம் மெல்லச் சீரடையத் துவங்கும்

அமெரிக்கா - இந்தியா
அமெரிக்கா - இந்தியா

கொரோனாவுக்குப் பிறகு, இந்தியாவின் உலகநாடுகளுடனான உறவு எப்படி இருக்கும், அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அங்கு வாழும் இந்தியர்களைப் பாதிக்கும் எனச் சொல்லப்படுகிறதே?

கொரோனாவைவிடக் கொடிய எபோலா ஆப்பிரிக்காவை பாதித்த போது உலகநாடுகள் இவ்வளவு பதற்றமடையவில்லை. வளர்ந்த நாடுகளைத் தற்போது கொரோனா பாதித்திருப்பதால்தான் இத்தனை பதற்றமும். எந்த உலக நாடுகளின் உறவும் பாதிக்கப்படாது, ஜனநாயக நாடுகள் இன்னும் ஓரணியாக உருவாகும். அமெரிக்க இந்தியா போன்ற ஒற்றைத் தலைமையை ஆராதிக்கும் பாப்புலிஸ்ட் நாடுகள் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் ஓரணியாகதான் இருக்கும்.

SDGs
SDGs

2030-ம் ஆண்டுக்கான 17 வளங்குன்றா வளர்ச்சிக் கொள்கைகளை (Sustainable development goals) ஐநா சபை அறிவித்திருக்கிறதே, அது நிலைமையைச் சரி செய்யாதா?

எந்த உலக நாடுகளும் அந்தக் கொள்கைகளை எட்டப்போவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம். காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் தொழில்துறை சார்ந்த புதிய முன்னெடுப்புகளும் 17 குறிக்கோள்களில் அடங்கும். தொழில்துறை முன்னெடுப்புகள் (Industrial innovations) என்பது சுற்றுச்சூழலையும் உள்ளடக்கியதுதான். வல்லரசு நாடுகளில் அதற்கான இடமே இல்லை. வளரும் நாடுகள் அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க இவற்றைப் புறந்தள்ளும், பின் தங்கிய நாடுகளில் வல்லரசு நாடுகளின் இயற்கைச் சுரண்டல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். கொரோனா போன்ற பேரிடர்கள் சிறிய மாற்றத்தை உண்டுபண்ணுமே ஒழிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடாது.

அடுத்த கட்டுரைக்கு