தொற்றுநோய் என்று வந்தாலே மனிதர்கள் மத்தியில் நேரடியாகப் பரப்பாத வௌவால்கள்மீது, இப்படியொரு தவறான பார்வை விழுவது ஏன்?
இப்போது, உலகளவில் மனிதர்களைப் பாதித்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 என்ற வகை கொரோனா வைரஸ் வௌவால்களிடம் தோன்றி, பல வளர்சிதை மாற்றங்களை அடைந்து மற்றுமொரு தொற்று கடத்தும் உயிரினத்துக்குப் பரவி அதனிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.
அதன்பிறகு, இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இங்கு வாழ்கின்ற ரௌசெட்டஸ் (Rousettus), டெரொபஸ் (Pteropus) ஆகிய இரண்டு பழந்தின்னி வௌவால்களில் கொரொனா வைரஸ் இருப்பதை உறுதி செய்தனர். அது BtCoV என்ற வகையைச் சேர்ந்த வௌவால்களில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் என்பதையும் உறுதி செய்தனர். ஆனால், இந்தச் செய்தி அரைகுறையாகச் சமூக வலைதளங்களில் பரவவே அதற்குரிய எதிர்வினைகளையும் மோசமான வகையில் வௌவால்கள் சந்திக்கத் தொடங்கின.
`இந்தியாவிலுள்ள இரண்டு வகை வௌவால்களுக்குக் கொரோனா பரவிவிட்டது' என்ற செய்தி மட்டுமே பரவியது. அதனால் மக்கள் அவற்றிடமிருந்து தமக்கும் பரவும் என்று அஞ்சத் தொடங்கினார்கள். அதோடு, எந்த இரண்டு வௌவால்களிடம் கொரோனா பரவியுள்ளது என்பது தெரியாததால் மக்கள் அனைத்து வௌவால்கள் மீதும் அச்சம் கொள்ளத் தொடங்கினார்கள். அந்த அச்சத்தின் விளைவாக அவர்களுடைய கண்ணில் பட்ட வௌவால்களையெல்லாம் கொல்லத் தொடங்கினர். தங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள பழ மரங்களில் வாழ்ந்த வௌவால்களை நெருப்பு வைத்து விரட்டியடிக்கத் தொடங்கினார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்கூட இத்தகைய சம்பவங்கள் அரங்கேறின. ஆனால், உண்மையில் எந்த வௌவாலைக் கண்டும் மக்கள் அஞ்சத் தேவையில்லை என்பதே நிதர்சனம்.
உண்மையில் சொல்லப்போனால், வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகப் பரவக்கூடிய நோய்கள் சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடியது. ``வௌவால்களில் வைரஸ் தோன்றலாம். ஆனால், அவை அதேநிலையில் மனிதர்கள் மத்தியில் பரவமுடியாது" என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தொற்று நோய்கள் குறித்த ஆய்வுத்துறையின் தலைவர் ராமன்.ஆர்.கங்ககேத்கர் (Raman R Gangakhedkar).
இந்த நோய்க்கு வௌவால்களையோ வேறு எந்தவொரு விலங்கையோ பழி சொல்வது அறிவியல் ஆதாரமற்ற ஒரு செயல்.தெற்காசிய ஆய்வாளர்கள் மற்றும் வளங்காப்பாளர்கள்
``SARS-CoV-2 தொற்று மனிதர்களுக்கு முதலில் எப்படி வந்தது என்று சரியாகக் கண்டறியப்படாத நிலையில், இந்த நோய்க்கு வௌவால்களை அல்லது வேறு எந்தவொரு விலங்கை பழி சொல்வது அறிவியல் ஆதாரமற்ற ஒரு செயல். சார்ஸ் போன்ற வைரஸ்கள் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக வந்து நோய்களைப் பரப்புவதென்பது மிகவும் அரிதான நிகழ்வு. இந்தக் கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்தோ அவற்றின் கழிவுகளிலிருந்தோ மனிதர்களுக்கு நேரடியாகப் பரவியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவிலுள்ள இரண்டு வௌவால் இனங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வகை கொரோனா வைரஸ் நம்மைப் பாதிக்கின்ற SARS-CoV-2 வகையிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த வைரஸ் மூலம் நமக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாது.
அலையாத்திக்காடுகளின் மலர்கள் உட்படப் பல பொருளாதார மற்றும் கலாசார முக்கியத்துவம் கொண்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் விதைப்பரவலுக்கும் வௌவால்கள் உதவுகின்றன. மேலும், பூச்சிகளை உண்ணும் வௌவால் இனங்கள் நெல், பருத்தி, சோளம், தேயிலை போன்ற பயிர்களைச் சேதப்படுத்தும் பல பூச்சிகளை, ஆயிரக்கணக்கில் தினமும் வேட்டையாடுபவை. எனவே, வௌவால்கள் சூழலியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஈடுசெய்ய முடியாத பயன்களை நமக்குத் தந்து வருகின்றன" என தெற்காசிய ஆய்வாளர்கள் மற்றும் வளங்காப்பாளர்கள் இணைந்து இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆம், கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகப் பரவாது. இதுகுறித்த விளக்கத்துக்குள் செல்வதற்கு முன்னால், நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்வோம். இந்தியாவிலுள்ள வௌவால்களிடம் காணப்படும் கொரோனா மனிதர்களிடம் பரவாது என்பதை மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்களும் காட்டுயிர் ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். அது மட்டுமில்லை, சார்ஸ், மெர்ஸ், எபோலா எதுவுமே அந்த அமைதியான பறக்கும் பாலூட்டிகளிடமிருந்து மனிதர்கள் மத்தியில் பரவாது. பிறகு எப்படி, வௌவால்களில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது?
SARS-CoV-2 என்ற வகைதான் இப்போது மனிதர்கள் மத்தியில் பரவிப் பெருஞ்சேதங்களை விளைவித்துக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், சீனாவிலுள்ள ஒரு வௌவால் இனத்தில் உருவான ஒருவகைக் கொரோனாவுக்குத் தூரத்துச் சொந்தம் என்று சொல்லலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலுமான காலகட்டத்தில் ஏதோவொரு சூழலில்தான் இந்த வைரஸ் அதிலிருந்து வளர்சிதை மாற்றங்களைச் சந்தித்து SARS-CoV-2 ஆக உருவெடுத்துள்ளது என்பதே நம்மிடம் பரவும் கொரோனாவின் தூரத்துச் சொந்தமான வைரஸை மரபணு ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல். மேலும், இந்த வைரஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வேறு ஏதேனும் விலங்கைப் பாதித்து அதன் உடலில் அந்த வைரஸ் சந்தித்த வளர்சிதை மாற்றங்களின் வழியே நம்மைத் தற்போது பாதிக்கின்ற வைரஸாக உருவெடுத்திருக்கலாம் என்று மற்றுமொரு கருதுகோளும் அதை ஆய்வு செய்த வைராலஜி நிபுணர்களால் முன் வைக்கப்படுகிறது. வௌவாலிடமிருந்து வேறொரு விலங்குக்குப் பாதித்து, அதில் வளர்சிதை மாற்றமடைந்த வைரஸ் ஒருநாள் மனிதர்களையும் தாக்கியுள்ளது.
பூமியில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட வௌவால் வகைகள் உள்ளன.Bat Conservation International
இவையனைத்தும் கருதுகோள்களே. கடந்த ஆண்டுகளில் கொரோனா எங்குக் காத்திருந்தது அல்லது எப்போது மனிதர்களைப் பாதிக்கும் அளவுக்கு வளர்ந்தது அல்லது வௌவால்களிடமிருந்து மனிதர்களிடம் இதை எந்த விலங்கு கொண்டுவந்து சேர்த்தது என்று மனித அறிவியலுக்கு இதுவரை உறுதியாக எந்த விடையும் கிடைக்கவில்லை. அறிவியலுக்குத் தற்போது உறுதியாகத் தெரிந்துள்ளது என்னவென்றால், இந்தக் கொரோனா வைரஸ் உருவாக மூல காரணமாக இருந்த வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகப் பரவாது. அந்த வௌவால்கள் மனிதர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை. சார்ஸ், மெர்ஸ், எபோலா ஆகிய நோய்களும்கூட வௌவால்களிலிருந்து உருப்பெற்றிருந்தாலும்கூட அவற்றிலும் இதே கூற்றுதான்.
தொற்றுநோய் என்று வந்தாலே மனிதர்கள் மத்தியில் நேரடியாகப் பரப்பாத வௌவால்கள்மீது, இப்படியொரு தவறான பார்வை விழுவது ஏன்?
கடந்த சில ஆண்டுகளில் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய விலங்கியல் வைரஸ் தொற்றுகள் வௌவால்களிடமிருந்தே அதிகம் பரவுவதாகப் பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், மற்ற பாலூட்டிகள் எந்தளவுக்கு வைரஸ் தொற்றுகளைச் சுமந்திருக்கின்றனவோ அதே அளவுக்குத்தான் வௌவால்களும் தன் உடலில் சுமக்கின்றன என்கின்றனர் தீவிர ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள். பிரச்னை என்னவென்றால், பூமியிலுள்ள பாலூட்டிகளில் ஐந்தி ஒரு பங்கு வௌவால்கள். கொறி உயிரினங்களுக்கு அடுத்தபடியாக, வௌவால்தான் அதிகத் துணை இனங்களைக் கொண்ட பாலூட்டி. பூமியில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட வௌவால் வகைகள் உள்ளன என்று கூறுகின்றது பேட் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (Bat Conservation International) என்ற சர்வதேச அமைப்பின் தரவுகள்.
அவற்றிலுள்ள அதிகமான துணை இனங்கள், பறக்கும் திறன் அனைத்தும் பாலூட்டிகளுக்கு நடுவே நோய்களைப் பரப்பும் வாய்ப்பை அதிகப்படுத்துவதால் ஆய்வாளர்கள் அவற்றுள் வைரஸ் நோய்களை மிக ஆழமாகத் தேடுகின்றனர். பாலூட்டி உயிரினங்களில், வௌவால்களுடைய எதிர்ப்புச் சக்தி தனித்துவமானது. அது, வைரஸ்களுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய திறனை அவற்றுக்கு வழங்குகின்றன.
"அந்த எதிர்ப்புச் சக்தி, மிகக் கொடிய வைரஸ்களிடமிருந்துகூட அவற்றைத் தற்காத்துவிடுகின்றன. அத்தகைய கொடிய வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடிஸ் (antibodies) வௌவால்களின் உடலில் கண்டுபிடிக்கவும் பட்டுள்ளன. அதன்மூலம், வைரஸ் தாக்கியிருப்பதுகூடத் தெரியாமலே அவற்றின் உடலில் அதன் தாக்கமும் குணமடைந்துவிடுகிறது. இதன்மூலம், வௌவால்களின் உடலில் அத்தகைய கொடிய வைரஸ் தொற்றுகள் நிலையாக இருப்பதில்லை என்று தெரியவருகிறது. ஆகவே, அவற்றின் உடலில் நிலையாக இருக்காத தொற்று நோயை அவை தொடர்ந்து பரப்ப முடியாது. விலங்கியல் நோய்த்தொற்றுப் பரவலில் இருக்கும் முக்கியமான இணைப்பு இங்கே விடுபடுகிறது" என்கின்றனர் இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் (Tel Aviv University) சேர்ந்த பேராசிரியர். யோவெல் மற்றும் முனைவர் வெயின்பெர்க்.
மற்ற சிறிய வகைப் பாலூட்டிகளோடு ஒப்பிடும்போது, வௌவால்களுக்குச் சற்று நீண்ட ஆயுள். அவற்றின் வாழ்வுமுறைக்குத் தகுந்தவகையில் அமைந்துள்ள நோய் எதிர்ப்புத் திறன் பேருதவி புரிகின்றது. 2006-ம் ஆண்டு, நம் விரல் அளவே இருக்கும் 7 கிராம் எடையுடைய மியோடிஸ் பிரன்ட் டி (Myotis brandtii) என்ற வௌவால் மீண்டும் பிடிக்கப்பட்டது. அந்த வௌவால், 41 ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவைச் சேர்ந்த் ஆய்வாளர்களால் டாக் (tagged) செய்யப்பட்டிருந்தது. அதே அளவுள்ள எலி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வாழாது. இவ்வளவு நீண்ட ஆயுளுக்கு, மிக வலிமையான நோய் எதிர்ப்பு திறன் அவசியம்.
மற்ற பாலூட்டிகளைப்போல் அல்லாமல், இவை பறக்கும் திறனுடையாக இருக்கின்றன. அதுகூட அவற்றின் இந்த அபாரமான நோய் எதிர்ப்பு திறனுக்குக் காரணமாக இருக்கலாம். பேராசிரியர். யோவெல் (Prof. Yovel) அவருடைய ஆய்வில், 30 கிராமுக்கும் குறைவான எடையுள்ள வௌவால்கள் 250 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரே இரவில் பறப்பதைக் கண்டுள்ளனர். இவ்வளவு தூரம் பறப்பதற்குத் தேவைப்படுகின்ற ஆற்றல், துரிதப்படுத்தப்படும் செரிமான செயல்பாடுகள் ஆகியவை சில நச்சுத்தன்மையுடைய சேதங்களையும் விளைவிக்கின்றன. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள அபாரமான நோய் எதிர்ப்புச் சக்தி அவசியம். இந்த எதிர்ப்புச் சக்தியே, வைரஸ்களிடமிருந்தும் அவற்றைக் காப்பாற்றுகின்றன.
கூடுதலாக, மற்றுமொரு தகவலை முனைவர் வெயின்பெர்க் மற்றும் பேரா.யோவெல் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில், 'வௌவால்கள் மாலை நேரங்களில் குகைகளைவிட்டு வெளியேறும்போது அவற்றுடைய உடல் வெப்பநிலை சில நிமிடங்களுக்கு அதிகரிக்கும். அந்த நேரத்தில் சுமார் 40 டிகிரி செல்ஷியஸ் வரை அதன் வெப்பநிலை உயரும் என்று கூறும் அவர்கள், அந்தநேரத்தில் அவற்றுடைய உடலில் ஏதேனும் பிரச்னைக்குரிய பேக்டீரியாவோ வைரஸோ இருந்தாலும் அவற்றைக் கொன்றுவிடும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
வௌவால்கள் மீதான நம் நேசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வௌவால்கள் குருடு என்று சொல்வதைப் போலத்தான் அவை மனிதர்களுக்கு கொரோனாவைப் பரப்புகிறது என்ற கூற்றும். எப்படி முந்தையது பொய்யோ அதேபோலத்தான் கொரோனா குறித்த வதந்தியும். கொரோனா மட்டுமின்றி, மார்பர்க், ஹெண்ட்ரா, பேட் ரேபிஸ் போன்றவை வௌவால்களிடமிருந்து மற்ற உயிரினங்களுக்குப் பரவி பின்னர் மனிதர்களுக்குப் பரவுகின்றன. ஆனால், வௌவால்கள் வாழும் இஸ்ரேலில் அவை இல்லை என்கிறார் பேரா.யொவெல். அவரைப் பொறுத்தவரை, "வைரஸ்களுக்கு உரிய மரியாதையும் எச்சரிக்கை உணர்வும் அவசியம்தான். ஆனால் அந்த வைரஸ் தொற்றுகளுக்கு வௌவால்களைக் குற்றம்கூறி, தண்டிக்கக்கூடாது. ஏனென்றால், அதற்கு அவை காரணம் கிடையாது."
நாமும் வௌவால்கள் செய்யும் சூழலியல் சேவைகளை மதித்து, அவற்றுக்கு உரிய இடம் இந்தப் பூவுலகில் கிடைப்பதை உறுதி செய்வோம்.