Published:Updated:

சோவியத் யூனியனையே சிதறடித்த செர்னோபில் பேரழிவு… நாம் ஏன் இதுபற்றி தெரிந்துகொள்ளவேண்டும்?

தான் உருவாக்கிய அணு ஆயுதம் தன் மக்களையே பதம் பார்த்த வரலாற்றின் மோசமான உதாரணம் சோவியத் யூனியனின் சுவர்களில் படிந்து கிடக்கிறது. ஏப்ரல் 26, 1986 - வரலாற்றில் மிக மோசமான அணு விபத்து பதியப்பட்ட நாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனித இனத்தின் முதலும் முடிவுமான எதிரி மனிதனே! இல்லாத யுத்தம் உருவாகும் என்றும், நடக்காத சண்டை நடந்து விடும் என்றும் கணக்குப் போட்டு, ஒவ்வொரு நாடும் வன்மத்தையும் குரோதத்தையும் எரியூட்டி வளர்த்து, அணையாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எப்போதும் எதிரி தன்னை தாக்கலாம் என்று, பலம் பொருந்திய ஆயுதங்களை உருவாக்கி பதுக்கி வைத்திருக்கின்றன. தன் வினை தன்னைச் சுடும் என்பது போல, 35 வருடங்களுக்கு முன்பாக உலகின் பலம் பொருந்திய வல்லரசு தன் கையால் தன் கண்ணையே குத்திக்கொண்ட பரிதாபம் செர்னோபில்.

தான் உருவாக்கிய அணு ஆயுதம் தன் மக்களையே பதம் பார்த்த வரலாற்றின் மோசமான உதாரணம் சோவியத் யூனியனின் சுவர்களில் படிந்து கிடக்கிறது. ஏப்ரல் 26, 1986 - வரலாற்றில் மிக மோசமான அணு விபத்து பதியப்பட்ட நாள். வடக்கு உக்ரைனில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் (Chernobyl) நகருக்கு அருகில் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலை வெடித்து எரிந்தது. இரகசியங்களால் மூடப்பட்டு மறைக்கப்பட்ட இந்த சம்பவம் மனித வரலாற்றிலேயே அழிக்க முடியாத தழும்பாக மாறிப்போன ஒரு நிகழ்வானது. வல்லரசின் வளர்ச்சியின் அடையாளமாக தம்பட்டம் அடிக்கப்பட்ட அணு உலை, அதே வல்லரசின் வீழ்ச்சிக்கும் வித்திட்டது.

நிகழ்ந்து 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டாலும் இந்த ஆலையைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு இன்னும், குறைந்தது 20,000 ஆண்டுகள் வரை மனித உயிர் வாழக்கூடியதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இதுவரை வரலாற்றிலே பதியப்பட்ட மிகப்பெரிய அணு விபத்தான செர்னோபில் நிகழ்ந்தது எப்படி?

செர்னோபில் விபத்து
செர்னோபில் விபத்து

சோவியத் யூனியன் வளர்ச்சியும் செர்னோபில் திட்டமும்!

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் சோவியத் யூனியன் தனது அதீத வளர்ச்சியின் அடுத்த கட்டமாக அதிகளவில் அனுசக்தியில் முதலீடு செய்தது. முதலாளித்துவ அமெரிக்காவுக்கும், சோஷியலிஸ சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப்போரில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க ஒன்றுக்கொன்று தம் பலத்தை கூட்டிக் கொண்டே போயின.

விவசாயம், தொழில்நுட்பம், தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரை ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டது. இதில் ஏற்கெனவே அமெரிக்கா அமைத்து வைத்திருந்த அணு உலைகளை முறியடிக்கும் விதமாக சோவியத் யூனியன் தனது அணு ஆராய்ச்சிக்கென ஒரு நகரத்தையே வடிவமைத்தது. Pripyat என அழைக்கப்பட்ட அந்த அழகிய நகரம் அனைத்து வசதிகளும் பொருந்திய ஒரு சொர்க்க பூமியாக உருவாக்கப்பட்டு, சோவியத் அரசின் அணு ஆராய்ச்சி திட்டத்தில் பணி புரியும் ஊழியர்கள் வாழும் இடமாக மாற்றப்பட்டது.

சோவியத் விஞ்ஞானிகள் 1977-ம் ஆண்டு முதல் நான்கு RBMK அணு உலைகளை தற்போதைய உக்ரேனின் Belarus உடனான எல்லைக்கு தெற்கே அமைந்துள்ள மின் நிலையத்தில் நிறுவினர். ஏப்ரல் 25, 1986 அன்று, வி.ஐ. லெனின் அணுமின் நிலையத்தின் நான்காவது உலையில் (V.I. Lenin Nuclear Power Station’s fourth reactor) வழக்கமான பராமரிப்பு நிகழ்வானது தொழிலாளர்களின் ஓய்வு நேரத்தில் திட்டமிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோதனையின் போது, ​​தொழிலாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாலும், சரியாக திட்டமிடப்படாத ஆராய்ச்சியாலும் 4ம் ஆலைக்குள் உள்ள கலன்கள் அதீத வெப்பத்தை கக்க ஆரம்பித்தது. நொடி நேரத்தில் மின்சாரம் அதிகரித்து தீப்பற்றியது. உலகின் தலை சிறந்த அணு சக்தி விஞ்ஞானிகளையும் வல்லுனர்களையும் கொண்ட சோவியத் யூனியனாலேயே என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறிய வேளை, அந்த அதி சக்தி வாய்ந்த அணு உலை வெடித்துச் சிதறியது.

செர்னோபில் விபத்து
செர்னோபில் விபத்து

உடனே அந்த உலையை முழுவதுமாக மூட முயற்சித்த போதிலும், வெடிப்பின் எதிர்வினையாக மற்றொரு ஆலை என சங்கிலித்தொடராக தீப்பற்றி இறுதியில் மொத்த அணுசக்தி மையமுமே வெடித்து கதிரியக்க பொருட்களை வளிமண்டலத்தில் கக்கியது.

வெடிப்புக்கு முன்னதாக கிட்டத்தட்ட 190 மெட்ரிக் டன் அணு எரிபொருள் அங்கு சேமிக்கப்பட்டு இருந்தது. வெடிப்பின் போது யுரேனியம், ப்ளூட்டோனியம், ஐயோடைன் 131, சீசியம் 137 மற்றும் பல ஆபத்தான கூறுகள் பல மைல் தொலைவுக்கு பரவியது. 20 டன் அளவிலான கதிர்வீச்சு நிறைந்த அணுக்கழிவு, 30 டன் அளவிலான கதிர்வீச்சு நிரம்பிய துகள்கள், அந்தப் பகுதி முழுதும் சிதறடிக்கப்பட்டது.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் கதிரியக்கத்தை போல 400 மடங்கு கதிரியக்கத்தை அந்த விபத்து வெளியிட்டது. சுமார் 20 வகையான கதிர்வீச்சுப் பொருட்கள் காற்று மண்டலத்தில் கலந்தன. செர்னோபிலின் 190 மெட்ரிக் டன் யுரேனியத்தில் 30 சதவிகிதம் வரை இப்போதும் வளிமண்டலத்தில் கலந்து இருக்கிறது. அந்த இடத்தில் இருந்த மரம், செடி, புல், பூண்டு, விலங்குகள், பறவைகள் என மொத்த சுற்றுச் சூழல் அமைப்பும் கருகி சாம்பலானது.

அந்த விபத்தின்போது நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 30 பேர் நேரடி பாதிப்புக்கு உள்ளாகி அதன் பின் வந்த நாட்களில் கடும் கதிர்வீச்சு நோய்க்கு ஆளாகி அனைவரும் இறந்து போனார்கள். இறுதியாக சோவியத் யூனியன் 3,35,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அணு உலையைச் சுற்றிய 35 கிமீட்டர் அகலமான எல்லையை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.

சோவியத் யூனியனையே சிதறடித்த செர்னோபில் பேரழிவு… நாம் ஏன் இதுபற்றி தெரிந்துகொள்ளவேண்டும்?

அணு கதிர்வீச்சின் விளைவுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானக் குழுவின் அறிக்கையின்படி இந்த சம்பவத்தின் விளைவாக 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர் என்றும் பல ஆயிரம் பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர் என்றும் கூறுகிறது. ஆயினும் வெடி விபத்து நடந்த போதே அணு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் என்ன நடந்தது என்பதை வெளி உலகிற்குச் சொல்வதைத் தடுக்க தொலைபேசி இணைப்புகள் உடனடியாக வெட்டப்பட்டன. ஒட்டுமொத்த உண்மையையும் மூடி மறைக்க முயன்றது சோவியத் யூனியன். எனவே சரியான பாதிப்பின் நிலவரம் இன்று வரை தெரியாத ஒரு மர்மமே!

கதிர்வீச்சின் வீரியத்தை உணர்ந்த சோவியத் அரசு அதன் பரவலை தடுக்க அதன் மீது ஒரு கான்க்ரீட் வேலியை அமைக்க திட்டமிட்டது. 220 டன் கதிரியக்க பொருட்கள் சிதறிக் கிடந்த இடத்தை சுற்றி சார்கோபகஸ் (sarcophagus) என்று அழைக்கப்பட்ட கான்க்ரீட் வேலியை கட்ட சுமார் 600,000 தொழிலாளர்களை ஈடுபடுத்தியது. டிசம்பர் 1986-ல் மனித சமூகத்தையே அழிக்கக் கூடிய வலிமை பொருந்திய அணு அரக்கனை சார்கோபகஸ் எனும் கான்க்ரீட் கொண்டு மூடியது சோவியத் அரசு.

செர்னோபில் பேரழிவும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும்!

செர்னோபில் பேரழிவு சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு இந்த நிகழ்வு மேலும் வலு சேர்த்தது.

செர்னோபில் பேரழிவுக்கு முன்பு வரை மிகவும் ஒற்றுமையாக, நிலையானதாக இருந்த சோவியத் மக்கள் இந்த பேரழிவுக்குப் பின் அமைப்புக்கு எதிரான தம் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார். அதுவரை சோவியத் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, அதன் குறைகளை மன்னித்து, அதன் எல்லைக்குள் தமக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்த மக்கள், செர்னோபிலுக்குப் பிறகு, இந்த அமைப்பு நம்பமுடியாதது என்றும் தமக்கும், தம் வாரிசுகளுக்கும் ஆபத்தானது என்றும் தீவிரமாக நம்பத் தொடங்கினார்.

Pripyat
Pripyat

செர்னோபிலுக்குப் பிறகு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது என்ற அச்சம் சோவியத் யூனியனின் பிளவுக்கு தூண்டில் போட்டது. உலகளாவிய அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு தூண்டுதலாக இருந்த இந்த பேரழிவினால் 235 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பெலாரஸ் நிலப்பரப்பில் 23 சதவிகிதம் இந்த விபத்தால் பாழானது. அதன் விவசாய நிலத்தில் ஐந்தில் ஒரு பகுதியை இழந்தது. பேரழிவின் உச்சமாக 1991-ல் பெலாரஸ் அதன் மொத்த பட்ஜெட்டில் 22 சதவிகதத்தை இதற்காகவே செலவு செய்தது.

சோவியத் யூனியனின் கடைசி பொதுச் செயலாளர் மிகைல் கோர்பச்சேவின் கூற்றுப்படி, 1986-ல் செர்னோபில் ஏற்பட்ட பேரழிவு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சோவியத் யூனியனில் சரிவை ஏற்படுத்தியது எனகிறார். செர்னோபில் வெடிப்பை ஒரு ‘திருப்புமுனை’ என்று விவரிக்கும் இவர் மிக அதிகமான கருத்துச் சுதந்திரத்திற்கான வாய்ப்பை அந்த வெடிப்பு திறந்து விட்டது என்று கூறுகிறார்.

சோவியத் நாடுகள் சிதறிய பின் செர்னோபில் உக்ரைன் வசம் வந்தது. தன் எல்லைக்குள் அமைதியாக அடைபட்டுக் கிடக்கும் அணு அரக்கன் எப்போது வேண்டுமானாலும் வெளிப்பட்டு, நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்துவான் என்பதை நன்கு உணர்ந்த உக்ரைன் அரசு வளர்ந்த நாடுகளின் உதவியை நாடியது. இதை தொடர்ந்து 1997 ஜூன் மாதம் நடைபெற்ற G7 மாநாட்டில் 300 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் ஒதுக்கப்பட்டு, விபத்து நிகழ்ந்த மொத்த பகுதியையும் ஒரு கான்க்ரீட் பெட்டி கொண்டு மூட முடிவு செய்யப்பட்டாலும் அதற்கு பல எதிர்ப்பு குரல்கள் எழும்பத் தொடங்கின. எனினும் 1999-ல் நிலைமை மோசமானதை தொடர்ந்து மீண்டும் இந்த முயற்சி தொடங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் இது 100 ஆண்டுகளுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்பதால், அதற்கு முன்பு ஏதாவது நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது உக்ரைன் அரசு.

செர்னோபில் விபத்துக்கு விலை கொடுக்கும் அடுத்த தலைமுறை!

செர்னோபில் விபத்துக்கு முன்பு வரை அந்த இடத்தில் பிறந்த குழந்தைகள் 90 சதவிகிதம் ஆரோக்கியமானதாகவே பிறந்தனர். ஆனால், செர்னோபிலுக்கு பின்னர் 20 சதவிகிதத்துக்கும் குறைவான குழந்தைகளே ஆரோக்கியமாக பிறந்தனர். கை கால்கள் இல்லாமல், உடலின் பாகங்கள் ஊனமுற்று, மனநிலை பாதிப்புற்று, புற்று நோய்களுக்கு ஆட்பட்டு என அங்கு பிறக்கும் அடுத்த தலைமுறை, தம் முன்னோர் செய்த தவறுக்கான அதிகபட்ச விலையை கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Pripyat
Pripyat

Pripyat நகரம் இன்று!

இந்த இடத்தை சுற்றுலா தளமாக அறிவித்த உக்ரைன் அரசு அங்கு ஒரு விடுதியையும் கட்டியுள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான இடம் என்பதால் நேரடியாக அங்கு செல்ல முடியாது. பலத்த பாதுகாப்பு மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் அரசின் அனுமதியோடு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை பயணிகள், சுற்றுலா பஸ்களில் விபத்து நிகழ்ந்த இடத்தை சுற்றி அழைத்துச் சென்று காட்டப்படுகின்றனர். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. கட்டுப்பாடு மிகக் கடுமையாக இருக்கும் இந்த இடத்தில் உக்ரைன் அரசு மெகா சூரிய மின்சக்தி நிலையங்களை அமைத்துள்ளது.

செர்னோபில் பற்றி பல ஹாலிவுட் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் வெளிவந்து சக்கை போடு போட்டுள்ளன. Chernobyl விபத்து குறித்து உறுதி செய்யப்படாத பல கதைகள் இன்று வரை உலா வருகின்றன. சிலர் அது சோவியத் யூனியனின் வளர்ச்சியை சிதைக்க அமெரிக்கா செய்த சதி என்றும் கூட சொல்கிறார்கள்.

மனிதன்தான் அவ்விடத்தில் வாழ முடியாது போனாலும் survival of fittest என்ற இயற்கை நியதிக்கு ஏற்ப பல தாவரங்களும் விலங்குகளும் அந்த இடத்தில் மீண்டும் உயிர் பெற்று பல்கிப் பெருகி வாழ ஆரம்பித்துள்ளன. வனவிலங்குகளின் சுதந்திர பூமியாக மாறியுள்ளது செர்னோபில். பல மரங்கள் மீண்டும் வளர்ந்திருந்தாலும், விஞ்ஞானிகள் இப்பகுதியில் உள்ள சில வனவிலங்கு இனங்களிடையே, கண்புரை மற்றும் அல்பினிசம் போன்ற குறைபாடுகள் காணப்படுவதாகவும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறைந்த விகிதத்தில் காணப்படுவதாகவும் ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும், மூடப்பட்ட மின்நிலையத்தைச் சுற்றி மனித நடவடிக்கைகள் விலக்கப்பட்டதன் காரணமாக லின்க்ஸ் எனப்படும் காட்டுப் பூனை முதல் மான், மரைகள், ஓநாய்கள் வரை பல வனவிலங்குகளின் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரித்துள்ளது. மனிதன் விலகும் இடங்களில் இயற்கை செழிக்கும் என்பதற்கான இன்னொரு உதாரணம் இது.

Pripyat
Pripyat

2020-ல் செர்னோபிலை அச்சுறுத்திய காட்டுத் தீ!

2020 ஏப்ரல் மாதம் செர்னோபிலை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென காட்டுத்தீ பற்றிக்கொண்டது. தீயை சமாளிக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. இந்த தீயினால் நிலத்தடியில் புதையுண்டிருக்கும் கதிரியக்க இரசாயனங்கள் மேலெழுந்து பரவக்கூடும் என்ற பதபதைப்பு உருவானாலும் நிலைமை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் மிகப்பெரிய அணு உலைகளை தாங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த இந்த இடம் இன்று, இனி எப்போதுமே மனித இனம் வாழ முடியாத மாயானப் பகுதியாக மாறி அமைதி காக்கிறது. சோவியத் யூனியனின் வெற்றி என்று பிரமிப்பாக பார்த்த விஷயம் இன்று அதன் தோல்வி என்று பரிதாபமாக நோக்கப் படுகிறது. இது ஒரு பைரிக் வெற்றி (Pyrrhic victory). பேரழிவுகளை ஏற்படுத்தும் தோல்விக்கு சமமான ஒரு வெற்றி. இந்த தோல்வியின் கசப்பை இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு அங்கே வாழப்போகும் உயிர்கள் நுகரப்போகின்றன என்பதுதான் பெரும் சோகம்.

மனிதனின் அதிகார வெறிக்கும், ஆதிக்க வேட்டைக்கும் பலியாகும் அப்பாவி உயிர்கள் இன்றும் செர்னோபிலின் வாரிசுகளாக வந்து பிறந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். அழிவின் பொருட்டு ஆக்கப்படும் எதுவுமே இரு பக்கமும் சிதைக்கும் கூர்வாள் என்பதை செர்னோபிலின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு