Published:Updated:

நீலகிரி: காட்டுமாடு தாக்கி பெண் உயிரிழப்பு! - தேயிலைத் தோட்டத்தில் நடந்த பயங்கரம்

காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு
காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு

தொலைவில் மேய்ச்சலில் இருந்த காட்டுமாடுகளை கவனித்தபடியே நடந்த அவர், தனக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்த ஒற்றைக் காட்டுமாட்டைக் கவனிக்காமல் அருகில் சென்றிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள பெரிய பிக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மி. இதே பகுதியிலுள்ள இவரது தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிடுவதற்காக இன்று மதியம் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.

காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு
காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு

அப்போது தோட்டத்துக்குள் காட்டுமாடுக் கூட்டம் ஒன்று மேய்ச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தொலைவில் மேய்ச்சலிலிருந்த காட்டுமாடுகளை கவனித்தபடியே நடந்த அவர், தனக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்த ஒற்றைக் காட்டுமாட்டை கவனிக்காமல் அருகில் சென்றிருக்கிறார்.

திடீரென முன்னோக்கி வந்த அந்தக் காட்டுமாடு, லஷ்மியைக் கொம்பால் குத்தி, தூக்கி எறிந்தது. இதில் படுகாயமடைந்த லஷ்மி அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு
காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தச் சோக நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய பெரிய பிக்கட்டி ராமச்சந்திரன்,``வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, ரிசார்ட்டுகள், சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டுவிட்டன. காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்வதற்குத் தடையாக மின்வேலிகளையும், தடுப்பு வேலிகளையும் அதிக அளவில் அமைத்துவிட்டனர்.

நீலகிரி: யானையைத் தொடர்ந்து காட்டுமாடு... மூன்றே ஆண்டுகளில் 6 மாடுகளின் வாய் சிதைக்கப்பட்ட கொடூரம்!

வனப் பகுதிகளுக்குள் செல்ல முடியாத காட்டுமாடுகள், உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கும், தேயிலைத் தோட்டங்களுக்குள்ளும் உலவ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அடிக்கடி மனிதர் - காட்டுமாடு எதிர்கொள்ளல்கள் நிகழ்கின்றன" என்றார்.

காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு
காட்டு மாடு தாக்கி பெண் உயிரிழப்பு

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,``நிகழ்விடத்துக்குச் சென்று காவல்துறையினரின் உதவியுடன் லஷ்மியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். காட்டுமாட்டை கவனிக்காமல் அருகில் சென்றிருப்பதாகத் தெரிகிறது.விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு