Published:Updated:

சிறு குப்பைகூட நம் உடல்நலனையும், உலகையும் அழிக்கும்… World Clean Up Day கொண்டாடுவதன் அவசியம் என்ன?

சுற்றுச்சூழலில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை பலர் உணர்வது கூட இல்லை. ஏனெனில் மக்கள் தங்கள் தனிப்பட்ட செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் தீங்கு விளைவிக்காது என்று நம்புகிறார்கள்.

இன்று உலக சுத்தம் செய்யும் நாள் (World Clean Up day)! அடடா... இப்படி ஒரு நாளா? என இதைப் படிக்கும் பத்தில் எட்டுப் பேர் நிச்சயம் ஆச்சரியப்படலாம். ஏனெனில் காதலர் தினம், சாக்லேட் தினம், தொடங்கி டெடி பியர் தினம் வரை கோலாகலமாக கொண்டாடும் நம் சமூகம் இவ்வாறான ஆக்கப்பூர்வமான நாள்களை எல்லாம் நினைவில் வைக்க மறந்து விடுகிறது. இவ்வாறான நாட்களை கொண்டாடுவதில் வணிக நிறுவனங்களுக்கும் பத்து பைசா லாபம் இல்லை என்பதால் அவர்களும் அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

Let's Do It!

2008-ம் ஆண்டில் ஒரு மிகச் சிறிய மேற்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் உருவாக்கப்பட்ட ‘லெட்ஸ் டு இட் வேர்ல்ட்’ (Let's Do It World) என்பது உலகளாவிய ஓர் அமைப்பாகும். உள்ளூர், தேசிய மற்றும் பிராந்திய தூய்மைப் பணி நிகழ்வுகளில் இணைந்துகொள்ள உலகெங்கிலும் உள்ள மக்களை இது அணிதிரட்டுகிறது. இந்த அமைப்பே 'World Cleanup Day' என இன்று கொண்டாடப்படும் உலக தூய்மை தினத்தின் நிறுவனரும் ஆகும்.

குப்பைக் கழிவுகள்
குப்பைக் கழிவுகள்

இதில் 180 நாடுகளின் நெட்வொர்க் ஊடாக 22 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் கலந்து கொள்கின்றனர். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) அங்கீகாரம் பெற்ற உறுப்பினராகவும் இந்த அமைப்பு உள்ளது. 2017 முதல் இந்த இயக்கம் அதன் அடையாளமாக கை சைகை மூலம் W அடையாளத்தை (மூன்று விரல்கள் மேலே) பயன்படுத்துகிறது. சூழல் மாசுக்கு எதிரான விழிப்புணர்வாக 2008-ம் ஆண்டு எஸ்டோனியாவில் 50,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் 10,000 டன் சட்டவிரோத கழிவுகளை வெறும் 5 மணி நேரத்தில் சுத்தம் செய்து சாதனை புரிந்தனர். இந்த வழிகாட்டலைத் தொடர்ந்து, பல நாடுகளும் தங்கள் சொந்த நாட்டை சுத்தம் செய்யும் நிகழ்வுகளை ஆரம்பித்தன. ‘one country, one-day’ எனும் முழுக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 அன்று தங்கள் நாடுகளை சுத்தப்படுத்த ஆரம்பித்தன.

அன்று போடப்பட்ட அந்த எளிய விதை இன்று மில்லியன் கணக்கான தொண்டர்கள் மற்றும் உத்வேகமான தலைவர்களுடன், சர்வதேச இயக்கமாக வளர்ந்து, உலகளாவிய ரீதியில் மக்களையும் குழுக்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாக மாறியுள்ளது. ஒரே நாள் ஒரே இலக்கை நோக்கி வேலை செய்யும் இந்த அற்புத தருணம் இன்று வரை உலகெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் அதற்கு மறுபுறம், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் தான் வாழும் பூமியை மேலும் மேலும் குப்பைக் காடாக்கும் செயலையும் மனிதன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.

தெருவில் இறங்கி நடந்து போகும்போது சராசரியாக எத்தனை விதமான குப்பைகளை மிதித்துக் கடந்து செல்கிறோம்? வெளியே சென்று வீட்டுக்கு திரும்பும்போது பையிலிருக்கும் பர்ஸ் பத்திரமாக திரும்புகிறதோ இல்லையோ, செருப்பில் ஒட்டிய bubble-gum அப்படியே கூட வந்திருக்கும்.
ஷூவில் ஒட்டிய bubble-gum
ஷூவில் ஒட்டிய bubble-gum

நம்மில் எத்தனை பேர் சாப்பிட்ட சாக்லேட் பேப்பரை ஐம்பது மீட்டர் தொலைவில் இருக்கும் குப்பை தொட்டியை தேடிச்சென்று வீசுகிறோம்? எத்தனை பேர் ஷாப்பிங் செல்லும்போது மறுசுழற்சி பையை எடுத்துப்போகிறோம்? பீச்சில் சுண்டல் சாப்பிட்ட பேப்பரை ஏப்பத்தோடு சேர்த்து அங்கேயே விட்டு விடாமல், எத்தனை பேர் கையோடு எடுத்துச் சென்று கழிவுத் தொட்டிக்குள் போடுகிறார்கள்?

பேஸ்புக்கில் என்ன ஸ்டேட்டஸ் போடுவது என தினமும் மூளையை போட்டு கசக்கும் அளவுக்கு என்றாவது பிளாஸ்டிக்கை ஒழிக்க நம்மாலான ஒரு பங்களிப்பை எப்படி செய்யலாம் என யோசித்திருப்போமா? வீதியில் தெரு நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு கொடுக்கும் எத்தனை பேர் அது சாப்பிட்டு முடித்ததும் அந்த பொது இடத்தை சுத்தப்படுத்தி விட்டுச் செல்கிறோம்? இதில் ஏதாவது ஒன்றுக்காவது இல்லை என்று பதில் வந்தால் கூட, வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு சமூக கட்டமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். தங்கள் வீட்டுக்கும், காருக்கும் வெளியே உள்ள உலகம் தனது தனிப்பட்ட ashtray அல்ல என்பதை மனிதன் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுற்றுச்சூழலில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை பலர் உணர்வது கூட இல்லை. ஏனெனில் மக்கள் தங்கள் தனிப்பட்ட செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் தீங்கு விளைவிக்காது என்று நம்புகிறார்கள்.

உலக அளவில் 4.5 டிரில்லியன் சிகரெட் துண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் கீழே வீசப்படுகின்றது. புகை பிடிப்பதே முதலில் தனக்கும், தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என இருக்கும் போது, பிடித்த சிகரெட் துண்டுகளை அப்படியே கீழே வீசி தான் வாழும் பூமிக்கும் சேர்த்து வெடி வைத்துவிடுகிறார்கள். சிகரெட் துண்டுகள் பசுமையான பூங்காக்கள், நடைபாதைகள், சாலையோரங்கள், கடற்கரைகள், நீர்வழிகள் என எல்லா இடங்களிலும், சிதறிக்கிடக்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்று சிகரெட் துண்டுகள் தான் பூமியில் அதிகளவு கொட்டப்படும் குப்பைகள் என்கிறது. சேகரிக்கப்படும் குப்பைகளில் சிகரெட்டுகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கின்றன என அந்த ஆய்வு கூறுகிறது. பொதுவாக புகைப்பிடிப்பவர்களில் 75 சதவிகிதம் பேர் எஞ்சிய சிகரெட் துண்டுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு செல்கிறார்கள். இந்த சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்ய பெருந்தொகை செலவாகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்கள் சிகரெட் குப்பைகளை சுத்தம் செய்வதற்காக $3 மில்லியன் முதல் $16 மில்லியன் அமெரிக்கா டாலர் வரை செலவிடுகின்றன.

சிகரெட்
சிகரெட்

எலிகளைக் கொல்லப் பயன்படும் ஆர்சனிக் மற்றும் ஈயம் போன்ற நச்சு இரசாயனங்களை இந்த சிகரெட் துண்டுகள் வெளியேற்றுகின்றன. இவை நிலத்தை மட்டுமல்ல, தண்ணீரையும் கூட மாசுபடுத்துகின்றன. சிகரெட் துண்டுகளை உண்ணும் விலங்குகளையும், மீன்களையும் இதன் நச்சு விஷமாக்கி விடுகின்றன. பொதுவாக சிகரெட் வடிகட்டி பார்ப்பதற்கு பருத்தி பஞ்சைப் போல் தோன்றினாலும் இதில் 98 சதவிகிதம் பிளாஸ்டிக் இழைகளால் ஆனவை. எனவே தெருவில் வீசப்படும் ஒவ்வொரு சிகரெட் துண்டுகளும் ஒன்றாக சேர்ந்து ஆண்டுக்கு 1.69 பில்லியன் பவுண்டுகள் நச்சு குப்பையாக வெளியேறி நம் உடலுக்குள் கலக்கின்றன.

நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்... `அனபெல் சேதுபதி' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

அதே போல கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து சூழலியலில் பெருகி வரும் இன்னொரு பேராபத்து கோவிட் குப்பைகள். முகக்கவசம், கையுறைகள் போன்றன பெருமளவில் தெருவில் கிடப்பதையும், புதரில் சிக்கித் தொங்குவதையும், நீர்வழியில் மிதப்பதையும் காண்கிறோம். இதனால் பல உயிரினங்கள் கடந்த இரு வருடங்களில் உயிரிழந்துள்ளன. புதிய சூழலியல் மாசாக உருவாகி வரும் கோவிட் குப்பைகள் அடுத்த பல தசாப்தங்களுக்கு நம் சூழலை சிதைக்கப்போகும் ஒரு மிகப்பெரிய சவால்.

நாம் அலட்சியமாக தூக்கி எறியும் ஒவ்வொரு சிறு குப்பையும், நாம் வாழும் சூழலை மட்டுமல்ல, இனி வரப்போகும் நம் தலைமுறையைக் கூட விட்டு வைக்கப் போவதில்லை. ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு அலட்சியமாக தூக்கி எரியும் குப்பைகள் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கிறது. சாலையோரங்களில், தெருக்களில், நீர் நிலைகளில், ரயில் நிலையங்களில், கோயில்களில் என தினம் தினம் குவியும் குப்பைகளில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் ஆறுகள், காடுகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்களில் சென்று கலக்கின்றன. இறுதியில் நீர்நிலைகள், நிலம், மண், காற்று என ஒட்டுமொத்த சூழலியலும் மாசுபடுகிறது. சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் 7 பில்லியன் டன் குப்பைகள் உலகின் பெருங்கடல்களுக்குள் நுழைகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்கா பிளாஸ்டிக்கள். மாசுபட்ட சூழல், நோய்கள் பரவுவதை அதிகரிக்கும். குப்பையில் உள்ள நச்சு இரசாயனங்கள் புற்றுநோய் உட்பட பல உயிர் கொல்லி நோய்களை உண்டாக்குகின்றன.

வீட்டு முன் ஓடும் கழிவு நீர்
வீட்டு முன் ஓடும் கழிவு நீர்
உ.பாண்டி

ஒவ்வொரு நாடும், அதன் சூழலும் பல்வேறு வழிகளில் தவறாக நிர்வகிக்கப்படும் கழிவுகளால் பாதிக்கப்படுகிறது. அது மனித உயிர்களைக் குடிக்கும் அளவுக்கு மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஏதோ இது போனால் இன்னொரு உலகம் வாழத் தயாராக உள்ளது போல நினைத்துக் கொண்டுதான் இந்த பூமியை மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த நிலம் நமக்கும், நம் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் கூட சொந்தமான ஒரு சொத்து. எனவே அதனைப் பாதுகாக்க வேண்டிய உரிமையும் கடமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. அதை செய்ய இவ்வாறான உலக தூய்மை நாள் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளுமே உலக தூய்மை நாள் தான்.

சுற்றுச்சூழல் ஹீரோவாக மாறுவோம்… Lets do it!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு