Published:Updated:

பருவநிலை மாற்றத்தை உடனே கவனிங்க... உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு அடித்த அபாயமணி #Davos2020

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் ( weForum )

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் 2019 வரையில் சராசரியாக 24 பில்லியன் மக்கள் உலகளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.

உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு (World Economic Forum) ஸ்விட்சர்லாந்து நாட்டின் தாவோஸில் நடைபெற்று வருகிறது. கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான அஜெண்டாவாக கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாகக் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் அபாயம் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகின் பழம்பெரும் அறிவியல் ஆய்வு நிறுவனமான யு.சி.எல் லான்செட் கமிஷன், "21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் இருக்கும்" எனப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எச்சரித்ததை இங்கே குறிப்பிடுவது அவசியம். காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாக 2008-ம் ஆண்டு முதல் 2019 வரையில் சராசரியாக 24 பில்லியன் மக்கள் உலகளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.

2018-ல் வெளியிடப்பட்ட உலகவங்கி அறிக்கை, கடல் மட்ட உயர்வு காரணமாகவும் விரிவடைந்து வரும் பாலைவனங்களாலும் 143 பில்லியன் காலநிலை அகதிகள் 2050-க்குள் சப் சஹாரன் ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து இடம்பெயரக்கூடும் எனக் கணித்திருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) மற்றும் நாசா இணைந்து வெளியிட்ட அறிக்கையில், 140 ஆண்டுகளில் கடந்த 10 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது என உறுதிசெய்துள்ளன. பொருளாதாரக் கூட்டமைப்பு அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு...

காலநிலை ஆபத்து
காலநிலை ஆபத்து

அண்டார்டிகா

அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் கடந்த 40 ஆண்டுகளில் கடல் வெப்பநிலை அதிகரித்ததன் காரணமாக வழக்கத்துக்கும் மாறாக வேகமாக உருகிவருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக மேற்கு காற்று அதிகமாக வீசுவதால் பனிக்கட்டிகளுக்கிடையில் வெப்பம் ஊடுருவுகிறது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேற்கு அண்டார்டிகா கண்டத்தில் பனி அதிகமாக உருகிவருகின்றன. பனிக்கட்டிகள் உருகும்போது கடல்நீர் மட்டம் அதிகரிக்கிறது. மேற்கு அண்டார்டிகாவிலுள்ள பனிப்பாறைகள் 17.32 அடிக்குக் கடல் மட்டத்தை உயர்த்தும் திறன் கொண்டது. தற்போது ஒவ்வோர் ஆண்டும் 159 பில்லியன் டன் பனிப்பாறைகளை இந்தப் பகுதி இழந்துவருகிறது.

அண்டார்டிகா
அண்டார்டிகா

ஆசியா

உலகளாவிய கார்பன் புராஜெக்ட் (Global Carbon project) 2017-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கார்பன் கழிவுகளை வெளியேற்றுவதில் முதல், மூன்று மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடான சீனா மட்டுமே உலக அளவில் கால்பங்கு கரிமத்தை வெளியேற்றுகிறது. இதனால் பருவநிலை மாற்றம் காரணாமாக அதிகம் பாதிக்கப்படும் கண்டமாக ஆசியா உள்ளது. இமயமலையில் பனிச்சரிவுகள், இந்தோனேசியாவில் நில நடுக்கம், நிலச்சரிவுகள், வெள்ள அபாயம், வறட்சி போன்ற அபாயங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக நிகழ்ந்துள்ளன. 2017-ம் ஆண்டு முதல் தெற்காசியப் பகுதிகளில் கடுமையான மழை மற்றும் புயல் காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா
சீனா

ஆப்பிரிக்கா

காலநிலை மாற்றத்தால் ஆப்பிரிக்காவில் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்பாறைகள் உருகுதல், ஆறுகளின் வறட்சி, நீர்நிலைகள் வற்றிப்போதல், மழைப்பொழிவதில் காலமாற்றம் போன்றவற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் நீர் மட்டம் குறையும்போது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. கானா முழுவதும் மின்சாரத்துக்காக வோல்டா நதியைச் சார்ந்துள்ளது. மாலி முழுவதும் உணவு, நீர் மற்றும் போக்குவரத்துக்கு நைஜர் நதியைச் சார்ந்துள்ளது. நைஜீரியாவிலுள்ள பாதிக்கும் அதிகமான மக்கள் சுத்தமான நீரைத் தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை.

ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா

ஐரோப்பா

2019-ம் ஆண்டு ஐரோப்பா கண்டத்தின் வெப்ப அலைகள் சராசரியைவிட 5 மடங்கு அதிகம் வீசியது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஐரோப்பாவின் பகுதிகளான ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, மற்றும் செக் குடியரசின் பல பகுதிகளில் கடுமையான வெப்பக்காற்று கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. பிரான்ஸில் மட்டும் 45.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பிரான்ஸ்
பிரான்ஸ்

ஆஸ்திரேலியா

உலகை உலுக்கும் அளவிலான காட்டுத்தீ செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் பரவியுள்ளது. அந்தத் தீவிபத்திலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் ஆலங்கட்டிமழை மற்றும் புயல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியுள்ளது. கோலா கரடிகள், கங்காரு போன்ற பல வனவிலங்குகள் இந்தத் தீக்கு பலியாகியுள்ளன. இது போதாது என 10,000 ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன அதற்குக் கூறப்படும் காரணம் அவை அதிகம் தண்ணீர் குடிப்பதால் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ
ஆஸ்திரேலியா காட்டுத்தீ

வட அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா

வட அமெரிக்காவிலுள்ள பனிப்பாறைகள் கடந்த 10 ஆண்டுகளை விட நான்கு மடங்கு வேகமாக உருகிவருகிறது. அலாஸ்கன் பனிப்பாறைகள் அதிகம் கவனம் பெற்றுள்ளது. அலாஸ்கா விரைவில் வெப்பமாகக்கூடிய பகுதியாக உள்ளதால் கடந்த 150 ஆண்டுகளைவிட 6 மடங்கு அதிகமாக உருகிவருகிறது. ஆசிய, அண்டார்டிக் கண்டங்களைப்போல இல்லாமல், இந்தப் பனிப்பாறைகள் சிறியதாக இருப்பதால் கடல்மட்ட உயர்வு நிகழ வாய்ப்பில்லாத போதிலும், மழைப்பொழிவு குறையும் காலத்தில் நீர்நிலைகள் வறண்டுபோக வாய்ப்புள்ளது.

கேரள வெள்ளம்
கேரள வெள்ளம்

இந்தியா இதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 850 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய வானிலை ஆய்வுநிலையத்தின் 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் மட்டும் 650 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவின் சராசரி வெப்பநிலையைவிட 0.36 டிகிரி அதிகமாகப் பதிவாகியுள்ளது. 50 வருட மழைப்பொழிவின் சராசரியே நீண்டகால சராசரியாக கருதப்பட்டுள்ளது.

1961-ம் ஆண்டு முதல் 2010 வரையிலான வருடாந்தர மழைப் பொழிவின் நீண்டகால சராசரி 109% ஆகும். ஆனால், 2019-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மழைப்பொழிவின் நீண்டகால சராசரி 110% ஆகவும், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின்போது 109% மழை பதிவாகியுள்ளது.

இந்திய கடல்களில் 2019-ம் ஆண்டு 8 சூறாவளிப் புயல்கள் உருவாகியுள்ளன. அரேபியக் கடலில் ஆண்டுக்கு ஒரு புயல் உருவாகும் நிலையில் கடந்த ஆண்டு 5 புயல்கள் உருவாகியுள்ளன. இந்த ஆண்டு அரேபியக் கடலில் மேலும் தீவிரமான சூறாவளிகள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு