Published:Updated:

சதுப்பு நிலக் காடுகள் இல்லாமல் போனால் என்னவாகும்? #WorldMangroveDay

இரா.மோகன்
உ.பாண்டி

கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல கடலோரப் பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள்.

காரங்காடு சதுப்பு நிலக் காடுகள்
காரங்காடு சதுப்பு நிலக் காடுகள் ( உ.பாண்டி )

உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக் காடுகள் பலவகைப்பட்ட உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வருகின்றன. அலையிடைக் காடுகள், கடலோர மரக்காடுகள், கடலில் நடக்கும் காடுகள், கடலின் வேர்கள், கடலின் மழைக்காடுகள், அலையாத்திக் காடுகள், தில்லைவனம், சுரப்புன்னைக் காடுகள், கண்டன் காடுகள் என பலவகை பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப்பெருக்கு போன்றவற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் தலையாய பணியைச் செய்துவருகின்றன. மனிதர்களுக்கு நேரும் இத்தகைய துயர்களைப் போக்கும் சதுப்பு நிலக் காடுகளுக்கான நாள் இன்று. 2015-ம் ஆண்டு முதல் ஜூலை 26-ம் தேதியை யுனெஸ்கோ அமைப்பு உலக சதுப்பு நிலக் காடுகள் தினமாக கடைப்பிடித்து வருகிறது. தனித்த சிறப்பு மிக்க சதுப்பு நிலக் காடுகளைப் பாதிப்பிலிருந்து மீட்கவும், அதன் நிலையான வளர்ச்சிக்கான தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலகம் தொடங்கி உள்ளூர் வரை உள்ள சதுப்பு நிலக் காடுகள் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார் ராமநாதபுரம் வனச்சரகத்தின் வனச்சரகர் சதீஷ்.

சதுப்பு நிலக்காடுகள்
சதுப்பு நிலக்காடுகள்
உ.பாண்டி

``கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளின் கடலோர பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள். பலவகைப் பெயர்களில் அழைக்கப்படும் இத்தகைய காடுகள் கடல் உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கின்றன. இக்காடுகள் இல்லையெனில் மீன்களே இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சதுப்பு நிலக் காடுகளில் புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பதுடன், எண்ணற்ற உயிரினங்களை வாழவும் வைக்கிறது. நம் நாட்டில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் மட்டும் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் 112 நாடுகளில் சதுப்பு நிலக் காடுகள் சுமார் 18 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை தெற்காசிய நாடுகளில் உள்ளன. இந்தோனேஷியாவில் மட்டும் 23% உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவன காடுகள் வங்க தேசம் வரை நீண்டு உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடாக உள்ளது. இங்குதான் உலகில் எங்கும் காணப்படாத புலியினங்கள் ( Royal Bengal Tiger) காணப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் அதிகளவாக 2081 ச.கி.மீ பரப்பளவிலும், கேரளத்தில் மிக குறைவாக ஒரு ச.கி.மீ பரப்பளவுக்கு உட்பட்டும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. தமிழகத்தில் சுமார் 23 ச.கி.மீ பரப்பளவில் இக்காடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4482 ச.கி.மீ பரப்பில் சதுப்பு நிலக் காடுகள் பரந்து விரிந்துள்ளன.

சதுப்பு நில காடுகளில் வாழும் பறவைகள்
சதுப்பு நில காடுகளில் வாழும் பறவைகள்
உ.பாண்டி

பொதுவாக கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அதிகம் காணப்படும் இக்காடுகள், கடல்களில் கலக்கும் பெரும் நதிகளின் உதவியால் அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர்கின்றன. மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகள், ஒடிசாவில் பித்தர்கனிகா, ஆந்திராவில் கோரிங்கா, தமிழ்நாட்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை மற்றும் மன்னார் வளைகுடா, கேரளாவில் வேம்பநாடு மற்றும் கொச்சின் உவர் நீர் நிலைகளில் வளர்ந்து காணப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 556 ஹெக்டேர் பரப்பளவில் சுரப்புன்னை மரங்கள் உள்ளன. காரங்காடு கிராமம் பாக் நீரிணை பகுதியில் கலக்கும் கோட்டக்கரையாற்றின் உதவியால் இங்கு சுரப்புன்னை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதனால் இங்கு பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இது திகழ்கிறது. குறிப்பாக கடற்புற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றை உண்டு வாழும் அரிய வகை உயிரினமான கடல்பசு இப்பகுதியில் காணப்படுகின்றன. இக்காடுகளை மையமாக கொண்டு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. படகு சவாரி, கயாகிங், நீரில் மூழ்கி பார்த்தல், கண்காணிப்புக் கோபுரம் போன்ற வசதிகள் வனத்துறை உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுடன் சதுப்பு நிலக் காடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சதுப்பு நிலக் காடுகளுக்கான தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கிராம மக்களிடையே விழிப்புணர்வு முகாம்களையும் வனத்துறையினர் நடத்தி வருகின்றனர்.

சதுப்பு நில காடுகளில் இறை தேடும் பறவைகள்
சதுப்பு நில காடுகளில் இறை தேடும் பறவைகள்
உ.பாண்டி

சதுப்பு நிலக் காடுகள் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களிருந்து கடலோரக் கிராமங்களையும் அங்கு வசிக்கும் மக்களையும் காக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. இக்காடுகளில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, ஆளி போன்றவை சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. இத்தகைய உயிரினங்களின் குஞ்சுகள் உயிர் வாழ உணவும் உறைவிடமும் தந்து பெருமளவு உதவுகின்றன. இக்காடுகள் இல்லையெனில் இறால் வளம் முற்றிலுமாக அழிந்து போகும். உலகில் சுமார் 60 % மக்கள் கடலோரப் பகுதிகளில் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் கிழக்கு ஆசியாவில் மட்டும் 70% மக்கள் தங்கள் உணவுத் தேவைகளுக்காகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார தேவைகளுக்காகவும் கடலோர நீர் நிலைகளை நம்பியுள்ளனர். மேலும், பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு மிகச் சிறந்த சரணாலயமாகவும் விளங்குகின்றன. பருவக் காலங்களின்போது பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்துவிட்டு தனது தாய் நாட்டுக்கு திரும்புகின்றன.

இவை தவிர இக்காடுகள் மிகச் சிறந்த வடிக்கட்டியாகவும் செயல்படுகின்றன. கரையோரப் பகுதிகளுக்கு வந்து சேரும் மக்கும் மற்றும் மக்காத பொருள்களை தனது சிறப்பு தகவமைப்பின் மூலம் வடிகட்டி மண்ணில் புதையுறச் செய்கின்றன. இவற்றுடன் கரியமில வாயுவை உற்பத்தி செய்வதில் கடலில் வாழும் தாவர மிதவைகளைவிட கூடுதலாக பங்காற்றுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளில் காணப்படும் `டானின்' எனும் வேதிப்பொருள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கனிகளை சிலர் உணவாகவும் பயன்படுத்துகின்றனர்.

பறவைகள் கணக்கெடுப்பு
பறவைகள் கணக்கெடுப்பு
உ.பாண்டி

பூமிக்கு கீழ் செல்லக்கூடிய கேபிள் வேர்களைப் பெற்றுள்ள சதுப்பு நிலக் காடுகள் தாங்கு வேரின் மூலம் தாய் மரத்தினை தாங்கிப் பிடிக்கும் தன்மை கொண்டிருப்பதால் மண் அரிப்பு ஏற்படாமலும், புயல் மற்றும் வெள்ளம் அபாயத்தின்போது கடல் நீர் ஊருக்குள் புகாதவாறும் தடுக்கின்றன. புயல் காற்றின் வேகமும் இவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதிகபட்ச பயன்பாட்டினாலும் சதுப்பு நிலக் காடுகள் நாளுக்கு நாள் அழிந்துவருகின்றன. உப்புத் தண்ணீரில் வளரும் இக்காடுகளின் இளம் பருவத்தின்போது சிறிது நன்னீரும் தேவையுள்ளது. மழைக் காலங்களில் அதிகபட்ச நன்னீர் கிடைக்கும்போது பெரும்பாலான மரங்கள் தனது விதைகளை முதிர்ச்சி அடையச் செய்கின்றன. இவை கிடைக்காதபோது அதிக உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்ப்பகுதிகளில் உள்ள மரங்கள் வளர முடியாமல் மடிந்து போகும் நிலையும் உள்ளது. மேலும், முகத்துவாரம் தடைப்படுதல், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், கால்நடை மேய்ச்சல், இறால் பண்ணை அமைத்தல், துறைமுகங்கள் உருவாக்குதல், மாசு படுதல் போன்றவற்றினாலும் இவை அழிவுக்குள்ளாகி வருகின்றன. இது போன்ற அழிவுகளில் இருந்து சதுப்பு நிலக் காடுகளை காக்கவே `உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

வனச்சரகர் சதீஷ்
வனச்சரகர் சதீஷ்
உ.பாண்டி

மனித மற்றும் வன உயிரின சமுதாயத்தைக் காக்க உதவும் சதுப்பு நிலக் காடுகளைக் காக்கும் பணியில் நாமும் கைகோப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.